பெங்களூரில் தமிழர்களின் கால்பந்து சாம்ராஜ்யம் உருவான கதை

  • சாய்சுதா சுகவனம்,
  • பிபிசி தமிழுக்காக பெங்களூருவிலிருந்து
பெங்களூரில் தமிழர்களின் கால்பந்து சாம்ராஜ்யம் உருவான கதை

குறுகலான சந்துகளில் கால்பந்து விளையாடும் குழந்தைகள், பிரேசில் அணியின் டீ-ஷர்ட் அணிந்திருக்கும் இளைஞர்கள், தற்போது நடந்து கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணியை ஆதரிக்கும் சுவரொட்டிகள், பிரேசிலின் கால்பந்து நட்சத்திரமாக விளங்கிய பீலேவின் சிலை...

இவற்றை எல்லாம் ஒரே இடத்தில் பார்க்கும்போது, இது இந்தியாவா இல்லை பிரேசிலா என்று சந்தேகம் எழும். கிரிக்கெட்டை பெரிதும் நேசிக்கும் இந்தியாவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பெங்களூரு நகரின் கௌதமபுரம் பகுதிதான் இந்தப் பொலிவுடன் காணப்படுகிறது.

இந்தியாவில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெங்களூரில் 18.4 % மக்கள் தமிழ் பேசுபவர்கள். உள்ளூர் மொழியான கன்னட மொழி பேசுவோருக்கு அடுத்து தமிழ் பேசுபவர்களே அதிகம்.

அல்சூருக்கு அருகே இருக்கும் இந்த கௌதமபுரம், ஆங்கிலேயர் காலத்தில் கன் ட்ரூப்ஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 1809 ஆம் ஆண்டில் ஆங்கிலப்படை பெங்களூரை ஆக்கிரமித்த போது இன்றைய கௌதமபுரவாசிகளின் மூதாதையர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேய அதிகாரிகளுடன் பெங்களூருக்கு வந்தடைத்தனர். இவர்கள் ஆங்கில ஆதிகாரிகளுக்கு சமையல் செய்பவர்களாக, துணி துவைப்பர்களாக, தச்சர்களாக, செருப்பு தைப்பவர்களாக பணிபுரிந்தனர் என்று பெங்களூரின் வரலாற்று ஆசிரியர் அருண் பிரசாத் பிபிசியிடம் கூறினார்.

இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் என்ஜினீயர் குரூப்புக்கு அருகில் உள்ள கௌதமபுரம், நூற்றுக்கணக்கான கால்பந்து வீரர்களை உருவாக்கிருக்கிறது. இந்தியாவிற்காக 1950-ல் இருந்து 1970 கள் வரை விளையாடிய பஷீர், எத்திராஜ், உலகநாதன், கோசல்ராம் ஆகியோர் கௌதமபுரத்தை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கால்பந்து வீரர்களை உருவாகிவரும் கௌதமபுரம் இன்றைய நிலையிலும் இந்தியாவுக்காகவும், பல மாநிலங்களுக்காகவும், BFC, சென்னை சிட்டி FC, மோகன் பகான் போன்ற கிளப்களில் விளையாடும் வீரர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது.

கௌதமபுரம் கால்பந்துபுரமாக உருவானது எப்படி?

அன்றைய காலத்தில் கௌதமபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களில் பொழுதுபோக்கிற்காக ஆங்கிலேய அதிகாரிகள் கால்பந்து ஆடுவது வழக்கம். ஒரு அணியை உருவாக்க தேவையான எண்ணிக்கையில் ஆங்கில விளையாட்டு வீரர்கள் இருக்க மாட்டார்களாம். இந்த அதிகாரிகளுக்கு வேலைபுரியும் இந்தியர்களை தங்கள் அணியில் சேர்த்துக்கொள்வது இயல்பு.

கடந்த 1947-ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பொழுது கௌதமபுரவாசிகளிடம் கால்பந்துகள், இலக்கு இடுகைகளை எல்லாம் கொடுத்து விட்டு சென்றார்கள். அதைக் கொண்டும் பிரேசில் அணியின் ஆட்டத்தை கண்டும் கௌதமபுரவாசிகள் அவர்களது கால்பந்து ஆட்டத்தை மேன்மைப்படுத்திக்கொண்டனர் என்கிறார் ஏழு முறை இந்தியாவுக்காக 1970 மற்றும் 1980 களில் ஆடிய ரவிக்குமார். அவரது தந்தை ஆங்கிலேய அதிகாரிகளுக்கு சமையல்காரராக இருந்தவர்.

கௌதமபுரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்பந்து ஆற்றிய பங்கு

ரவிகுமார் அவர்களின் தலைமுறைக்கு கால்பந்து ஏழ்மை, பசியில் இருந்து தப்பிக்க ஒரு வழி. கால்பந்து ஆட்டத்தில் திறமை பெற்றவரானால், பொதுத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். கௌதமபுரத்தை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான கால்பந்து வீரர்களுக்கு இந்திய தொலைத் தொடர்புத்துறை, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிட்டியது என்கிறார் ரவிக்குமார்.

கௌதமபுரம் ஏழ்மை நிலைமையில் இருந்து நடுத்தரவர்க்கமாக மாற கால்பந்து பெரும் பங்காற்றியிருக்கிறது.

படக்குறிப்பு,

ரவி குமார்

இன்றும் நாளையும்

இன்றைக்கும் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கௌதமபுரத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் தினமும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களது கனவு ரவிக்குமாரின் தலைமுறையைக் காட்டிலும் மாறுபட்டிருக்கிறது.

முன்னாள் கால்பந்து வீரர் பாபு, ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மாலை நேரங்களில் கௌதமபுரத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி வழங்குகிறார்.

"எனது காலத்தில் நாங்கள் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்க கால்பந்து ஆட்டத்தை பயின்றோம். இன்றைய சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதையே தொழில் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற கனவோடு பயில்கின்றனர். இவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. வளர்ந்து வரும் கிளப் கலாசாரமும் அவர்கள் வழங்கும் பயிற்சியும் இந்த சிறுவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தேடித்தரும்" என்கிறார் பாபு.

தங்களது மூதாதையர்கள் ஆங்கிலேயர்களின் சேவகர்களாக பணியாற்றிய நிலையில், ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற கால்பந்து கலாசாரத்தை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து வரும் அவர்களது வாரிசுகள், கால்பந்து சாதனையாளர்களாகத் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஃபிஃபா அமைப்பின் முன்னாள் தலைவர் செப் பிளேட்டர் இந்தியாவை `உறக்கத்தில் இருக்கும் கால்பந்து ஜாம்பவான்' என்று வர்ணித்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் தங்களது உத்வேகம் தொய்வின்றித் தொடரும் என்று கூறுகிறார்கள் இந்த கால்பந்து வாரிசுகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :