சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது எப்படி?

ஐபிஎல் 2018 பிளே ஆஃபில் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Gallo Images

இன்று நடந்த போட்டியில் சென்னை அணி 140 ரன்கள் எனும் இலக்கை துரத்தி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்று போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

ஷிகர் தவான் ஆட்டத்தின் முதல் பந்திலேயே தீபக் சாஹர் பந்துவீச்சில் வீழ்ந்தார். கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடத் துவங்கினாலும் 15 பந்துகளில் 4 பௌண்டரிகளோடு 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

ஷகிப் அல் ஹசன் மற்றும் யூசுப் பதான் ஆகியோரின் விக்கெட்டை பிராவோ வீழ்த்தினார். 15 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 88 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆட்டத்தின் கடைசி கட்ட ஓவர்களில் ஹைதராபாத் வீரர் கார்லஸ் பிராத்வைட் நான்கு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி விளாசி 29 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.

ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா நான்கு ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

சென்னை அணி சேஸிங்கில் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஹைதராபாத் அணியை போலவே சென்னை அணிக்கும் ரன் கணக்கை துவக்குவதற்கு முன்னரே முதல் விக்கெட் விழுந்தது.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

வாட்சன் ஐந்து பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 22 ரன்களில் வீழ்ந்தார். லீக் சுற்றில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய அம்பட்டி ராயுடு கோல்டன் டக் ஆனார்.

ரஷீத்கான் பந்துவீச்சில் தோனி போல்டாகி வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆட்டத்தின் கடைசி கட்ட ஓவர்களில் ஷர்துல் தாகூர் மற்றும் ஃபாப் டு பிளசிஸ் இருவரும் அதிரடியாக விளையாட 19.1 ஓவரிலேயே இலக்கை கடந்து போட்டியை வென்றது சென்னை அணி.

ஷர்துல் தாகூர் 5 பந்துகளில் 15 ரன்கள் குவித்தார். துவக்க வீரராக களமிறங்கிய ஃபாப் டு பிளசிஸ் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று பௌலர்களை திறம்பட சமாளித்து 42 பந்துகளில் ஐந்து பௌண்டரி நான்கு சிக்ஸர்கள் உட்பட 67 ரன்கள் எடுத்து சென்னையின் வெற்றிக்கு வித்திட்டார்.

இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றதன் மூலம் வரும் ஞாயிற்று கிழமை நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நுழைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்