உலககோப்பை கால்பந்து: இரண்டாம் சுற்றில் எந்த அணி யாருடன் மோதுகிறது?

  • 30 ஜூன் 2018

உலககோப்பை கால்பந்தில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இரண்டாவது சுற்று இன்று முதல் தொடங்கவுள்ளது. கடந்த உலககோப்பையை வென்ற ஜெர்மனி லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

படத்தின் காப்புரிமை JUAN MABROMATA

மொத்தம் 32 நாடுகள் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ளன. எட்டு பிரிவுகளில் இருந்து தலா இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

குரூப் ஏ :-

உருகுவே, ரஷ்யா, சௌதி அரேபியா, எகிப்து ஆகிய அணிகள் இடம்பெற்ற ஏ பிரிவில் உருகுவே, ரஷ்யா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. எகிப்து மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. சௌதி அரேபியா அணி எகிப்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ரஷ்ய அணி சௌதியை 5-0 என வென்றது குறிப்பிடத்தக்கது.

குரூப் பி :-

இரான் மற்றும் மொரோக்கோ அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இந்த பிரிவில் இருந்து ஸ்பெயின் போர்ச்சுகல் அணிகள் தலா ஒரு வெற்றி மற்றும் இரண்டு டிரா ஆகியவற்றோடு ஐந்து புள்ளிகளை பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. மொரோக்கோ அணி இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் டிராவும் செய்து கடைசி இடத்தை பிடித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

குரூப் சி

பிரான்ஸ் அணி இரண்டு வெற்றி ஒரு டிரா என ஏழு புள்ளிகளுடன் எளிதாக அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றது. பெரு அணி ஆஸ்திரேலியாவை 2-0 என வென்றது எனினும் மற்ற இரண்டு போட்டிகளில் தோற்றதால் லீக் சுற்றுவது வெளியேறுகிறது. ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட வெல்லமுடியாமல் இப்பிரிவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. டென்மார்க் அணி ஒரு வெற்றி மற்றும் இரண்டு டிராவுடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

குரூப் டி

குரோஷியா, அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய அணிகள் இப்பிரிவில் இடம்பெற்றன.

குரோஷியாவுடனான ஆட்டத்தில் அர்ஜென்டினா 0-3 என்ற கோல்கணக்கில் தோற்றது . முன்னதாக ஐஸ்லாந்துடனான ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்கவே ஆட்டம் சமநிலையில் முடிந்திருந்தது. நைஜீரியாவுடனான முன்றாவது போட்டியில் 2-1 என வென்று அடுத்தச் சுற்றுக்குள் நுழைந்தது மெஸ்ஸி அணி.

குரோஷியா மூன்று போட்டிகளிலும் வென்றதால் அடுத்த சுற்றுக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றது.

குரூப் ஈ

பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. பிரேசில் இரண்டில் வென்றும் சுவிட்சர்லாந்து அணி செர்பியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றி கண்டும் அடுத்தச் சுற்றுக்குள் நுழைந்தன.

கோஸ்டாரிக்கா, செர்பியா வெளியேறின.

குரூப் எஃப்

சுவீடனும் மெக்சிகோவும் தலா இரண்டு போட்டிகளில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற, தென் கொரியாவும் ஜெர்மனியும் லீக் சுற்றோடு நாடு திரும்புகின்றன .

2014 உலககோப்பை சாம்பியன் ஜெர்மனி இம்முறை ஒரு போட்டியில் வென்று தென் கொரியா மற்றும் மெக்சிகோ ஆகிய அணிகளிடம் தோல்வி கண்டு லீக் சுற்றில் கடைசி இடம் பிடித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

குரூப் ஜி

இங்கிலாந்தும் பெல்ஜியமும் எளிதாக அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன . எனினும் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்தை பெல்ஜியம் வென்றது.

துனீஷியா மற்றும் பனாமா அணிகள் வெளியேற்றப்பட்டன

குரூப் ஹெச்

கடும் போட்டி நடந்த இந்த பிரிவில் ஜப்பான் கொலம்பியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. செனகலும் போலந்தும் வெளியேறின.

கொலம்பியா மூன்றில் இரண்டு வென்று ஜப்பானுடன் தோல்வியைச் சந்தித்து ஆறு புள்ளிகளுடன் இப்பிரிவில் இருந்து அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

கொலம்பியாவை வென்ற ஜப்பான் அணி செனெகளுடனான போட்டியில் 2-2 என டிரா செய்தது. நேற்று நடந்த போட்டியில் போலந்து ஜப்பானை 1-0 என்ற கணக்கில் வென்றது.

போலந்து அணி ஒரு வெற்றி இரண்டு தோல்விகளுடன் ஹெச் பிரிவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இரண்டாவது சுற்றில் யார் யாருடன் மோதுகிறார்கள்?

சனிக்கிழமையில் இருந்து இரண்டாவது சுற்று துவங்குகிறது. பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. உருகுவே போர்ச்சுகலை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் வெல்லும் அணிகள் ஜூலை ஆறு அன்று நடக்கவிருக்கும் காலிறுதி போட்டியில் பங்கேற்கவுள்ளன.

ஞாயற்று கிழமை நடக்கும் போட்டியில் ஸ்பெயினும் ரஷ்யாவும் ஒரு போட்டியில் மோதுகின்றன மற்றொரு போட்டியில் குரோஷியாவும் டென்மார்க்கும் மோதும். இந்த போட்டிகளில் வெல்லும் அணிகள் காலிறுதியில் கால் வைக்கும்.

திங்கள் கிழமை (ஜூலை 2) அன்று நடக்கும் போட்டியில் பிரேசில் மற்றும் மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பெல்ஜியமும் ஜப்பானும் மோதவுள்ளன.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) அன்று இங்கிலாந்தும் கொலம்பியாவும் ஒரு போட்டியிலும், சுவீடனும் ஸ்விட்சர்லாந்தும் ஒரு போட்டியிலும் மோதவுள்ளன. இந்த இரண்டு போட்டிகளில் வெல்லும் அணிகள் ஜூலை 7 அன்று நடக்கும் காலிறுதி போட்டியில் மோதும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: