அகதி முகாம் முதல் உலகின் 'நம்பர் ஒன்' பௌலர் ஆனது வரை - ரஷீத் கான்

போரால் சிதிலமடைந்த நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஒரு 19 வயது பௌலர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னணி பேட்ஸ்மேன்களை கலக்கமடையச் செய்வார் என்று சில காலம் முன்பு வரை யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், அவர்தான் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தற்போது உலகிலேயே முதல் இடத்தில் உள்ளார். அவர்தான், சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் அபிமானத்தையும் சம்பாதித்த ரஷீத் கான்.

வெறும் 44 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 100 விக்கெட்டுகளை வீழ்த்திய மிகவும் இளம் வீரர்.

ஆப்கானிஸ்தான் போரால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து சில காலம் அகதிகள் முகாமில் வாழ்ந்துள்ளது. பின்னர் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பினார்கள் ரஷீத்தின் குடும்பத்தினர்.

பிபிசி செய்தியாளர் சூர்யான்ஷி பாண்டேவுடன் ரஷீத் கான் நடத்திய உரையாடலில் இருந்து..

தொடக்கம் எப்படி இருந்தது?

பத்து வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பின்னர் சில காலம் அகதிகள் முகாமில் இருந்தபோதும் அதே நிலைதான். என்னை வெளியில் விளையாட விடமாட்டார்கள். எனவே பல நேரங்களில் நான்கு சுவர்களுக்குள்ளேயே விளையாடினேன்.

படத்தின் காப்புரிமை Getty Images

என் பெற்றோர் என்னை படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறினார்கள். நானும் அதையே செய்தேன். பள்ளி முடிந்து வந்தபின் என் சகோதரர்களுடன் விளையாடத் தொடங்கினேன். விளையாட விளையாட கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

உள்ளூர் போட்டிகளில் விளையாடியபின் 19 வயதுக்கும் குறைவானவர்கள் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் எனது பயிற்சியாளர் தவ்லத் அஹ்மதஜாயை சந்தித்தேன். "என்னுடன் மூன்று மாதங்களை செலவிட்டால் நீ ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரனாவாய்," என்று அவர் சொன்னது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

டி வில்லியர்ஸ், விராத் கோலி, தோனி..

டி வில்லியர்ஸ், விராத் கோலி, தோனி ஆகிய மூவரையும் ஆட்டமிழகச் செய்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. அவர்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். எனக்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதைவிடவும் சிறப்பாகப் பந்து வீசுவதே இலக்கு.

கோலி மற்றும் தோனி ஆகியோரை ஆட்டமிழகச் செய்ததுதான் எனக்கு மிகவும் பிடித்தமான நிகழ்வு. ஏனெனில், அப்போது எங்கள் அணிக்கு அது மிகவும் தேவையாக இருந்தது.

கே.எல்.ராகுலும் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். அவரை இருமுறை ஆட்டமிழக்கச் செய்ததும் எனக்கு மகிழ்ச்சியடாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ரஷீத் கானுக்கு ஏழு சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் உள்ளனர். அவரது சகோதரர்கள் அனைவரும் பந்து வீச்சாளர்கள். ஆனால், அவர்களால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. அதுபற்றி ரஷீத்தின் வார்த்தைகளில்..

என் சகோதரர்களுக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை. அவர்கள் அனைவரும் தொழில் செய்துகொண்டிருந்தனர். அவர்களை நம்பி அவர்களது குடும்பங்கள் இருந்தன. அவர்களுக்கு போதிய வசதிகளும் இல்லை, அவர்களின் எதிர்காலம் பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை. அதனால்தான் என் சகோதரர்களால் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை.

இந்திய ரசிகர்களின்அன்பு

வெளிநாட்டு வீரர்கள் இந்திய ரசிகர்களின் அபிமானத்தைச் சம்பாதிப்பது அவ்வளவு ஒன்றும் எளிதானதல்ல. எனக்கு இந்திய மக்களிடம் இருந்து மிகுதியான அன்பு கிடைக்கிறது. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தியா எனக்கு இரண்டாவது வீடு போன்றது. அன்பையும் உபசரிப்பையும் நான் இந்தியாவில்தான் கற்றுக்கொண்டேன்.

இந்தியாவில் உள்ள பல ரசிகர்கள் என்னை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்கள். டி20 தொடரில் வென்றபின் நாங்கள் டேராடூனுக்கு சுற்றுலா சென்றிருந்தோம். பயணக்களைப்பில் ஒரு உணவு விடுதிக்கு சென்றோம். அங்கு என்னை நோக்கி ஓடி வந்த ஒரு சிறுவன் என்னைக் கட்டி அணைத்துக்கொண்டான். நான் உண்மைதானா என்பதை அறிய என் கண்ணத்தைக் கிள்ளினான். ஒரு மலைப்பகுதியில் இருக்கும் சிறுவன் என்னை அறிந்து வைத்திருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. இந்திய ரசிகர்களின் மனதில் எனக்கென்று ஒரு இடம் ஏற்பட்டு இருப்பதாக உணர்ந்தேன்.

இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்டால் நீங்கள் வென்றுவிடுவீர்கள் என்று கூட ஒரு ரசிகர் என்னிடம் கூறியுள்ளார்.

ரஷீத் கானின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதியப்படும் படங்களில் அவருடன் இருக்கும் சிறுமி யார் தெரியுமா, அவர் வாஃபா. ரஷீத்தின் அண்ணன் மகள்.

"நான் அவளிடம் பேசும்போதெல்லாம் எப்போது திரும்ப வருவேன் என்பதே அவளின் கேள்வியாக இருக்கும். நான் அடுத்த நாளே திரும்பி வருவேன் என்றுதான் கூறுவேன். நான் இருக்கும் இடத்திலிருந்து யாரேனும் என் ஊருக்குப் பயணித்தால் அவளுக்கு நிறைய சாக்லேட்டுகளை வாங்கி கொடுத்து விடுவேன்," என்கிறார் ரஷீத்.

தன் சாதனைகள் பற்றி..

நான் தனியாக எதையும் செய்வதில்லை. உலக சாதனைகளை முறியடிப்பது எப்போதும் என் மனதில் இருப்பதில்லை. என் அணிக்காக நன்றாக விளையாட வேண்டும். அதற்காக எப்போதும் என்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். என் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எப்போதும் என் மனதில் இருக்கும்.

19 வயதில் வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்து பலரும் எண்ணிக்கொண்டிருக்கையில், ரஷீத் கான் ஏற்கனேவே நிறைய சாதித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :