கால்பந்து உலகக்கோப்பை: இந்தியாவுக்கான 'மெஸ்ஸி' எப்போது கிடைப்பார்?

  • 22 ஜூன் 2018

7.6 பில்லியன் - இது உலகின் தோராயமான மக்கள் தொகை.

736 - இது 2018 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை.

0 - இதுநடப்பு உலகக்கோப்பையில் இடம்பெற்ற இந்திய வீரர்களின் எண்ணிக்கை.

படத்தின் காப்புரிமை Getty Images

நீண்டகாலமாக உலகக்கோப்பைக்கு இந்தியா தகுதிபெறாதது அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட இந்தியா எப்போது தகுதிபெறும்?

ஒரு தொழில்முறை கால்பந்தாட்டக்காரராக ஆவதற்கு ஏராளமான தியாகங்களும், கடின உழைப்பும் தேவை.

உடல்ரீதியாக, மனரீதியாக, தந்திரோபாயமாக ஒரு வீரர் சிறந்த நிலையில் இருத்தல் வேண்டும். இதனுடன் ஆர்வம், விளையாட்டு உள்கட்டமைப்பு பல ஆயிரம் மணி நேர பயிற்சி ஆகியவை உடன்சேரும்போது ஒரு மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் உருவாகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கால்பந்து உலகில் இந்தியா ''தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஜாம்பவான்'' என்று ஃபிஃபா அமைப்பின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் ஒருமுறை குறிப்பிட்டார். ஆண்கள் கால்பந்து அணிகளின் தரவரிசையில் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா பல இடங்கள் முன்னேறியுள்ளது. 2014-ஆம் ஆண்டில் 170-வது இடத்தில் இருந்த இந்தியா, 2018-ஆம் ஆண்டில் 97-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மேலும், ஐஎஸ்எல், ஐ-லீக் மற்றும் இளையோர் லீக் போன்ற போட்டி தொடர்களும் இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேலும் பிரபலமாக்கியுள்ளன.

ஆனால், இவை மட்டும் போதுமா? ஃபிஃபா உலகக்கோப்பையில் தங்கள் அணி விளையாடுவதை காண இந்தியர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?

இக்கேள்விகளுக்கு விடை காண சில கால்பந்து நிபுணர்களிடம் பிபிசி உரையாடியது.

கால்பந்து - உடல் ரீதியான தேவைகள் என்ன?

கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்க ஒரு வீரருக்கு உடல் பலம், சகிப்பு தன்மை, கால்களின் வலிமை, மிக விரைவாக பந்தின் திசையை மற்றும் ஆட்டத்தில் திட்டத்தை சமயோசிதமாக மாற்றும் வல்லமை, அதீத வேகம், தாண்டிக் குதிக்கும் திறன் என பல திறமைகள் அவசியம்.

கால்பந்து விளையாட்டின் இதயமே களத்தில் இடைவிடாது பந்தை துரத்திக் கொண்டு ஓடுவதுதான். சில வீரர்கள் ஒரு போட்டியிலேயே 14.5 கி.மீட்டர் வரை ஓடுவர்.

மற்ற விளையாட்டுகள் பலவற்றையும் ஒப்பிடுகையில், கால்பந்து விளையாட்டில் களத்தில் அதிகம் ஓட வேண்டியிருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

பல சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு உடல்தகுதி தொடர்பான ஆலோசனைகளை அளித்துவரும் விளையாட்டுதுறைக்கான பிசியோதெரபி நிபுணரான மருத்துவர். விஜய் சுப்பிரமணியன் இது குறித்து கூறுகையில், ''கால்பந்து விளையாட்டில் சிறப்பாக பங்களிக்க ஒரு வீரருக்கு வயிறு, தொடை மற்றும் முதுகு மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். ஒரு பந்தை மிகவும் பலமாக எட்டி உதைக்க காலில் நல்ல பலம் வேண்டும்'' என்று கூறினார்.

கால்பந்து வீரருக்கு உயரம் ஒரு முக்கிய அளவுகோலா என்று கேட்டதற்கு, ''கால்பந்து வீரர்களுக்கு என நிலையான உயர அளவுகோல் இல்லை. குறைவான உயரம் கொண்ட வீரர்கள் டிரிபிள் எனப்படும் பந்தை குறைவான விசையில் களத்தில் கடத்தும் திறமையில் சிறப்பாக விளங்குவர். அதே வேளையில், உயரமான வீரர்களுக்கு உயரத்தில் பறந்துவரும் பந்தை சமாளிக்கும் திறன் இயல்பாக அமையும்'' என்று விஜய் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Vijay

உயரம் குறைவான ஆனால் சிறப்பாக டிரிபிள் செய்யும் திறனுடைய ஒரு வீரர்தான் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி.

'கடந்த சில ஆண்டுகளில் கால்பந்து என்றில்லை, பல விளையாட்டுகளிலும் இந்திய வீரர்களின் உடல்திறன் மற்றும் தகுதி மேம்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டில் உடல்தகுதியில் சிறந்து விளங்கும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஒருவர். தடுப்பாட்டக்காரர்கள் பலரையும் நிலைதடுமாறச் செய்யும் அளவு மைதானத்தில் தாவும் திறமை அவருக்குண்டு'' என்று விஜய் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிறிஸ்டியானோ ரொனால்டோ

சர்வதேச களத்தில் ஒரு வீரர் பிரகாசிக்க உயரம் மற்றும் தசை வலு ஆகியவை எந்தளவு அவசியம் என்று கேட்டதற்கு, அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) செயல் தொழில்நுட்ப இயக்குநரான சேவியோ பதிலளிக்கையில், ''தடுப்பு ஆட்டக்காரருக்கு உயரம் நல்ல பலம் தருவதாக அமையும். ஆனால், நீண்ட காலம் விளையாட்டில் ஜொலிக்க, இதனை தவிர உடல் தகுதி மற்றும் நுட்ப திறன் ஆகியவை சிறப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

உளவியல் ரீதியான தாக்கம்

''இந்திய மற்றும் மேற்கத்திய வீரர்களுக்கு இடையேயான பெரிய வித்தியாசம் உடல்வலிமை மட்டுமே என பலர் எண்ணுவதுண்டு. ஆனால், என்னை பொருத்தவரை செயல்முறையாக விளையாட்டை நன்கு புரிந்து கொள்வது மற்றும் நுட்பரீதியான திறமைகள் ஆகியவற்றில்தான் இந்திய கால்பந்து வீரர்கள் பெரிதும் பின்தங்கியுள்ளனர்'' என்று சேவியோ தெரிவித்தார்.

களத்தில் மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் விளையாடப்படும் விளையாட்டுதான் கால்பந்து என்று தேசிய அளவில் கால்பந்து விளையாடியவரும், விவா(VIVA) கால்பந்து இதழின் இயக்குநருமான ஆசிஷ் பென்ட்சே தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Ashish

''வலுவான மரபியல் மற்றும் உடல் வலு எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் அவசியம். ஐரோப்பிய வீரர்களை ஒப்பிடுகையில் இந்திய வீரர்களுக்கு இந்த அம்சத்தில் சற்று பின்னடைவு உள்ளது. இதனை நுட்ப ரீதியான பலத்துடன் சமாளிக்க முடியும்'' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மன மற்றும் உளவியல் ரீதியான திட்டமிடல் இல்லாமல் உடல் வலிமை மட்டும் சிறப்பாக இருந்தால் கால்பந்து விளையாட்டில் நீண்ட காலம் நிலைக்க முடியாது என்பது பல நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

கால்பந்து விளையாட்டை தொடங்க சரியான வயது என்ன?

''இந்தியாவில் குழந்தைகளுக்கு அவர்களின் 5 அல்லது 6 வயதிலேயே கால்பந்து பயிற்சி தொடங்கிவிட வேண்டும் என பல பெற்றோரும் நினைக்கின்றனர். ஆனால், இது ஒரு கட்டுக்கதை. இதனால் எந்த பயனும் இல்லை'' என கால்பந்து எழுத்தாளர் மற்றும் நிபுணரான நோவி கபாடியா குறிப்பிட்டார்.

12 அல்லது 13 வயதுதான் குழந்தைகள் கால்பந்து விளையாட சரியான வயது. அப்போதுதான் அவர்களின் திறமை மற்றும் ஆர்வம் ஆகியவற்றை கொண்டு ஒரு முடிவெடுக்க முடியும் என்று நோவி கபாடியா மேலும் கூறினார்.

ஆனால், சேவியோவின் கருத்து வேறாக உள்ளது. ''மற்ற ஆசிய, ஐரோப்பிய அணிகளுக்கு இணையாக செயல்பட சிறு வயதிலேயே இந்திய குழந்தைகள் விளையாட்டை தொடங்க வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி - இந்தியாவில் எப்படி உள்ளது?

பந்தை கட்டுப்படுத்துவது, களத்தில் வேகமாக கடத்துவது என கால்பந்து விளையாட்டின் பல சூட்சமங்களையும் கற்றுக்கொடுக்க ஒரு நல்ல பயிற்சியாளரால்தான் முடியும். துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் இந்தியா சற்று பின்தங்கியே உள்ளது என்று பென்ட்சே குறிப்பிட்டார்.

'' ஆட்டத்தில் செய்த தவறுகளை பதிவு செய்து, அதனை வீரர்களுக்கு விளக்குவதற்கு மற்ற அணிகளுக்கு இருப்பது போல தொழில்நுட்பதுறை வல்லுநர்கள் இந்தியாவில் இல்லை. இது அடிப்படை விஷயம்தான். ஆனால், இதுகூட இந்தியாவில் சரிவர இல்லை'' என்று அவர் மேலும் கூறினார்.

''சிறந்த வீரர்கள் மற்றும் அணிகளுடன் விளையாடினால்தான் இந்திய வீரர்கள் கற்றுக்கொள்ளமுடியும். உதாரணமாக, பெல்ஜியம் போன்ற அணியுடன் விளையாடினால் இந்திய வீரர்களுக்கு நல்ல அனுபவமும், பலனும் கிடைக்கும். ஆனால், தரவரிசையில் பின்தங்கியுள்ள இந்தியாவுடன் விளையாட பெல்ஜியம் விரும்புமா?'' என்று அவர் வினவினார்.

மேலும் , இந்தியாவில் கால்பந்து வீரர்களுக்கு நல்ல தரம் வாய்ந்த மைதானங்கள் மற்றும் போட்டி தொடர்கள் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

''இந்திய கால்பந்து அரங்கில் சரியான போட்டியே இல்லை; 17 வயதுக்குட்பட்டவர்களின் அணியில், 8 வீரர்கள் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள், 5 அல்லது 6 வீரர்கள் வேறு இரண்டு மாநிலங்களை சேர்ந்தவர்கள். அப்படியானால், ஒட்டுமொத்த இந்தியாவும் கால்பந்து விளையாடுகிறது என்று எப்படி நாம் கூறமுடியும்?'' என்று நோவி வினவினார்.

1960 மற்றும் 70களில், நாட்டில் பல கால்பந்து மைதானங்கள் இருந்தன. அவற்றில் பல காலப்போக்கில் கிரிக்கெட் மைதானங்களாக மாறிவிட்டன என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கான மெஸ்ஸி கிடைப்பது எப்போது?

அண்மையில், இந்திய கால்பந்து அரங்கில் சாதனைகளும், ஆர்வமும் அதிகரித்தபோதிலும், லயோனல் மெஸ்ஸி அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஜாம்பவான் வீரர்களை இந்தியா எப்போது உருவாக்கும்?

''கால்பந்து குறித்த ஆர்வமும், கலாசாரமும் இந்தியாவில் அதிகரிக்கும்போது, ஒரு ஜாம்பவான் வீரர் உருவாவது இயல்பாக நடக்கும். அப்போது இந்த கேள்விக்கு அவசியம் இராது'' என்று சேவியோ கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''மெஸ்ஸி என்ற பெயரில் என்ன இருக்கிறது? பாய்சங் பூட்டியா. சுனில் சேத்ரி, ஐ.எம்.விஜயன் போன்ற பல நட்சத்திர வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை மறக்கமுடியாது'' என கால்பந்து வீரர் பிரகாஷ் குறிப்பிட்டார்.

''நெய்மர், மெஸ்ஸி போன்றார் கால்பந்து குறித்த ஆர்வம், தாக்கத்தை அவர்கள் நாட்டில் மிகவும் அதிகரித்துள்ளதை மறுக்கமுடியாது. ஆனால், பல தடைகளையும் தாண்டி, பாய்சங் பூட்டியா. சுனில் சேத்ரி, ஐ.எம்.விஜயன் போன்றோர் சாதித்ததை நாம் எண்ணி பார்க்கவேண்டும்'' என பென்ட்சே குறிப்பிட்டார்.

கால்பந்து மீதான காதல் இந்தியாவில் அதிகரித்துள்ளதா?

அண்மையில் கால்பந்து விளையாட்டுக்கான ஆர்வம் மற்றும் அந்தஸ்து இந்தியாவில் மேம்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பென்ட்சே, ''1990களில் நாட்டில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு சரியாக இல்லை; ஆனால், தற்போது சீனியர் அணியில் இடம்பெற கண்டிப்பாக இளையோர் அணியில் விளையாடி இருக்க வேண்டும். தற்போது, போட்டிகளின் எண்ணிக்கை மற்றும் தரம் மேம்பட்டுள்ளது'' என்று கூறினார்.

''ஐஎஸ்எல் போட்டிகளால்தான் இந்தியாவில் கால்பந்து ஆர்வம் உள்ளது என்பது உலகுக்கு தெரிந்திருக்கிறது. இங்குள்ள கால்பந்தாட்ட கிளப்கள் இளையோரை ஊக்குவிக்க, வளர்க்க பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்றார் சேவியோ.

படத்தின் காப்புரிமை Getty Images

''இந்தியாவில் விளையாட்டு ஆர்வம் இருந்தபோதிலும், ஒரு முழுமையான கால்பந்து கலாசாரம் மற்றும் ஆர்வம் இன்னும் வரவில்லை. அவ்வாறான காதல் மற்றும் ஆர்வம் இந்தியாவில் ஏற்பட்டால், அதற்கு பிறகு கால்பந்து விளையாட்டும், வீரர்களும் ஜொலிப்பர்'' என்று சேவியோ மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :