மகளிர் ஐபிஎல்: 'பெண் கிரிக்கெட்டர்கள் சாதிக்கும் நேரம் இது'

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
பெண்களுக்கான ஐபிஎல் போட்டி

பட மூலாதாரம், BCCI

11-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான தகுதி சுற்று போட்டி (Qualifier 1) இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள சூழலில், அந்த போட்டிக்கு முன்னர் ஐபிஎல் டிரெயில் பிளேஸர்ஸ், ஐபிஎல் சூப்பர்நோவாஸ் என இரண்டு மகளிர் அணிகள் விளையாடும் பெண்களுக்கான ஐபிஎல் காட்சிப் போட்டி அந்த மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான ஐபிஎல் காட்சிப் போட்டி நடைபெறுவது குறித்து, பெங்களூருவைச் சேர்ந்த 64 வயதாகும் முன்னாள் மகளிர் கிரிக்கெட் கேப்டன் சாந்தா ரங்கசாமி மற்றும் 30க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்ற சென்னையை சேர்ந்த திருஷ்காமினி ஆகியோர் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

பெண் போட்டியாளார்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது

கடந்த ஆண்டு கர்நாடகாவில் பெண்களுக்கான டி20 போட்டியை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் நடத்துவதற்கான முன்னெடுப்புகளில் முக்கிய பங்கு வகித்த சாந்தா, ''கிரிக்கெட் விளையாட்டுக்கு 'ஜென்டில்மென்ஸ் கேம்'(Gentleman's game) என்று பெயர் உண்டு. ஆனால், தற்போது அந்த பெயரை மாற்றவேண்டும் என்ற காலம் பிறந்துவிட்டது. பெண்களும் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள். சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் திறமையான பெண் போட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நிகழ்வாக இந்த ஐபிஎஸ் போட்டி இருக்கும்,'' என்கிறார் உற்சாகமாக.

பட மூலாதாரம், BCCI

கடந்த ஆண்டு மகளிருக்கான உலகக்கோப்பை போட்டியில் இறுதிச்சுற்று வரை இந்திய மகளிர் அணி விளையாடியதால் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெண் போட்டியாளர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. இந்திய அணி என்கிற அடையாளம் மற்றும் கர்நாடகாவில் நடத்தப்பட்ட கேபிஎல் போட்டிகளால் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் சாந்தா.

''ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 11 ஆண்டுகள் கழித்துத்தான் பெண் போட்டியாளர்களுக்கான ஐபிஎல் நடத்தப்படுகிறது என்பது ஒருபக்கம் வருத்தம் தந்தாலும், குறைந்தபட்சம் இப்போதாவது நடத்தப்படுகிறதே என்ற மகிழ்ச்சியும் ஏற்படுகிறது,'' என்கிறார் சாந்தா.

மும்பையிலுள்ள வாங்கடே மைதானத்தில் பெண் போட்டியாளர்களுக்காக நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 போட்டியாளர்கள் உள்ளிட்ட 26 பேர் கலந்துகொள்வார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் டிரையல்பிளேசர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தானா மற்றும் ஐபிஎல் சூப்பர்நோவாஸ் அணிக்கு ஹர்மன்பரீத் கவுர் தலைமை வகிக்கிறார்கள்.

பட மூலாதாரம், BCCI

ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த மித்தாலி ராஜ், இந்திய அணியின் பலம்பொருந்திய போட்டியாளர்களான ஜுலன் கோஸ்வாமி மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இந்த போட்டியில் பங்குபெறுகின்றனர்.

''இரண்டு அணிகளிலும் வெளிநாட்டுப் பெண் போட்டியாளர்கள்அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் பிரத்யேக போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும்போது, இந்தியாவில் பெண் கிரிக்கெட் போட்டியாளர்களுக்கான தேவை ஏற்படும். இது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதை ஊக்கப்படுத்தும்,'' என்கிறார் சாந்தா.

இந்தியா மட்டுமல்ல உலகளவில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் கற்பிதம் இருப்பதாக கூறும் சாந்தா, ''பெண்கள் கிரிக்கெட் போட்டியும் சுவாரசியமான விளையாட்டுதான் என்ற உண்மையை புரியவைக்க வேண்டியுள்ளது. பெண்கள் விளையாடும் நேரத்தையும், ஆண்களுக்கான போட்டிகளைப் போலவே மாலை, இரவு ஆட்டங்களாக மாற்றவேண்டும். பெண் போட்டியாளர்களுக்கும், ஆண்களைப் போலவே சமமான சம்பளம் கொடுக்கப்படவேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அளிக்கப்படும் சம்பளத்தில் பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. இதை மாற்ற முன்வரவேண்டும்,'' என்று கூறினார்.

பட மூலாதாரம், BCCI

சிறந்த போட்டியாளர்கள் கிடைப்பார்கள்

ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதன் மூலம், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்குபெற இந்திய அணிக்கு சிறந்த போட்டியாளர்கள் கிடைப்பார்கள் என்கிறார் திருஷ்காமினி.

''காட்சிப் போட்டியாக இருந்தாலும், இந்த போட்டி ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி. கிரிக்கெட் விளையாட்டில் திறமையான பெண்களை வெளிக்கொண்டுவரும் முன்முயற்சிதான் இது. உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இறுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி விளையாடியதால், இந்திய பெண் போட்டியாளர்கள் கவனம் பெற்றார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது பெண்களுக்கான கிரிக்கெட் சங்கங்கள் ஆர்வத்துடன் உள்ளனர். மகளிர் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்த கிடைத்த பெரிய வாய்ப்பு ஐபிஎல். இதுபோன்ற போட்டிகள் மூலம் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் போட்டியாளர்கள் கிடைப்பார்கள்,'' என்றார்.

சமவாய்ப்பு வேண்டும்

கிரிக்கெட் விளையாட்டில் சமவாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்று பேசிய அவர், ''ஆண்களுக்கான ஐபிஎல் போட்டியில் பெருமளவு அறியப்படாத எளிமையான பின்னணியில் இருந்துவந்த விளையாட்டு வீரர்கள் தற்போது கிரிக்கெட் விளையாட்டை தங்களது முழுநேர வேலையாக எடுத்துக்கொண்டுள்ளனர்.

இதே வாய்ப்பு பெண் போட்டியாளர்களுக்கும் கிடைக்கவேண்டும். ஆண், பெண் என ஒப்பிடுவதை விட்டுவிட்டு, விளையாட்டுத் துறையில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படவேண்டும். உண்மையான ஆர்வம் கொண்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அது அவர்களுக்கு மட்டுமல்ல, அந்த அணிக்கும் பெருமை,'' என்று குறிப்பிட்டார் திருஷ்காமினி.

மகளிர் ஐபிஎல் தொடர்ந்து நடந்தால், பல பெண்களுக்கு விளையாட்டுத் துறையில், குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை தொழில்முறையாக விளையாடினால் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை பிறக்கும் என்றும் திருஷ்காமினி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: