தமிழ் பெண் ஷெபானி அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனானது எப்படி?

23 வயது தமிழ் பெண்ணான ஷெபானி பாஸ்கர் இப்போது அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் அணித் தலைவர். எப்படி சாத்தியமானது இந்த பயணம் என்பதை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.

படத்தின் காப்புரிமை Shebani Bhasker
Image caption ஷெபானி பாஸ்கர்

2011-ல் உலகக்கோப்பை தகுதிச் சுற்று வங்கதேசத்தில் நடந்தது. அமெரிக்க அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அந்தத் தொடரில் அமெரிக்கா ஒரு போட்டியில் மட்டும் வென்றது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அப்போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான விருதை (பிளேயர் ஆஃப் தி மேட்ச்) ஷெபானி வென்றார். அப்போது அவருக்கு வயது 17.

என்ன நடந்தது அப்போட்டியில்? ''நான் பேட்டிங்கில் 89 பந்துகளில் 72 ரன்கள் குவித்திருந்தேன். சேஸிங்கில் எதிரணி ஏழு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. அவர்கள் அணியின் கடைசி ஜோடி, களத்தில் இருந்தது. அப்போது 19-வது ஓவரின் கடைசி பந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி அடிக்கப்பட்டது.

எதிரணி வீரர்கள் ஒரு ரன் எடுத்துவிட முனைந்தார்கள். பந்தை கையில் எடுத்தவுடன் குறிபார்த்து எறிந்தேன். பந்து ஸ்டம்ப்பை பதம் பார்க்க நடுவர் மெதுவாக விரலைத் தூக்க, ஒரு ரன் வித்தியாசத்தில் எங்கள் அணி வென்றது . நான் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் பெருமையாகவும் உணர்ந்த தருணமது. பல ஆண்டுகளாக விளையாடி வந்ததுக்கும் பயிற்சி பெற்றதற்கும் பலனை அறுவடை செய்த நிமிடமது.

அப்போட்டியையடுத்து என் மீது சக வீரர்களுக்கும் அணிக்கும் நம்பிக்கை உருவானது. அங்கிருந்து தொடங்கிய பயணத்தில் இப்போது கேப்டன் எனும் கூடுதல் பொறுப்பு கிடைத்துள்ளது'' என்கிறார்.

படத்தின் காப்புரிமை Erica Rendler
Image caption உலககோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் வென்ற ஷெபானி பாஸ்கர்

ஷெபானி மந்தாகினி பாஸ்கர் பிறந்தது அமெரிக்காவின் சிகாகோவில். ஆனால் தனது இறுதிக் கட்ட பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை சென்னையில் தான் முடித்திருக்கிறார்.

''முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் தாய் நடத்திவரும் பள்ளியில் பாலபாடம் (ப்ரீ கேஜி ) பயின்றேன். ஸ்ரீகாந்த் மாமாவுக்கு தரப்படும் உணவுதான் எனக்கும் அவரது அம்மா ஊட்டிவிட்டார். அங்கிருந்துதான் கிரிக்கெட் மீதான பந்தம் துவங்கியது.

பிறந்தது சிகாகோவாக இருந்தாலும் ஆரம்பகால வகுப்புகளை பல நாடுகளில் படிக்க வேண்டியிருந்தது. அதே சமயம் வீட்டில் ... கடற்கரையில்... என விளையாடத் துவங்கி 11 வயதில் இருந்து சவாலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுக்கத் துவங்கினேன்'' என்கிறார்.

17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த தமிழ் பின்புலம் கொண்ட அமெரிக்காவில் பிறந்த ஷெபானி ஆறு வருடங்களில் அந்த அணிக்கு அணித்தலைவி பொறுப்பை பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Shebani Bhasker

''ஏன் நான் இந்தியாவுக்காக விளையாடவில்லை?''

'' 2005-ல் நாங்கள் கொல்கத்தாவில் வசித்தபோது 16 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு வங்க அணியில் விளையாடினேன். 2007-ல் மும்பைக்கு இடம்பெயர்ந்தபோது மடுங்கா ஜிம்கானா, சிவாஜி பார்க், கர் ஜிம்கானா போன்ற பகுதிகளில் கல்லி கிரிக்கெட் விளையாடினேன். ஆனால் மீண்டும் 2008-ல் சென்னைக்கே திரும்பிவிட்டேன்.''

''தமிழ்நாட்டின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும், மூத்தோர் பெண்கள் அணியிலும் நான் விளையாடியுள்ளேன். இந்திய பாஸ்போர்ட் இல்லாதவர்கள் இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆட முடியாது எனும் சூழ்நிலை காரணமாக மாநில அளவைத் தாண்டி தேசிய அணிக்கு விளையாட முடியாமல் போனது. அதில் எனக்கு வருத்தமே.

ஆனால் அமெரிக்க பாஸ்போர்ட் என்னிடம் இருந்தது மேலும் நான் பிறந்ததும் அமெரிக்காவில்தான் என்பதால் நேரடியாக 2011 ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அமெரிக்காவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. என் கனவுகளுக்கு உயிர் கொடுக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு வயது 17'' என விவரிக்கிறார் ஷெபானி.

படத்தின் காப்புரிமை Shebani Bhasker

2018 பெண்கள் உலககோப்பை இந்தாண்டு நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும் இரண்டு அணிகள் உலககோப்பை தகுதிச்சுற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.

உலககோப்பை தகுதிச்சுற்று அடுத்த வாரம் ஜூலை 7-ம் தேதி துவங்குகிறது. இம்முறை தகுதிச்சுற்றில் விளையாடுவதற்கு அமெரிக்கா தகுதிபெறவில்லை.ஆனால் 2020 உலகக்கோப்பை டி20 தொடரில் அமெரிக்கா பங்கேற்கவேண்டும் என விரும்புகிறார் அமெரிக்க அணித்தலைவி.

''எனது முதல் இலக்கு உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று அங்கிருந்து இந்தியா உள்ளிட்ட அணிகளுடன் உலககோப்பையில் மோதவேண்டும். பிரத்யேக திட்டங்களுடன் அணியை வழிநடத்துவது எனது பொறுப்பு. பழைய விஷயங்களை பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு முறையும் அப்போது விளையாடும் போட்டியை மட்டும் கருத்தில் கொண்டு வெற்றி பெற முழு உழைப்பை கொடுப்பேன். இது தான் எனது பாணி'' என்கிறார் மேற்கு வங்கம் மற்றும் தமிழக அணிக்காக தனது பள்ளிப்பருவத்தில் விளையாடியுள்ள ஷெபானி.

அமெரிக்க பெண்கள் அணியை பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளை குடும்பப் பின்னணியாக கொண்டவர்கள் கணிசமாக நிறைந்திருக்கிறார்கள்.

இந்திய பெண்கள் அணியின் வளர்ச்சி குறித்து பேசிய ஷெபானி ''தற்போதைய இந்திய பெண்கள் அணி அதிசிறப்பான அணியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலககோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய விதம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்திய பெண்கள் அணி எப்போதும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. உலகின் சிறந்த மூன்று அல்லது நான்கு அணிகளில் இந்தியாவும் ஒன்று '' என்கிறார்.

படத்தின் காப்புரிமை Shebani Bhasker

ஷெபானியின் தந்தை, தாய், பெரியப்பா, தாத்தா என அனைவரும் விளையாட்டுப் பின்னணி கொண்டிருக்கிறார்கள்.

''அம்மா டென்னிஸிலும் அப்பா தடகளத்திலும் ஆர்வமுடையவர்கள். தாத்தா ஜிம்னாஸ்டிக்ஸ் செய்துவந்தார். அதனால் விளையாட்டின் மீதான ஆர்வம் எனக்கு சிறுவயதிலிருந்தே இருந்தது. கோல்ஃப், கூடைப்பந்து, கால்பந்து ஆகியவையும் நான் விளையாடுவேன்.

இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடினால் வீட்டில் பாராட்டு கிடைக்கும். ஒருவேளை சொதப்பினால் கிரிக்கெட்டை விட்டுவிடு என்பார்கள் பெற்றோர்கள் . ஆனால் கிரிக்கெட்டில் ஜெயிக்கத்தான் எனக்கு ஆசை '' என விவரிக்கிறார் விக்கெட் கீப்பர் மற்றும் ஆல்ரவுண்டர் வீராங்கனை.

படத்தின் காப்புரிமை Shebani Bhasker

அணிக்குத் தலைமை ஏற்கும் பண்பு சிறுவயதிலேயே இருந்ததாக கூறுகிறார் அமெரிக்க அணித் தலைவி. ''19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக அணிக்கு நான் தலைமை வகித்திருக்கிறேன். மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் நான் பயின்ற எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணிக்கும் நான்கு வருடம் தலைமை ஏற்றுள்ளேன். எனது கல்லூரி அணி நான் விளையாடிய ஐந்து ஆண்டுகளிலும் வீழ்த்தப்படமுடியாத அணியாகவே விளங்கியது. எனது அனுபவத்தை முழுமையாக தற்போது பயன்படுத்துவேன்'' என நம்பிக்கையுடன் சொல்கிறார்.

பெண்கள் கிரிக்கெட் இப்போது போதிய கவனம் பெற்றிருக்கிறதா?

''நிச்சயமாக. கடந்த உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவிலும் நல்ல வரவேற்பு பெற்றது. பெண்கள் கிரிக்கெட் இப்போது நன்றாக கவனம் பெறத் துவங்கியிருக்கிறது. பெண்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் அது நல்லது''. என்கிறார் ஷெபானி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :