ஃபிஃபா உலகக் கோப்பை : சாம்பியன்களுக்கு தொடரும் சாபக்கேடு ஜெர்மனியை பதம்பார்த்தது

  • 28 ஜூன் 2018
ஜெர்மனி படத்தின் காப்புரிமை ALLSPORT/Getty Images

லீக் சுற்றில் ஜெர்மனி தோல்வி அடைந்ததன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டது.

2014ஆம் ஆண்டு உலக கோப்பை சாம்பியன் அணி தென் கொரியாவுடனான லீக் சுற்றில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடையவே, லீக் சுற்றோடு வெளியேற்றப்பட்டது. மேலும் தான் இடம்பெற்றிருக்கும் பிரிவில் மூன்றில் ஒரு போட்டியை மட்டும் வென்று கடைசி இடத்தையும் பிடித்திருக்கிறது.

இச்செய்தியின் பொருள் நடப்பு உலகக்கோப்பை சாம்பியனுக்கு தொடரும் சாபத்தில் ஜெர்மனியும் தப்பவில்லை.

குறிப்பாக 21-வது நூற்றாண்டில் இந்த சாபக்கேடு ஆதிக்கம் செலுத்திவருகிறது.

2002க்கு முன்னதாக கால்பந்து உலகக் கோப்பை சரித்திரத்தில் உலகக் கோப்பையை வென்ற அணி இரண்டு முறை மட்டுமே தனது முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

1938 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹங்கேரியை 4-2 என்ற கணக்கில் இத்தாலி வென்றது. 1942 மற்றும் 1946 ஆண்டுகளில் உலகக் கோப்பை நடைபெறவில்லை. 1950 கால்பந்து உலகக்கோப்பையில் நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் அப்போதைய நடப்பு சாம்பியன் இத்தாலி, சுவீடன், பராகுவே மற்றும் இந்தியா ஆகியவை ஒரு பிரிவில் இடம்பெற்றன.

இந்தியா உலகக்கோப்பையில் விளையாடவில்லை. இத்தாலி லீக் சுற்றில் ஒரு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியிலும் தோல்வியும் அடையவே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

முந்தைய இரண்டு உலக கோப்பைகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தபோதிலும் 1966-ல் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை பிரேசில் லீக் சுற்றோடு வெளியேறியதால் இழந்தது. 1966-ல் ஹங்கேரி மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு அடுத்தபடியாக லீக் சுற்றில் இடம்பிடித்திருந்தது பிரேசில்.

ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் நடந்த 2002 உலகக்கோப்பையில் பிரான்ஸ் முதல் ஆட்டத்திலேயே செனெகலிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. 1998 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரேசிலை 3-0 எனும் கோல் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டம் வென்றிருந்தது பிரான்ஸ். ஆனால் 2002 உலக கோப்பையில் டென்மார்க், செனெகல், உருகுவே அணிகளுக்கு அடுத்தடியாக லீக் சுற்றில் தனது பிரிவில் கடைசி இடம் பிடித்தது பிரான்ஸ்.

2010-ல் சாபக்கேடு மீண்டும் துரத்தியது. இந்த முறை இத்தாலி மாட்டிக்கொண்டது. பிரான்ஸை வீழ்த்தி 2006-ல் சாம்பியனான இத்தாலி அணி பராகுவே மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் டிரா செய்தது. மேலும் ஸ்லோவோக்கியாவுடனான போட்டியில் தோல்வியடைந்தது. இதையடுத்து லீக் சுற்றில் கடைசி இடம் பெற்று வெளியேறியது .

படத்தின் காப்புரிமை LUIS ACOSTA

நான்கு வருடங்கள் உருண்டோடின. இப்போது ஸ்பெயின். ஈரோ கோப்பையை இரண்டு முறை வென்று எட்டு ஆண்டுகளாக கால்பந்து உலகில் கோலோச்சிய ஸ்பெயின் அணி 2014 உலககோப்பை லீக் சுற்றில் நெதர்லாந்திடம் 1 -5 என உதை வாங்கியது. சிலியிடம் 2-0 என உதை வாங்கவே லீக் சுற்றோடு நாடு திரும்பியது.

இப்போது மீண்டும் அச்சாபக்கேடு நடந்துவிட்டது. சுவீடன், மெக்சிகோ , தென் கொரியா ஆகிய அணிகள் ஜெர்மனிக்கு மிகப்பெரிய சவால் அளிக்கக்கூடிய அணிகளாக கருதப்படவில்லை. மெக்சிகோவிடம் 0-1 என ஜெர்மனி தோற்றாலும் சுவீடனை 2-1 என வென்றதால் ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் பெரிதாக எழவில்லை.

ஆனால் தனது முந்தைய எட்டு உலக கோப்பை போட்டிகளில் ஒன்றில் கூட ஜெயிக்காத தென் கொரியா ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தது. ஜெர்மனி மீண்டெழ முயற்சிப்பதற்குள் இன்னொரு கோல் அடித்து ஜெர்மனி அணியை ரஷ்யாவில் இருந்து லீக் சுற்றோடு நாடு திரும்பச் செய்திருக்கிறது.

சாம்பியன் பட்டம் வென்ற அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பது மிகவும் கடினம் என்பதையே வரலாறு சொல்கிறது. இத்தாலி (1934- 1938) மற்றும் பிரேசில் (1958 -62) ஆண்டுகளில் மட்டுமே தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

அவர்களுடன் இணைய ஜெர்மனிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :