வந்தார்கள்.... வென்றார்கள்!: மீண்டு வந்த சிஎஸ்கே அணியின் வெற்றி கதை

கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதியன்று தொடங்கிய 11-ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கே என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சிஎஸ்கே அணி விளையாடும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு, போட்டியின் 19.5 ஓவரில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றது.

முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட தடை விதிக்கப்பட்டதால், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர்களில் சென்னை அணி பங்குபெறவில்லை.

அந்த அணியின் வீரர்கள் பிரிக்கப்பட்டு வேறு பல அணிகளில் சேர்க்கப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

அக்காலகட்டத்தில் சிஎஸ்கே அணித்தலைவர் தோனி, ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடினார். மற்ற வீரர்களும் வேறு அணிகளில் விளையாடினர்.

2010 மற்றும் 2011 ஆண்டுகளில் கோப்பையை வென்ற இனி சிஎஸ்கே அணி விளையாட முடியாதா என்ற ஏக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வந்தது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 10 ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

வயதான வீரர்கள் எனும் விமர்சனம்

2018 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 30 வயதை தாண்டிய பல வீரர்களை எடுத்தது. சமூக வலைதளம் உள்ளிட்டவற்றில் சென்னை அணி குறித்து விமர்சனங்கள் கிளம்பின.

சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளமிங் '' எந்த வீரர் நன்றாக விளையாடுவார்; எப்படிச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பதுதான் முக்கியம். அனுபவம் வாய்ந்த வீரர்கள் மட்டுமே தொடர் முழுமைக்கும் உதவுவார்கள். ஆகவே இந்த வருடத்தைப் பொறுத்தவரையில் அனுபவம் வாய்ந்த வீரர்களாகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதை கருதியே ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்தோம்'' என முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அணியில் நிறைந்திருக்கிறார்கள் என்ற விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.

படத்தின் காப்புரிமை SESHADRI SUKUMAR

முதல் போட்டியில் சென்னை அணியின் வெற்றி அவ்வணியின் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைத்தது. கடந்த ஆண்டின் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய அப்போட்டியில் சென்னை அணிக்கு வைக்கப்பட்ட இலக்கு 166 ரன்கள்.

15-வது ஓவர் முடிவில் 105 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் பிராவோ தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடினார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசினார். முப்பது பந்துகளில் அவர் எடுத்த 68 ரன்கள் சென்னை அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புக்கான கதவை ஆட்டத்தின் கடைசி நேரத்தில் திறந்துவிட்டது.

முன்னதாக இப்போட்டியில் காயமடைந்து ஓய்வெடுக்கச் சென்றிருந்த கேதர் ஜாதவ் கடைசி கட்டத்தில் மீண்டும் களமிறங்கி அபாரமாக ஒரு பௌண்டரி மற்றும் சிக்ஸரை விளாசி சென்னை அணி மீண்டும் வெற்றியுடன் சீசனைத் துவக்க உதவினார்.

படத்தின் காப்புரிமை CSK/Twitter

சொந்த மண்ணில் முதல் வெற்றி

இரண்டாவது போட்டியில் சென்னை அணி அதன் சொந்த மண்ணில் விளையாடியது. மிகவும் பழைமை வாய்ந்த சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது.

ஆனால் காவிரி விவகாரம் தொடர்பாக எழுந்த போராட்டங்களில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக்கூடாது என சில அமைப்புகள் மற்றும் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. சென்னையில் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் உயர் பாதுகாப்போடு தனது இரண்டாவது போட்டியில் விளையாடியது சென்னை அணி.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

கொல்கத்தாவுக்கு எதிரான அப்போட்டியில் சென்னை அணிக்கு 203 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. இப்போட்டியில் சிஎஸ்கேவுக்கு கடைசி மூன்று ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலையில் மீண்டும் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக விளையாடி வென்றது . கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு பந்து மீதம் வைத்து சொந்த மண்ணில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் விளையாடிய முதல் போட்டியில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதல் தோல்வி

பஞ்சாப் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சென்னை கடைசி மூன்று ஓவர்களில் 55 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. சிஎஸ்கே அணித்தலைவர் தோனி சிக்சரும் பௌண்டரியுமாக விளாசினாலும் அவரது அணியால் மூன்று ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது சென்னை. தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் விளாசியிருந்தார். சென்னை அணிக்கு 2018 ஐபிஎல் சீசனில் முதல் தோல்வி இது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

'தடை விலகியது; ஆனால், சென்னையில் விளையாடமுடியவில்லை'

2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் சென்னை அணிக்கு, ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் பிளே-ஆஃப் சுற்றில் சென்னை அணி இல்லாமல் இருந்தது.

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு, களத்துக்கு திரும்பிய சிஎஸ்கே அணிக்கு தொடர்ச்சியாக சொந்த மண்ணில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வீரியமடைந்த நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டன.

சொந்த மண்ணில் ரசிகர்கள் புடை சூழ ஆரவாரத்துக்கு மத்தியில் விளையாட முடியாத நிலையில் புனேவுக்கு சென்னையில் இருந்து பிரத்யேக ரயில் மூலம் ரசிகர்களை அழைத்துச் சென்றது சிஎஸ்கே நிர்வாகம்.

'' நாங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் களத்தின் பண்புகளை கொண்டே அணியைத் தேர்வு செய்தோம். ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக புனேவில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சொந்த மண் சாதகத்தை பெற வீரர்கள் கூடுதலாக கடினமாக உழைக்க வேண்டியுள்ளது '' என்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர்.

புனே மண்ணில் தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது தோனி படை. இப்போட்டியில் ஷேன் வாட்சன் அடித்த சதத்தால் மிக எளிமையாக வென்றது சிஎஸ்கே.

படத்தின் காப்புரிமை Gallo Images

பிளே ஆஃபில் 'தனி ஒருவன்' டு பிளசிஸ்

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சென்னை அணிக்கு பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை. ஆனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தது. முதலிடத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இருந்தது.

பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத்துடனான போட்டியில் சென்னை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற 140 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. இப்போட்டியில் 97 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. வலுவான ஹைதராபாத் பௌலிங்கை எதிர்கொண்டு 18 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க வேண்டுமென்றநிலையில் டு பிளசிஸ் அதிரடியில் 13 பந்திலேயே 43 ரன்கள் விளாசி சென்னை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

படத்தின் காப்புரிமை CSK/Twitter

இறுதிப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை இந்த சீசனில் நான்காவது முறையாக வென்று கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி. இறுதிப்போட்டியில் வாட்சன் விளாசிய பௌண்டரி மற்றும் சிக்ஸர்களில் 19-வது ஓவரிலேயே சிஎஸ்கேவுக்கு கோப்பை சாத்தியமானது.

இந்த சீசனில் சென்னை அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருந்தனர். பேட்டிங்கில் வாட்சன் கைவிட்டால் ராயுடு; ராயுடு அவுட் ஆனால் ரெய்னா; ரெய்னா சொதப்பினால் தோனி; தோனியும் கைவிட்டால் ட்வைன் பிராவோ என பல வீரர்களும் சில போட்டிகளில் சேஸிங்கில் அணியை காப்பாற்றியுள்ளனர்.

பிளே ஆஃப் போட்டியில் ஃபாப் டு பிளாசிஸ் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

''வயதைப் பற்றி நாம் அதிகமாக பேசிவிட்டோம் ஆனால் விஷயம் என்னவெனில் உடல்திறன்தான் முக்கியம்'' என கோப்பையை வென்ற பிறகு தோனி கூறினார்.

'' ஒவ்வொரு சீஸனும் எங்களுக்கு வித்தியாசமாக இருந்துள்ளது; மற்ற அணிகளில் அடிக்கடி வீரர்களை மாற்றினார்கள் நாங்கள் எங்களுடைய முக்கிய வீரர்களை தக்கவைத்தோம். தோனி என்னை நன்றாக கையாண்டார். அணியின் வெற்றிக்கு அணியில் உள்ளவர்களை எப்படி கையாளுகிறோம் என்பது முக்கியம். களத்திற்குச் சென்று விட்டால் அந்தவேலையை தோனி சிறப்பாகச் செய்வார். எனக்கும் அவருக்கும் நம்பிக்கையும் நல்ல உறவும் இருந்தது'' என்றார் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளமிங்.

படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN

சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் பிபிசி தமிழிடம் பேசினார்.

'' சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் மற்ற எந்த அணிகளையும் விட ஆட்டத்தில் மிகவும் அழுத்தம் தரும் சூழ்நிலைகளை மிகவும் நன்றாக கையாளுவார்கள். அணிச்சேர்க்கையை ஒவ்வொரு சீசனுக்கும் அவர்கள் பெரிய அளவில் மாற்றுவதில்லை. இதனால் முக்கிய வீரர்களுக்கு இடையே பந்தம் சிறப்பாக உள்ளது. மேலும் அணியில் பேட்டிங் பௌலிங் இரண்டுக்கும் முக்கியத்துவம் தரும்விதமாக வீரர்கள் சேர்க்கையை கடைபிடிக்கிறார்கள். சென்னை அணியின் வெற்றி சூட்சமங்களுள் இதுவும் ஒன்று'' என்றார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption சடகோபன் ரமேஷ்

ஐபிஎல் இறுதியாட்டம் பற்றிய பேசிய சடகோபன் ரமேஷ் '' ரஷீத்கானை எப்படி கையாள வேண்டும் என்பதில் சென்னை வீரர்கள் மிகத் தெளிவாக இருந்தார்கள். எந்தக்கட்டத்திலும் அவரது பந்தை விளாச முயற்சிக்கவில்லை. பெரும்பாலும் அவரது ஓவரில் விக்கெட் விழாமல் குறிப்பிடத்தக்க ரன்கள் சேர்த்தால்போதும் எனும் மனநிலையில் இருந்தனர். ரஷீத்கானுக்கு பதிலாக மற்ற பௌலர்களின் ஓவர்களை விளாசித் தள்ளினார்கள். இவை சென்னை அணி ஏற்கனவே தெளிவாக திட்டமிட்டு மிகச்சிறப்பாக செயல்படுத்தியாகத் தெரிகிறது. தெளிவான திட்டமிடலும் செயல்படுத்துதலும் சென்னையின் முக்கிய பலம்'' என்றார்.

படத்தின் காப்புரிமை -

''மேலும், சென்னை அணியின் தொடர் வெற்றிக்கு 'தோனி காரணி' என்பது முக்கியமானது. வீரர்களை கையாளுதல் மற்றும் போட்டியின் எந்த கட்டத்திலும் அவரது அணுகுமுறை சிறப்பாக இருந்துள்ளது. ஒரு அணியின் கேப்டனின் உடல்மொழி உடைமாற்றும் அறையில் வீரர்களின் மனநிலையில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தும்.

தோனியின் உடல்மொழி மற்றும் அவரது அனுபவம் சிஎஸ்கேவுக்கு கைகொடுக்கிறது. 2017 ஜனவரியில் இருந்து அவர் பெரிய தொடர்கள் எதிலும் அணித்தலைவராக பணிபுரியவில்லை. தனது கேப்டன்சி திறனை மீண்டும் உலகுக்கு உணர்த்த ஒரு வாய்ப்பாகவும் இந்த சீசன் தோனிக்கு அமைந்தது. மேலும் தோனியின் பேட்டிங் இந்த சீசனில் அமர்க்களமாக இருந்தது. அவரது அதிரடி பாணி பழைய நினைவுகளை கிளறியது. பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டிலும் தோனி ஜொலித்தார்'' எனக் கூறினார் சடகோபன் ரமேஷ்.

சென்னை அணி ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக 2010, 2011 ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. இதுவரை ஒன்பது சீசன்களில் பங்கேற்றுள்ள சிஎஸ்கே ஏழு முறை இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்று மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்