இந்திய அணியில் ஐபிஎல் நட்சத்திரங்களில் யாருக்கு வாய்ப்பு?

ரிஷப் பந்த் படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN
Image caption ரிஷப் பந்த்

ஆரம்ப காலங்களில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு ரஞ்சி, துலீப், இரானி கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது படிக்கல்லாக கருதப்பட்டது.

2008-ஆம் ஆண்டுக்கு பிறகு, ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வாளர்களின் பார்வை ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்களிக்கும் வீரர்கள் மீதும் விழுந்தது.

டெஸ்ட் போட்டி தேர்வுக்கு ஐபிஎல் போட்டிகள் பங்களிப்புக்கும் தொடர்பில்லை என்றபோதிலும், டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்திய அணி தேர்வு செய்யப்படும்போது அண்மைய ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் விவாதப் பொருளாக இருந்து வருகின்றனர்.

ஜஸ்பிரித் பூம்ரா, சஞ்சு சாம்சன், சாஹல் போன்ற பல வீரர்கள், ஏற்கனவே ரஞ்சி போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், ஐபிஎல் தொடர்களில் இவர்களின் சிறப்பான பங்களிப்பு இந்திய அணியில் இந்த வீரர்கள் காலூன்ற வெகுவாக உதவியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், ஞாயிற்றுகிழமை முடிவடைந்த 11-ஆவது ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் சமூகவலைத்தளங்களில் விவாதங்களும், எதிர்பார்ப்புகளும் உலவுகின்றன.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பல இளம் வீரர்களில், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சித்தார்த் கவுல், சுப்மன் கில், பிரித்வி ஷா ஆகிய 5 வீரர்கள் கூடுதல் கவனம் பெற்றுள்ளார்கள்.

இவர்களில் ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் ஏற்கனவே இந்திய அணியில் இடம்பெற்று சில போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் தொடர் பங்களிப்பு இவர்கள் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ், கிருஷ்ணப்பா மற்றும் மாயாங் மார்க்கண்டேய போன்ற வீரர்களின் பங்களிப்பும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. .

படத்தின் காப்புரிமை Getty Images

இளம் வீரர்கள் சாதித்தது என்ன?

2018 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி 684 ரன்கள் குவித்துள்ள ரிஷப் பந்த், இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 512 ரன்கள் குவித்து பலராலும் கவனிக்கப்படும் வீரராக உருவெடுத்துள்ளார்.

அதே வேளையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தலைமையேற்று சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் நடப்பு தொடரில் 411 ரன்கள் எடுத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சித்தார்த் கவுல், 2018 ஐபிஎல் தொடரில் 21 விக்கெட்டுகள் எடுத்து தனி முத்திரை பதித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Scott Barbour
Image caption சஞ்சு சாம்சன்

இந்திய அணியில் இடம்பெற ஐபிஎல் உதவுமா?

இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற ஐபிஎல் தொடர் உதவுமா என்பது குறித்து பிபிசி தமிழிடம் மூத்த பத்திரிகையாளர் விஜய் லோக்பாலி பேசுகையில் ''2018 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பலரும் ஏற்கனவே 19 வயதுக்குப்பட்ட தொடர் அல்லது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்கள் தான். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சித்தார்த் கவுல் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது ஒரு சிறப்பான விஷயம்'' என்று கூறினார்.

''ஐபிஎல் போட்டிகள் அதிக அளவில் மக்கள் நிரம்பிய மைதானங்களில் விளையாடப்படுவதால், இளம் வீரர்களுக்கு போட்டியில் பரபரப்பான தருணங்களை எவ்வாறு கையாள்வது என்பதை கற்றுக் கொடுக்கலாம். ஆனால், ஐபிஎல் தொடர்கள் வீரர்களின் திறமையை சோதிக்க உதவும் களமாகவோ, அளவுகோலாகவோ எடுத்துக் கொள்ளமுடியாது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

'' டி 20 போட்டிகளுக்கான இந்திய அணி செய்யப்படும்போது, நிச்சயம் ஐபிஎல் தொடர் பங்களிப்பு அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படலாம். அந்த வகையில் ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் போன்றோர் இந்திய அணியில் இடம்பெறவும், தக்கவைக்கவும் உதவலாம்'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

2018 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரகளில் இந்திய அணியில் இடம்பெற யாருக்கு வாய்ப்புண்டு என்பது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீராம் ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் உரையாடினார்.

Image caption ஸ்ரீராம் ஸ்ரீதரன்

''ரிஷப் பந்த், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஜயர் போன்றோர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிவுள்ளனர். இந்திய இளைஞர்கள் பலர் சிறப்பாக விளையாடி வருகின்றார்கள். எதிர்காலத்திலும் இவர்கள் எவ்வாறு விளையாடுவர் என்பதை பொறுத்து இவர்கள் இந்திய அணியில் இடம்பெறவும், மேன்மேலும் முன்னேறவும் வாய்ப்புண்டு'' என்று ஸ்ரீராம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இந்த இளம் வீரர்களில் இந்திய அணியில் இடம்பெற தகுதியான வீரர் யார் என்பது குறித்தும், இவர்களின் தாக்கம் எந்தளவு இருக்கும் என்பது குறித்தும் கிரிக்கெட் வீரரும், விமர்சகருமான ரகுராமன் பிபிசி தமிழிடம் பேசுகையில் ''இந்திய அணியில் இடம்பெற நிச்சயமாக ரிஷப் பந்த்துக்கு தகுதி உண்டு. கேன் வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக அவர்தான் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக அளவில் ரன்கள் எடுத்துள்ளார்'' என்று கூறினார்.

''ஏற்கனவே இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடிய போதிலும், அவரது தொடர்ச்சியான பங்களிப்புகள் அவரை முன்னிறுத்தும். 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பைக்கு பிறகு தோனி ஓய்வுபெறும் சூழல் உருவானால், அவருக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் உருவெடுக்கக்கூடும்'' என்று தெரிவித்தார்.

Image caption கிரிக்கெட் வீரர் ரகுராமன்

''அதே வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்களும் எதிர்காலத்தில் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாட வாய்ப்பு உண்டு. மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய மாயாங் மார்க்கண்டேய தனது கணிக்க இயலாத பந்துவீச்சின் மூலம் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான வீரராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்'' என்று ரகுராமன் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்