தடைகளை தகர்க்கும் பிரேசிலின் பெண் ஜுடோ பயிற்சியாளர்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், ஜப்பானில் நடந்த தனது முதல் ஜுடோ விளையாட்டு போட்டியில் ஒரு சிறுவனால் தூக்கி எறியப்பட்ட யூகோ ஃபூஜி, இந்த தற்காப்பு கலையை தான் மீண்டும் பழகப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.

பிரேசிலின் ஆண்கள் ஜுடோ பிரிவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணான யூகோ வரலாறு படைத்துள்ளார்.

பொதுவாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் பிரேசிலில், நாட்டின் புகழ்பெற்ற ஜுடோ திட்டத்தின் தலைமை பயிற்சியாளராக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருப்பது எண்ணி பார்க்க இயலாத ஒன்றாகும்.

தொழில்முறை விளையாட்டில், பெண்கள் பிரிவிலேயே பெண் பயிற்சியாளர் நியமிக்கப்படுவது அரிதாக உள்ள நிலையில், ஆண்கள் பிரிவின் பயிற்சியாளராக பெண் ஒருவர் இருப்பது மிகமிக அரிதான மற்றும் கேள்விப்படாத ஒன்றாகும்.

யூகோவின் நியமனம் எதிர்பார்க்கப்படாத ஒன்று. மேலும், ஜுடோ விளையாட்டில் மட்டுமல்ல பொதுவாக விளையாட்டு துறையில் பெண்களை பொருத்தவரை மிகவும் வரவேற்கத்தக்க அம்சமாக கருதப்படுகிறது.

பொதுவாக, பிரேசிலில் விளையாட்டுத்துறையில் பெண்கள் பாகுபாட்டையே எதிர்கொள்கின்றனர்.

பிரேசிலின் மிக பிரசித்திபெற்ற கால்பந்து விளையாட்டில்கூட பெண்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்பது பரவலாக கூறப்படும் குற்றச்சாட்டாகும்.

பிரேசில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த ஒரே பெண்ணும், அவர் நியமனம் செய்யப்பட்ட ஓராண்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

''இந்நிலையில், விளையாட்டுதுறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் யூகோவின் நியமனம்தான்'' என்று பிரேசிலின் ஜுடோ விளையாட்டு சம்மேளனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

''என்னிடம் உள்ள எல்லா திறமைகளையும் வீரர்களுக்கு பயிற்சியளிக்க பயன்படுத்தவுள்ளேன் என்று யூகோ தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption யூகோ பயிற்சியளித்த வீராங்கனை

''எனது பொதுவான ஆட்ட பாணியை அவர்களுக்கு நான் கற்றுக் கொடுப்பதில்லை. வீரர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் நான் பயிற்சியளிப்பேன்'' என்று யூகோ மேலும் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் ஆண்களுக்கு பயிற்சியளிப்பது சிரமமாக இருந்ததாக குறிப்பிட்ட யூகோ மேலும் கூறுகையில், ''ஆரம்ப நாட்கள் எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. பிறகு ஓவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக பயிற்சியளித்தது எனக்கு நம்பிக்கை அளித்தது'' என்று நினைவுகூர்ந்தார்.

பிரேசிலின் தலைமை பயிற்சியாளராக தான் நியமிக்கப்பட்ட பிறகு , பலம்,பாராட்டுக்கள் தனக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிடும் யூகோ, ''ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரேசிலில், ஆண்கள் பிரிவில் என்னால் தலைமை பயிற்சியாளராக வரமுடிகிறது என்றால், பெண்களுக்கான கதவுகள் திறக்க ஆரம்பித்துள்ளன என்பதற்கும் இதுவே அடையாளம்'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்