கிரிக்கெட்: குல்தீப் சுழலில் சிக்கிய இங்கிலாந்து; ரோஹித் அதிரடி சதம் - 8 தகவல்கள்

இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்துகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் விக்கெட்டை இழக்க, ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதம் மற்றும் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் போட்டியை வென்றது.

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது.

ட்ரென்ட் பிரிட்ஜில் நேற்று நடத்த போட்டியில் இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் முத்திரை பதித்தார். இந்திய அணி 59 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலே போட்டியை வென்றது.

1. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இவ்விருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் காட்டினர். ஓவருக்கு சுமார் ஏழு ரன்கள் வீதத்தில் ஆடினர். உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்தையே பௌண்டரிக்கு விரட்டினார் ஜேசன் ராய். முதல் பத்து ஓவர்களில் 71 ரன்கள் குவித்தது இங்கிலாந்து.

2. ஆட்டத்தின் 11-வது ஓவரிலேயே ஐந்தாவது பந்துவீச்சாளரை பயன்படுத்தினார் விராட் கோலி. குல்தீப் வீசிய அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஜேசன் ராய் வீழ்ந்தார். அவர் 35 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். குல்தீப்பின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதே ஓவரில் ஐந்தாவது பந்தில் பேர்ஸ்டோவும் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். 13 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்தின் ஸ்கோர் 82/3 என்றானது.

3. குல்தீப் பந்து வீசத் துவங்கிய பிறகு இங்கிலாந்தின் ரன் வேகம் மந்தமானது. சாஹல் இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் இயான் மோர்கன் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் மிகவும் கவனமாக ஆடினர். ஒரு பக்கம் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்றொரு பக்கம் பட்லர் 45 பந்தில் அரை சதம் எடுத்தார். பட்லர் தொடர்ச்சியாக அடிக்கும் மூன்றாவது அரை சதம் இது. ஆட்டத்தின் 39-வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பட்லர் அவுட் ஆனார்.

4. மிகப்பொறுமையாக விளையாடிய ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரை சதத்தை பூர்த்திசெய்தார். 17 ஆண்டுகளுக்கு முன்னர் காலிங்வுட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 108 பந்தில் அரை சதம் அடித்திருந்தார். அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இங்கிலாந்து வீரர் ஒருவர் அடித்த மிக பொறுமையான அரை சதம் இதுவே. பென் ஸ்டோக்ஸ் இப்போட்டியில் அரை சதம் அடித்த கையோடு குல்தீப் பந்தில் வீழ்ந்தார்.

5. தனது கடைசி ஓவரின் முதல் பந்தில் ஸ்டோக்ஸ் மற்றும் கடைசி பந்தில் டேவிட் வில்லியை அவுட் ஆக்கினார் குல்தீப். இதன் மூலம் நேற்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டும் கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஒருவரின் நான்காவது சிறந்த பந்துவீச்சு இது.

இடது கை மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் (left arm wrist spinner) ஒருவர் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்துவது வரலாற்றில் இதுவே முதல்முறை. இங்கிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் குல்தீப் பெற்றார். முன்னதாக 2004-ல் அஃப்ரிடி 11 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் குல்தீப் நேற்றைய போட்டியில் பெற்றார்.

6. இங்கிலாந்து பேட்டிங்கின் போது 34 ஓவர் முதல் 47-வது ஓவருக்கு இடையில் ஒரு பௌண்டரி கூட விளாசப்படவில்லை. 73 பந்துகள் பௌண்டரி இல்லாமல் ஆட்டம் நகர்ந்தது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் அதிரடியாக ஆடி முடிந்த பங்களிப்பைச் செய்ததால் இங்கிலாந்தின் ஸ்கோர் 268-ஐ எட்டியது.

7. இலக்கை துரத்தும்போது இந்தியாவின் முதல் விக்கெட்டாக தவான் வீழ்ந்தார். அவர் 27 பந்துகளில் எட்டு பௌண்டரியோடு 40 ரன்கள் விளாசியிருந்தார். அதன்பின்னர் அணித்தலைவர் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இணைந்து பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடினர். 82 பந்துகளில் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார். இது அவரது 18-வது சதமாகும்.

இந்தியா விளையாடிய கடைசி ஒன்பது போட்டிகளில் எட்டு போட்டியில் இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் சதம் எடுத்துள்ளனர். இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு மொஹாலியில் நடந்த போட்டியில் ரோஹித் இரட்டை சதம் எடுத்தார். விசாகப்பட்டினம் போட்டியில் தவான் நூறு ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் டர்பன், கேப்டவுன் சென்சூரியனில் நடந்த போட்டிகளில் கோலி சதம் கண்டார். ஜோஹன்னஸ்பார்க் போட்டியில் தவான் 109 ரன்கள் எடுத்தார். போர்ட் எலிசபத்தில் நடந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 115 ரன்கள் விளாசினார். நேற்றைய போட்டியிலும் ரோஹித் அதிரடியாக சதம் எடுத்து 137 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் பெவிலியன் சென்றார்.

8. இந்திய அணி 40.1 ஓவரில் இலக்கை கடந்தது. விராட் கோலி 75 ரன்கள் எடுத்து ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார். இந்திய அணியின் தலைவராக கோலி பொறுப்பேற்று விளையாடிய 50 போட்டிகளில் நேற்றைய வெற்றியோடு சேர்த்து மொத்த வெற்றியின் எண்ணிக்கை 39 ஆகியுள்ளது.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களின் சொந்தமண்ணில் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுக்காமல் திரும்பிய நிகழ்வு வரலாற்றில் நேற்றைய போட்டியோடு சேர்த்து மூன்றாவது முறை.

குல்தீப் யாதவ் நேற்றைய போட்டியின் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார். '' இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட எனக்கும் அழைப்பு வரும் என நம்புகிறேன்'' என ஆட்டம் முடிந்த பிறகு கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது போட்டி நாளை (சனிக்கிழமை) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா வென்றால் இங்கிலாந்து தொடரை இழக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :