இரண்டு ஐபிஎல் கோப்பை வென்ற கம்பீர், டெல்லி அணி 'கேப்டன்' பதவியை உதறியது ஏன்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தலைமையேற்று இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வெல்ல உதவிய கவுதம் கம்பீர், புதன்கிழமை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Matthew Lewis

தனது விலகல் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கம்பீர்,

'' டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகிய செய்தி உண்மைதான். இது என்னுடைய தனிப்பட்ட முடிவே. அணி நிர்வாகமோ அல்லது பயிற்சியாளரோ காரணமல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். நான் டெல்லி அணியை முன்னின்று நடத்துபவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக கடைசி வரை நிற்கும் மனிதனாக இருப்பேன். அணியை விட தனிப்பட்ட நபர்கள் பெரியவர்கள் அல்ல'' என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை GAMBIR/ DELHI DAREDEVILS /FB

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடத் துவங்கிய கவுதம் கம்பீர் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஏழு ஆண்டுகள் விளையாடியுள்ளார். இந்த வருடம் ஐபிஎல் ஏலம் மூலம் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார்.

ஐபிஎல்லின் பதினோராவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி ஐந்தில் தோல்வியும், ஒரு வெற்றியும் வென்றுள்ளது. இதனால், இரண்டு புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது இந்த அணி.

டெல்லி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய கம்பீர், இந்த சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடி 88 பந்துகளில் 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பதினோராவது ஐபிஎல்-லில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 42 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார் கேப்டன் கம்பீர். அடுத்தடுத்த ஐந்து போட்டிகளில் கம்பீர் சிறப்பாக ரன்கள் சேர்க்கவில்லை. அதே சமயம் அணியும் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்த சீஸனில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியை மட்டுமே டெல்லி டேர்டெவில்ஸால் வெல்ல முடிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐந்து தோல்வி ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 144 என்ற வெற்றி இலக்கைத் துரத்தி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கம்பீர் தலைமையிலான டெல்லி அணி. இந்த சீசனில் பிளேஆஃபுக்கு தகுதிபெற டெல்லி அணி இனிவரும் போட்டிகளில் தொடர்ச்சியாக நிறைய வெற்றிகளை பெற வேண்டியுள்ள நிலையில் கேப்டன் கம்பீர் ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.

கம்பீரின் விலகலை அடுத்து 23 வயது வலது கை பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Gallo Images

தற்போதுள்ள எட்டு அணிகளில் இதுவரை ஐபிஎல்லில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ். கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே டெல்லி அணி அரை இறுதி மற்றும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது

கம்பீரின் முடிவு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் விஜய் லோக்பாலி, '' இது மிகவும் யோசித்து எடுக்கப்பட்ட முடிவாகத் தெரிகிறது. ஏனெனில் கம்பீர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பாக பங்களிக்கவில்லை. இது அவருக்கு அழுத்தத்தை தந்துள்ளதாகவும் அணியின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது அவருக்கு கடினமான சூழ்நிலை. அவர் ஏற்கனவே ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்துள்ளார். தற்போது தானும் டெல்லி அணியின் தற்போதைய நிலைக்கு காரணம் என்பதை உணர்ந்ததால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவு அவர் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த உதவும். இது அவரது அணிக்கும் அவருக்கும் நல்லது. அணியில் இன்னொருவரை தலைமையேற்க அவர் அனுமதித்து, பேட்ஸ்மேனாக மட்டும் பங்களிப்பைத் தரவுள்ளார்'' என்றார்.

படத்தின் காப்புரிமை VIJAY LOKPALLY
Image caption விஜய் லோக்பாலி

கம்பீரின் இந்த முடிவு அவரது பேட்டிங் சிறப்பாக இல்லாததால் எடுக்கப்பட்டதா அல்லது அணியின் ஆட்டத்திறன் போட்டிகளில் வெல்லுமளவுக்கு அமையாததால் எடுக்கப்பட்டதா? எனக் கேட்டபோது

'' இது இரண்டின் கலவை. டெல்லி அணி பேட்டிங் சரியாக செய்யவில்லை, பௌலிங் மற்றும் ஃபீல்டிங்கும் சிறப்பாக இல்லை. இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ஆனால் டெல்லிக்கு அணி வீரர்கள் சேர்ப்பு சிறப்பாக அமையாதது தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். கம்பீர் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவரது நற்பெயருக்கு அவரால் நியாயம் செய்ய முடியும் என்றே கருதுகிறேன்'' என்று தெரிவித்தார் லோக்பாலி

படத்தின் காப்புரிமை Scott Heavey

இரண்டு கோப்பைகளை வென்ற கேப்டன்

  • ஐபிஎல்லில் மூன்று கோப்பைகளை வென்ற அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. அவருக்கு அடுத்தபடியாக கவுதம் கம்பீர் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளனர்.
  • ஐபிஎல்லின் முதல் மூன்று சீசன்களில் கொல்கத்தா அணி தொடர்ச்சியாக லீக் சுற்றோடு வெளியேறியது. 2011 ஆண்டு ஏலத்தில் கம்பீரை எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை அணித்தலைவராக நியமித்தது. அவரது தலைமையில் ஏழு ஐபிஎல் தொடர்களில் ஐந்து முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இருமுறை இறுதிச் சுற்றுக்கு வந்த நைட் ரைடர்ஸ் இருமுறையும் கோப்பையை வென்றது.
  • 2012 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், 2014 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும் இறுதிப் போட்டிகளில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி.
  • 2012 தொடரில் ஆறு அரை சதங்கள் அடித்து கொல்கத்தா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார் கம்பீர். நூறு போட்டிகளுக்கு மேல் ஐபிஎல் தொடரில் கேப்டனாக பணியாற்றிய இரண்டு வீரர்களில் கம்பீரும் ஒருவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி மற்றொரு வீரராவார்.
  • ஐபிஎல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 36 வயது இடது கை பேட்ஸ்மேன் கம்பீர் நான்காவது இடத்தில் உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை அதிக அரைசதம் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கவுதம் கம்பீர் மற்றும் வார்னர் ஆகியோர் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்