மிரட்டிய ஜோ ரூட்; சொதப்பிய இந்திய அணி; அசத்திய டோனி - 5 தகவல்கள்

மிரட்டிய ஜோ ரூட்; சொதப்பிய இந்திய அணி; அசத்திய டோனி

இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோசமான பேட்டிங்கின் காரணமாக இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலாவதாக நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

நாட்டிங்காமில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மாவின் அதிரடியான சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருந்தது.

1. 1-0 கணக்கில் தொடரில் முன்னிலை வகித்த இந்திய அணி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் உத்வேகத்துடன் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுக்க, துவக்க ஆட்டக்காரர்களான ஜான்சன் ராய், ஜானி பிரிட்டோ ஆகியோர் முறையே 40 மற்றும் 38 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் அமைத்தனர்.

2. தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 53 ரன்கள் குவித்தபோது மோர்கன் ஆட்டமிழக்க அதற்கடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 5, ஜோஸ் பட்லர் 4, மோயின் அலி 13 ஆகியோர் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 116 பந்துகளில் 113 ரங்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட்டால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் சேர்த்தது. குல்தீப் 3, உமேஷ், பாண்டியா, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

3. சற்றே கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா 15, ஷிகர் தவான் 36 மற்றும் கே.எல். ராகுல் (0) ஏமாற்றமளிக்க இந்திய அணி 25 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுக்கு 132 எடுத்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி 45, ரெய்னா 46 ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

4. அடுத்து களமிறங்கிய டோனியும் 37, பாண்டயாவும் 21 ஓரளவு தாக்குப்பிடிக்க மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தால் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்த இந்திய அணியால் 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து தரப்பில், லியாம் பிளங்கெட் 4, டேவிட் வில்லி, ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம், இங்கிலாந்து அணி தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது.

5. டோனி 33 ரன்கள் எடுத்தபோது, 10 ஆயிரம் ரன்கள் அடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் மற்றும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது ஜோஸ் பட்லரை கேட்ச் பிடித்து அவுட்டாக்கியதன் மூலம் ஆடம் கில்கிறிஸ்ட் 417, மார்க் பவுச்சர் 403, குமார் சங்ககராவுக்கு 402, அடுத்து 300 கேட்ச்களுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :