சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் சாதித்தும் சறுக்கியதும்

சிஎஸ்கே மற்றும் தோனி

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR

இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஆறு இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது.

ஐபிஎல் 2018 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் ஏழாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. இதுவரை ஐபிஎல்லில் 9 முறை விளையாடியுள்ள சிஎஸ்கே இரண்டு முறை மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.

ஐபிஎல்லில் ஒரு முறை கூட லீக் சுற்றோடு வெளியேறியதில்லை மேலும் ஏழு இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.

பட மூலாதாரம், SESHADRI SUKUMAR

இதுவரை நடந்த இறுதிப் போட்டிகளில் சிஎஸ்கேயின் ஆட்டம் எப்படி?

2008 - கடைசி பந்தில் கை நழுவிய கோப்பை

முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

பஞ்சாப் அணியை அரையிறுதியில் வீழ்த்தி ராஜஸ்தான் அணியை இறுதிப்போட்டியில் சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்தது. சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

சேஸிங்கில் ராஜஸ்தான் 41/3 என தடுமாறியது. ஆனால் யூசூப் பதான் 39 பந்துகளில் மூன்று பௌண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் உட்பட 56 ரன்கள் குவித்து ராஜஸ்தான் வெற்றிக்கு அடிகோலினார்.

இறுதி ஓவரில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் பாலாஜி வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

பட மூலாதாரம், MANJUNATH KIRAN

2010 - முதல் கோப்பையை சுவைத்த சென்னை

மூன்றாவது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று முடிவில் நான்கு அணிகள் 14 புள்ளிகளை எடுத்திருந்தன. ஆனால் பெங்களூரு அணியும், சென்னை அணியும் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறின.

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன.

சென்னை அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எளிதாக வென்று இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்தது.

முதலில் ஆடிய சென்னை அணி 169 ரன்களை மும்பைக்கு இலக்கு வைத்தது. சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 3 பௌண்டரி 3 சிக்ஸர்கள் உதவியுடன் 57 ரன்களை குவித்தார்.

மும்பை அணியின் தொடக்க வீரர் தவான் எட்டு பந்துகளை சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். டெண்டுல்கர் 45 பந்துகளில் 7 பௌண்டரியுடன் 48 ரன்கள் விளாசி ஜகதி பந்தில் விக்கெட்டை இழந்தார். அதிரடியாக ஆடிய அம்பட்டி ராயுடு 14 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

17 ஓவர்களில் 114/6 என மும்பை தத்தளித்த நிலையில் பொல்லார்டு மட்டையைச் சுழற்றி மளமளவென ரன்கள் குவித்தார். 10 பந்துகளில் மூன்று பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் விளாசி 27 ரன்கள் எடுத்தநிலையில் மோர்கல் பந்தில் அவுட் ஆனார்.

மும்பை அணியால் 149 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகன் விருதை வென்றார். சச்சின் டெண்டுல்கர் தொடர் நாயகன் விருதை ஜெயித்தார்.

''நாங்கள் தொடரின் மத்தியின் கடுமையான அழுத்தத்தைச் சந்தித்தோம். ஆனால் கோப்பையை தூக்கியது மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது'' என சிஎஸ்கே அணித்தலைவர் தோனி போட்டி முடிந்தபிறகு கூறினார்.

பட மூலாதாரம், MANJUNATH KIRAN

2011 - கோப்பையை தக்க வைத்த மஞ்சள் ஜெர்சி

லீக் சுற்றின் முடிவில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

பிளே ஆஃ ப் சுற்றில் சென்னை அணி பெங்களூரை வென்று நேரடியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது. சென்னை எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மீண்டும் பெங்களூரு அணியைச் சந்தித்தது

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முரளி விஜய் மற்றும் மைக் ஹஸ்ஸியின் விளாசலில் 205 ரன்கள் குவித்தது. முரளி விஜய் 52 பந்தில் 95 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரு அணியில் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் சொந்த மண்ணில் 58 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியுடன் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது தோனி அணி. இறுதிப்போட்டியில் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN

2012- இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் ஹாட்ரிக்

லீக் சுற்றில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் தலா 17 புள்ளிகளை எடுத்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் நான்காவது அணியாக சென்னை பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது.

மும்பை, டெல்லி, கொல்கத்தா அணிகள் பிளே ஆஃபுக்கு முன்னேறிய மற்ற மூன்று அணிகளாகும்.

பிளே ஆஃப் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வெளியேற்றியது சிஎஸ்கே.

பிளே ஆஃப் குவாலிஃபயர் -2 சுற்றில் டெல்லியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தெம்பாக இறுதிப் போட்டியில் கொல்கத்தாவைச் சந்தித்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுக்கு 191 ரன்களை இலக்கு வைத்தது தோனி அணி.

சென்னை அணி தரப்பில் ரெய்னா 38 பந்துகளில் மூன்று பௌண்டரி ஐந்து சிக்ஸர்கள் உதவியுடன் 73 ரன்கள் குவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் 2 ரன்களில் அவுட் ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான பிஸ்லா 48 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். காலிஸ் 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.

இறுதி ஓவரில் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலையில் பிராவோ பந்து வீச மனோஜ் திவாரி இரண்டு பௌண்டரிகளை அடித்து மீதம் இரு பந்துகள் இருக்கும் நிலையிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் கோப்பையை கைப்பற்ற உதவினார்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR

2013 - மும்பை இந்தியன்ஸிடம் தோற்ற சென்னை

புள்ளிப்பட்டியலில் லீக் சுற்றின் முடிவில் சென்னை முதலிடம் பிடித்திருந்தது. மும்பை , ராஜஸ்தான், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தன.

முதல் குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் மும்பை அணி இராண்டாவது குவாலிஃபயர் சுற்றில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, மீண்டும் சிஎஸ்கே அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தது.

2010 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையிடம் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி, 2013-ல் அதற்கு பதிலடி தந்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி பொல்லார்டின் '32 பந்துகளில் 60 ரன்கள்' ஆட்டத்தால் 148 ரன்களை குவித்தது.

சென்னை அணியில் தோனியைத் தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் 20 ஓவர்களில் சென்னை அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் தோனி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

மலிங்கா, மிச்செல் ஜான்சன், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இப்போட்டியில் தோற்றதன் மூலம் தொடர்ந்து இரு இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த அணியானது சென்னை.

பட மூலாதாரம், MANAN VATSYAYANA

2015 - மீண்டும் மும்பை அணியிடம் தோற்ற சென்னை

இம்முறையும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தோடு குவாலிஃபயர் சுற்றில் நுழைந்தது சென்னை அணி. மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்போடு பிளே ஆஃபில் விளையாடின.

முதல் குவாலி ஃபயர் போட்டியில் மும்பை அணியிடம் 25 வித்தியாசத்தில் தோற்றது சென்னை. இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இறுதிக்குள் நுழைந்தது.

பொல்லார்டு, ரோஹித் ஷர்மா, லெண்டில் சிம்மன்ஸ் ஆகியோரின் அசத்தல் பேட்டிங்கால் சென்னை அணிக்கு 203 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது.

ஸ்மித் தவிர சென்னை அணியில் யாரும் சோபிக்கவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே சூப்பர் கிங்ஸால் எடுக்க முடிந்தது. மும்பை அணியின் தரப்பில் மெக்லெனகன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது முறையாக மும்பை அணியிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை தவறவிட்டது சென்னை அணி.

இதுவரை விளையாடிய ஆறு இறுதிப் போட்டிகளில் சென்னை அணி நான்கு முறை தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் அதிக முறை இறுதிப் போட்டியில் தோற்ற அணியாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்நிலையில் தான் ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள போட்டியில் தனது ஏழாவது இறுதிப் போட்டியில் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை இந்த சீசனில் மூன்று முறை தோற்கடித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதற்கு ஹைதராபாத் பதிலடி கொடுக்குமா அல்லது சென்னை அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்பது வரும் ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்குள் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: