2018 உலகக்கோப்பை கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் சௌதியை வீழ்த்தி ரஷ்யா வெற்றி

ரஷ்யாவில் தொடங்கிய 2018 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடங்கிய முதல் போட்டியில் செளதி அரேபியாவை 5-0 என்று ரஷ்யா வென்றுள்ளது.

தொடங்குகிறது கால்பந்து திருவிழா

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள லூஸ்நிக்கி மைதானத்தில் நடக்கும் கோலாகல தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டியில் ரஷ்யாவுடன் செளதி அரேபியா மோதியது.

இதில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடு தொடக்க ஆட்டத்தில் பெறும் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

இதற்கு முன்பு, 1934இல் போட்டி நடத்திய இத்தாலி அமெரிக்க கால்பந்து அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.

இன்று தொடங்கும் கால்பந்து திருவிழாவில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. 32 நாட்களுக்கு மேல் நடக்கவுள்ள இந்த தொடரில், 64 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டிகள் ரஷ்யாவில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கவுள்ளன.

உலகம் முழுவதும் ஏராளமான விளையாட்டு ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி குறித்த சில சுவாரஸ்யங்களும், சர்ச்சைகளும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

  • 4 முறை உலக கோப்பையை வென்ற இத்தாலி மற்றும் 3 முறை உலக கோப்பை இறுதியாட்டத்தில் விளையாடிய நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளும் நடப்பு உலக கோப்பையில் விளையாட தகுதி பெறாதது கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், பலமுறை உலக கோப்பை போட்டிகளில் விளையாடிய அமெரிக்கா மற்றும் சிலி ஆகிய நாடுகளும் நடப்பு உலக கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை.
  • இதுவரை தென் மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் நடந்த உலக கோப்பைகளில் எந்த ஐரோப்பிய அணியும் வென்றதில்லை என்ற நிலையை கடந்த உலக கோப்பையில் (2014) ஜெர்மனி மாற்றிக்காட்டியது. அரையிறுதியில் பிரேசிலை 7-1 என அதிர்ச்சி தோல்வியடைய செய்த ஜெர்மனி, இறுதியாட்டத்தில் அர்ஜென்டினாவை 1-0 என வென்று கோப்பையை கைப்பற்றியது.
  • முதல்முறையாக உலக கோப்பையில் விளையாட சின்னஞ்சிறு நாடான பனாமாவின் அணி தகுதிபெற்ற போதிலும், தகுதிசுற்று போட்டிகளில் கோஸ்டாரிகா அணியை 2-1 என அந்த அணி வென்ற ஆட்டத்தின் முடிவு குறித்து எழுந்த விமர்சனங்கள் அந்த அணியின் தேர்வை சர்ச்சையாக்கியது.
  • மிகவும் குறைந்த அளவு மக்கள்தொகை கொண்ட ஐஸ்லாந்து முதல்முறையாக இப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இது உலக அளவில் எண்ணற்ற கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
  • ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்கான தமது முயற்சியில், தகுதிச் சுற்றுப் போட்டிகளின் தொடக்கப் போட்டியில் இந்தியா நேபாளத்தைத் தோற்கடித்தது. ஆனால், பிறகு தங்கள் குழுவில் நடந்தப் போட்டிகளில் குவாம் உடனான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடிந்தது. ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் இந்தியா 97வது இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :