CWG 2018: மாநிலவாரி பகிர்வில் இந்திய அளவில் தமிழகத்துக்கு இரண்டாமிடம்

  • 17 ஏப்ரல் 2018
காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் தமிழ்நாட்டின் நிலை என்ன? படத்தின் காப்புரிமை Ryan Pierse

21-வது காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊக்க தொகை அறிவித்துள்ள நிலையில், இந்தியளவில் பதக்கப்பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கராரா மைதானத்தில் காமன்வெல்த் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற்றன.

71 காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் 2018ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றனர்.

கடந்த வாரம் 15ஆம் தேதி போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், பதக்கப்பட்டியலில் 198 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 136 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.

இந்தியா பெற்றுள்ள 66 பதக்கங்களில் 22 பதக்கங்களுடன் ஹரியானா மாநிலம் முதல் இடத்திலும், 11 பதக்கங்களுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும், 8 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஸ்குவாஷ் வீரர்களும், மேசைப்பந்து வீரர்களும் காமன்வெல்த் போட்டியில் அபாரமாக செயல்பட்டுள்ளனர்.

ஸ்குவாஷ் போட்டியில் ஜொலித்த தமிழகம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் சவுரவ் கோஷல் மற்றும் தீபிகா இணை

ஸ்குவாஷ் போட்டியில் தமிழக அணி தங்கள் திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தி இருந்தனர். ஜோஸ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல் கார்த்திக் ஆகியோர் தமிழகத்திற்கு பதக்கங்களை பெற்று தந்துள்ளனர். ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு மற்றும் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டிலும் தீபிகா பல்லிகல் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார்.

மேசைப்பந்தில் அசத்திய ஆடவர்கள்

படத்தின் காப்புரிமை Mark Metcalfe
Image caption மணிகா பத்ராவுடன் தமிழக வீரர் சத்தியன் ஞானசேகரன்

சென்னையை சேர்ந்த மேசைப்பந்து வீரர்களான சரத் கமல், சத்தியன் காமன்வெல்த் போட்டியில் போட்டி போட்டுக்கொண்டு பதக்கங்களை குவித்துள்ளனர். சரத் கமல் மற்றும் சத்தியன் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு ஆளுக்கு தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளனர்.

பளு தூக்கும் போட்டியில் சாதித்த சதீஷ்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சதீஷ் தூக்கிய மொத்த எடை 317 கிலோ

காமன்வெல்த் போட்டியில் பதக்கப்பட்டியலில் தமிழகத்தின் கணக்கை முதலில் துவக்கி வைத்தவர் வேலூரை சேர்ந்த பளு தூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம். 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் போட்டியிட்ட சதீஷ், முதல் சுற்றில் 144 கிலோ, அடுத்த சுற்றில் 173 கிலோ என மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி தங்கத்தை கைப்பற்றினார் சதீஷ்.

பாகிஸ்தானை முந்திய தமிழகம்

படத்தின் காப்புரிமை CWG

காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தான் பெற்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 5. அதில், ஒரு தங்கம், நான்கு வெண்கலமும் அடக்கம். காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் 24வது இடத்தில் பாகிஸ்தானும், 2 பதக்கங்களுடன் 30வது இடத்தில் வங்கதேசமும், 6 பதக்கங்களுடன் இலங்கை 31வது இடத்திலும் இடம்பிடித்துள்ளது.

ஊக்கத்தொகை எவ்வளவு?

காமன்வெல்த் வெற்றியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.

  • ஜோஸ்னா சின்னப்பா - ஸ்குவாஷ் - 30 லட்சம் ரூபாய்
  • சவுரவ் கோஷல் - ஸ்குவாஷ் - 30 லட்சம் ரூபாய்
  • தீபிகா பல்லிகல் - ஸ்குவாஷ் - 60 லட்சம் ரூபாய்
  • சரத் கமல் - மேசைப்பந்து - 50 லட்சம் ரூபாய்
  • சத்தியன் - மேசைப்பந்து - 50 லட்சம் ரூபாய்
  • சதீஷ் குமார் - பளு தூக்குதல் - 50 லட்சம் ரூபாய்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்