ஐபிஎல் 2018 பிளே ஆஃப்: சிஎஸ்கே உள்ளே; ஆர் சி பி வெளியே - காரணம் என்ன?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
"இந்திய அணியில் ஜொலிக்கும் கோலி, ஆர்சிபியில் சொதப்புவது ஏன்?"

பட மூலாதாரம், AFP

ஞாயிற்றுக்கிழமையன்று மும்பை அணிக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வென்றது . இதன் மூலம் பிளே ஆஃ ப் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்புள்ள அணிகளாக கருதப்பட்ட நடப்பு சாம்பியனான மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இந்தாண்டுக்கான தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

ஐபிஎல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத வகையில் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்லின் 11வது தொடர் கிட்டதட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்று கூறலாம். நேற்று மும்பை-டெல்லி மற்றும் சென்னை-பஞ்சாப் அணிகளுக்கிடையே நடந்த போட்டியோடு இந்தாண்டுக்கான லீக் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளது.

இதுவரையிலான முடிவுகளை பார்க்கும்போது, எட்டு அணிகளில் குறிப்பாக மூன்று அணிகளின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

அதாவது, இரண்டாண்டு தடைக்காலத்திற்கு பிறகு மீண்டும் ஐபிஎல்லில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடும், இந்திய அணியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் விராட் கோலி, பலம் நிறைந்த வீரர்களை கொண்டிருந்தாலும் ஆர்சிபி இந்தாண்டும் சோபிக்காதது ஏன் மற்றும் ஐபிஎல் தொடங்கிய வருடம் முதல் இதுவரை சொதப்பலான ஆட்டத்தை டெல்லி அணி வெளிப்படுத்துவதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகள் எழுகின்றன.

பட மூலாதாரம், AFP

ஜொலிக்கும் கோலி; சொதப்பும் ஆர்சிபி

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, அணியை சிறப்பாக வழிநடத்துவதுடன் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

ஆனால், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஆர்சிபியின் கேப்டனாக வலம் வரும் கோலியின் தலைமையில் அந்த அணி தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறவில்லை.

பட மூலாதாரம், AFP

"ஆர்சிபி அணி விராட் கோலி மற்றும் ஏ.பி. டிவில்லியர்ஸை மட்டுமே பெரிதும் சார்ந்திருப்பதே அந்த அணியில் நிலவும் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது. பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் வீரர்களை சரிசமமாக தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும். மேலும், முந்தைய ஆண்டுகளில் அணியில் சிறப்பாக செயல்பட்ட கே.எல்.ராகுல் போன்ற வீரர்களை ஏலத்தில் மற்ற அணிகளை வாங்க விட்டதும் மற்றொரு காரணமாக இருக்கலாம்" என்று பிபிசி தமிழிடம் பேசிய விளையாட்டுத்துறை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அயாஸ் மேமன் கூறுகிறார்.

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

அயாஸ் மேமன்

"என்னைப் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சுதான் ஆர்.சி.பிக்கு பிரச்சனையாக உள்ளது. அதாவது, அதிகமான ரன்களை குவிக்கும் நோக்கத்துடனே அந்த அணியின் வீரர்கள் தேர்வு இருப்பதால், எதிரணி ரன்களை குவிப்பதை தடுக்க முடியாமல் தடுமாறும் நிலையில் ஆர்சிபி உள்ளது. வெகுகாலமாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள ஸ்பின்னர் மற்றும் கோலி, டீவில்லியர்ஸை தவிர்த்து இரண்டாம் கட்ட வீரர்களை உருவாக்குவதே இதற்கு தீர்வாக அமையும்" என்று பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சடகோபன் ரமேஷ் கூறினார்.

சென்னை அணி சிறப்பாக செயல்படுவதற்கான காரணம் என்ன?

பட மூலாதாரம், TWITTER

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பங்கேற்றுள்ள ஒன்பது ஐபிஎல் போட்டிகளிலுமே பிளே ஆஃப் சுற்றை கடந்துள்ளது. அதில், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும், நான்கு முறை இறுதிப்போட்டி வரையும், மீதமுள்ள மூன்று முறை ப்ளே ஆஃப் சுற்றையும் கடந்து சென்றுள்ளது.

மேலும், 2008ஆம் ஆண்டிலிருந்து சிறந்த அணிகளுக்கான பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது.

"சென்னை அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு தோனி மட்டுந்தான் ஒரே காரணம் என்று கூற முடியாவிட்டாலும், அவர் மிகப் பெரிய பங்கை வகிக்கிறார் என்பதில் மாற்று கருத்தில்லை. ஒரு அணியின் வெற்றிக்கு வீரர்களின் தேர்வும், வீரர்கள் - கேப்டன் - பயிற்சியாளர் இடையேயான புரிதலும் மிகவும் அவசியம். அதை சென்னை அணி சிறப்பாக கையாண்டு வருவதே அவர்களின் தொடர் வெற்றிக்கு காரணம்" என்று அயாஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு,

சடகோபன் ரமேஷ்

2008ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை தோனியின் தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 157 போட்டிகளில் 92 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதாவது, ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக செயல்பட்ட கேப்டன்களில் 58.97 வெற்றி சதவீதத்துடன் தோனி முதலிடத்தில் உள்ளார்.

"ஒரு அணியின் வெற்றிக்கு ஒருவர் மட்டும் எல்லா நேரங்களிலும் காரணமாக இருக்க முடியாது. ஆனால், அணியிலுள்ள வீரர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கு கேப்டன் என்ற முறையில் தோனி தனது பங்கை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். மேலும், ஒரு அணி தோற்கும் சூழ்நிலையில் இருக்கும்போது அதன் வீரர்களின் மனநிலை கேப்டனின் செயற்பாட்டை பொறுத்தே அமையும். அந்த வகையில் சென்னை அணியின் வெற்றிக்கு தோனியின் அணுகுமுறையும், வீரர்களின் தேர்வும் முக்கிய காரணம்" என்று சடகோபன் கூறினார்.

டெல்லி அணிக்கு என்னதான் பிரச்சனை?

பட மூலாதாரம், TWITTER

11 வருடங்களாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காத அணியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி கருதப்படுகிறது. அதாவது, எட்டு முறை லீக் சுற்றுடனும், இரண்டு முறை அரையிறுதி ஆட்டத்துடனும், ஒருமுறை ப்ளே ஆஃப் சுற்றுடனும் நடையை கட்டியது டெல்லி அணி.

இந்தாண்டு 14 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி, ஐந்து போட்டிகளில் வெற்றியும், ஒன்பது போட்டிகளில் தோல்வியடைந்து 10 புள்ளிகளுடன், எட்டு அணிகளை கொண்ட புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய அயாஸ், "டெல்லி அணியின் செயல்பாடு தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாறும் கேப்டன்கள், தொடர்ந்து நீடிக்காத வீரர்கள், வீரர்களை சரிசமமான தேர்வு செய்யாதிருப்பது போன்றவை டெல்லி அணியின் தோல்விக்கான முக்கிய காரணமாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

"கிரிக்கெட்டின் அனைத்து கூறுகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான அணியை தெரிவு செய்வது மிகவும் முக்கியமானது. குறிப்பாக சென்னை என்றால் தோனி, பெங்களூரு என்றால் கோலி என்று குறிப்பிடும் வகையில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் டெல்லி அணியில் இல்லை. நிலையான கேப்டனும், சரி விகிதத்தில் அமைந்த பேட்ஸ்மன், வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர் மற்றும் பீல்டர்கள் அமையாதவரை டெல்லி அணி முன்னேறுவது சாத்தியமில்லாத ஒன்று" என்று சடகோபன் ரமேஷ் கூறியுள்ளார்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: