கிரிக்கெட்: வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்த ஆஃப்கானிஸ்தான் - 5 தகவல்கள்

வங்கதேச அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்று அசத்தியுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி.

படத்தின் காப்புரிமை KAMAL SHARMA

இந்திய மண்ணில் ஆஃப்கானிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. ஜூன் 3,5,7 தேதிகளில் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூன் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் விளையாடின.

1. முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வங்கதேசத்துக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. முதல் பந்திலேயே முஜீப் பந்தில் தமீம் இக்பால் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நபி தனது பங்குக்கு ஷகிப் அல் ஹசனை நான்காவது ஓவரில் வீழ்த்தினார்.

இரண்டு முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தாலும் முஷ்பிகுர் ரஹீம் உட்பட மற்ற பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தினார்கள். பத்து ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேசம்.

11-வது ஓவரை வீசிய ரஷீத்கான் தனது முதல் இரு பந்துகளில் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் சபீர் ரஹ்மானை வீழ்த்த 79/5 என தடுமாறியது வங்கதேசம்.

19 ஓவர்கள் முடிவில் 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தனது கடைசி மூன்று ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கின் போது இறுதி 18 பந்துகளில் 52 ரன்கள் குவித்தது.

2. வங்கதேச அணி இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால் ஆப்கானிஸ்தானை 135 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்ற நிலை. முதல் டி20 போட்டியில் கோல்டன் டக் ஆன தமீம் இக்பால்தான் இம்முறை வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் (48 பந்துகளில் 43 ரன்கள்) எடுத்தவராவார். இப்போட்டியில் ரஷீத்கான் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 19-வது ஓவரில் கடந்தது ஆஃப்கானிஸ்தான். சமியுல்லா ஷென்வாரி 41 பந்துகளில் 2 பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் விளாசி 49 ரன்களும் முகமது நபி 15 பந்துகளில் 3 பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 31 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்.

படத்தின் காப்புரிமை Martin Hunter

3. ஆஃப்கானிஸ்தான் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற நிலையில் மூன்றாவது போட்டி நேற்று இரவு நடந்தது. முதலில் பேட்டிங் பிடித்த ஆஃப்கானிஸ்தான் அணி 145 ரன்கள் குவித்தது.

பவர்பிளே ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்து 35 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது வங்கதேசம். கடைசி மூன்று ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஷகிப் அல் ஹசன் அணிக்கு.

ஆஃப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீத் கானுக்கு 18-வது ஓவரை வீச வாய்ப்பு தந்தார். அந்த ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே வங்கதேச அணிக்கு கிடைத்தது. மகமதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் என இரு பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்த நிலையில் 19- வது ஓவரை எதிர்கொண்டது வங்கதேசம்.

ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த கரீம் ஜானட் 19-வது ஓவரை வீசினார். முதல் ஐந்து பந்துகளில் தொடர்ச்சியாக ஐந்து பௌண்டரிகள் வீசினார் ரஹீம். அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் வந்தது.

கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் எடுத்தால் வங்கதேசம் வெற்றிபெற முடியும் எனும் நிலையில் ரஷீத் கான் பந்து வீச வந்தார். அபாரமாக வீசிய ரஷீத் முஷ்பிகுர் ரஹீமை முதல் பந்திலேயே வீழ்த்தியது மட்டுமின்றி ஐந்து பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தில் பௌண்டரி அல்லது சிக்ஸர் அடிக்க வேண்டும் எனும் நிலையில் வங்கதேச பேட்ஸ்மேன் ஹக் பந்தை சிக்சருக்கு விளாசும் பொருட்டு சுழற்றி அடித்தார். ஆனால் அபாரமான வகையில் ஆஃப்கான்ஸ்தான் ஃபீல்டர் ஒருவர் பந்து எல்லைக்கோட்டுக்குச் செல்வதை தடுத்து விக்கெட் கீப்பரின் பந்தை வீச, மஹமுதுல்லா ரன் அவுட் ஆனார்.

இரண்டு ரன்கள் மட்டுமே வங்கதேச அணியால் எடுக்கமுடிந்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

படத்தின் காப்புரிமை Mark Brake

4. மூன்று போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு வித்திட்ட முக்கியமான வீரர் ரஷீத் கான். மூன்று போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்திய தொடர் நாயகன் விருதை வென்றார்.

'' நான் கூக்ளி மற்றும் லெக் பிரேக் பந்துகளை வீச முயற்சித்தேன். மேலும் மகிழ்ச்சியுடன் போட்டியை எதிர்கொண்டேன். ஒவ்வொரு பந்தையும் ரசித்து வீசுகிறேன். கடந்த ஒரு வருடத்தில் நான் உடலையே கட்டுக்கோப்பாக வைக்க முயற்சித்தேன் மேலும் உடல்திறனையும் அதிகரித்து வந்தேன். இது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. களத்தில் இப்போது பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் அணிக்கு பங்களிப்பைச் செய்ய முடிகிறது'' என்கிறார் ரஷீத்.

5. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து பெற்றுள்ள அணியான வங்கதேசத்தை இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாத ஆப்கானிஸ்தான் டி20 தொடரை வென்று ஒயிட் வாஷ் செய்த்துள்ளது. தொடர் வெற்றிகளின் வாயிலாக இலங்கை மற்றும் வங்கதேசத்தை முந்தி ஐசிசி டி20 தரவரிசையில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :