2018 கால்பந்து: பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து வெற்றிக்கு உதவிய குடியேறிகள்

  • பெர்னாண்டோ டுவார்ட்
  • பிபிசி உலக சேவை
Belgium football team lining up before a match against Brazil

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பெல்ஜியம் அணி

உலகக் கோப்பை கால்பந்தில் அரையிறுக்கு தகுதி பெற்ற மூன்று அணிகளுக்கு புவியியல் அருகாமை ஒற்றுமை மட்டுமல்ல, வேறு ஒற்றுமைகளும் உள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளில் உள்ள நிறைய வீரர்கள், குடியேறிகளின் மகன்கள்.

பிரான்ஸ் அணியில் உள்ள 23 வீரர்களில் 16 வீரர்களின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே பிறந்தவர்கள். மேலும் இருவர், பிரஞ்ச் கரீபியன் தீவில் பிறந்தவர்கள். இது பிரான்ஸின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

11 பெல்ஜியம் மற்றும் 6 இங்கிலாந்து வீரர்களின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் குடியேறி ஆவார். மேலும் நான்கு இங்கிலாந்து வீரர்கள் ஆப்பிரிக்க-கரீபியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவரான ராஹீம் ஸ்டெர்லிங், ஜமைக்காவில் பிறந்தார்.

பிரான்ஸின் கால்பந்து அணி பல பண்பாட்டு வீரர்களைக் கொண்டிருப்பது ஆச்சரியமான ஒன்று அல்ல.

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு,

பிரான்ஸ் அணியில் உள்ள 23 வீரர்களில் 16 வீரர்களின் பெற்றோர்களில் ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே பிறந்தவர்கள்

இதுவரை கால்பந்து உலகக்கோப்பையில் 1998-ம் ஆண்டில் மட்டுமே பிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. பிரான்ஸின் இந்த வெற்றி, ஒருங்கிணைந்த பிரான்ஸ் சமூகத்தின் வெற்றி சின்னமாக கொண்டாடப்பட்டது. கலப்பின வீரர்களைக் கொண்ட இந்த அணிக்கு ''ரெயின்போ அணி'' என்ற பெயரும் உள்ளது.

பெல்ஜியம் அணியில் உள்ள 11 வீரர்களின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் குடியேறி. பெல்ஜியமின் தற்போதைய அணி, 2002 அணியை விட வித்தியாசமானது. 2002 பெல்ஜியம் அணியில், வெறும் 2 வீரர்கள் மட்டுமே பெல்ஜியம் அல்லாத வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

இங்கிலாந்து அணியிலும் குடியேறிகளின் மகன்கள் நல்ல இடத்தைப் பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணியில் உள்ள ஆறு வீரர்களின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் பிரிட்டனுக்குக் குடியேறியாக வந்தவர்கள்.

''பன்முகத்தன்மை கொண்ட இந்த அணி, நவீன இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களைக் கொண்டுள்ளது. '' என இங்கிலாந்து கால்பந்து அணியின் மேலாளர் சவூத்கேட் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிரான்ஸ் அணி

ஆனால், இன உறவு நிபுணர்கள் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றனர்.

ஐரோப்பிய கால்பந்து அணியில் இனவாத பிரச்சினைகளை தீர்த்து வரும் FARE நெட்வொர்க்கின் நிறுவனர் பியார் பொவார், அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளில் மூன்று அணிகள் பன்முகத்தன்மை கொண்டிருப்பது ஒரு வரலாற்றுப்பூர்வ தருணமாகும் என்கிறார்

''ஆனால், அதில் ஒரு பிரச்சனை உள்ளது. தற்போது கூட இன சிறுபான்மை வீரர்களே விமர்சகர்களால் குறிவைக்கப்படுகின்றனர். அரையிறுதில் இங்கிலாந்து தோல்வியடைந்தால், குடியேறியின் மகனான ரஹீம் ஸ்டெர்லிங் பலிகடா ஆக்கப்படலாம். உலகக்கோப்பையில் இருந்து ஜெர்மனி வெளியேறிய போது துருக்கிய வம்சாவளி வீரரான மெசட் ஓசில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது'' என்கிறார் பியார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இங்கிலாந்து அணி

2015 உலகக்கோப்பையை வென்ற ஜெர்மனி அணியில், குடியேறிகளின் மகன்களும், ஜெர்மானியர்களின் மகன்களும் இடம் பெற்றிருந்தனர். 2015 உலகக்கோப்பையை ஜெர்மனி வென்ற ஒராண்டு கழித்து ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்ட பொருளாதார வல்லுநர் வொல்ப்காங் பாங்கர், ''கால்பந்தில் மட்டுமல்லாமல் மற்ற விஷயத்திலும் ஜெர்மனி முன்னணி நிலையைப் பெற திறமை வாய்ந்த நபர்கள் ஜெர்மனிக்கு வேண்டும்'' என கூறியிருந்தார்.

''நீங்கள் கால்பந்தை விரும்பினால், குடியேறிகளை வரவேற்க வேண்டும்'' என்றார் அவர்.

அரசியல் ஆய்வாளர்களான எட்மண்ட் மால்செக் மற்றும் செபாஸ்டியன் சைக் ஆகியோர், ஐரோப்பியவின் ஐந்து (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின்) முக்கிய கால்பந்து கிளப்பின் செயல்திறனைப் பற்றி ஆய்வு செய்தனர். பன்முகத்தன்மையைக் கொண்டிருக்கும் அணியின் செயல்திறன் அதிகரிக்கலாம் என அந்த ஆய்வில் கூறியிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :