கிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா? - என்ன சொல்கிறார் கபில்தேவ்?

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தான் பொதுதேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வியாழக்கிழமை மாலை ஏறத்தாழ பாதியளவு முடிவுகள் வெளியான நிலையில், தனது கட்சி ஆட்சியமைக்கப் போவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இம்ரான்கானின் கட்சி முன்னிலை வகித்தாலும், அறுதிப் பெரும்பான்மை பெறுமா என்ற சந்தேகம் இன்னும் நிலவுகிறது.

இந்நிலையில், இம்ரான்கான் விளையாடிய காலகட்டத்தில் இந்திய அணியில் விளையாடிய வீரர்கள், அவருடனான தங்களது நினைவுகள் குறித்தும், இம்ரானின் தேர்தல் வெற்றி குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

கிரிக்கெட் சாதனைகள் மற்றும் பங்களிப்பில், இம்ரான்கானுக்கு சமமாக கருதப்படும் கபில்தேவ் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இம்ரானின் வெற்றி குறித்து நான் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். அவருடன் நீண்ட நாட்கள் விளையாடியவன் என்ற முறையில், பாகிஸ்தானின் பிரதமராக அவருக்கு வாய்ப்புகள் அதிகம் என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது'' என்றார்.

கிரிக்கெட் விளையாடிய காலத்தில் மிகவும் பாராட்டப்பட்ட இம்ரானின் தலைமைப்பண்பு, ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தளவு உதவியாக இருக்கும் என்று கேட்டதற்கு, ''அவர் தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை நிரூபிக்க நாம் அவருக்கு தேவையான காலத்தை கொடுக்க வேண்டும். இம்ரான் சிறப்பாக பங்களிப்பார் என்று நான் நம்புகிறேன்'' என்று கபில் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தல் வெற்றிக்காக இம்ரானுக்கு கபில்தேவ் வாழ்த்து தெரிவித்தாரா என்று கேட்டதற்கு, ''பிபிசி மூலமாகவே இம்ரானுக்கு தற்போது நான் வாழ்த்து அனுப்புகிறேன்'' என்றார் கபில்தேவ்.

''ஒரு கிரிக்கெட் வீரராக இருந்த இம்ரான்கான், ஒரு நாட்டின் பிரதமராக உருவெடுத்திருப்பது அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் பெருமை தரும் '' என்று கபில்தேவ் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கபில்தேவ்

கிரிக்கெட் கேப்டன்; நாட்டின் பிரதமர் - என்ன வித்தியாசம்?

''இம்ரான் கேப்டனாக இருந்தபோது அணியில் யார் இருக்க வேண்டும், இருக்க வேண்டாம் என அனைத்து முடிவுகளையும் அவரே எடுத்தார்'' என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனீந்தர்சிங் நினைவுகூர்ந்தார்.

படத்தின் காப்புரிமை AFP

அவர், மேலும் கூறுகையில், ''ஆனால், கிரிக்கெட்டில் 15, 16 பேருக்கு மட்டும்தான் அவர் தலைவர். அவர்களை நிர்வகித்தால் மட்டும் போதுமானது. ஆனால், ஒரு நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பது முற்றிலும் மாறுபட்டது''.

''அது மட்டுமல்லாமல் ராணுவம் மிகவும் பலமாக இருக்கும் பாகிஸ்தானில், அவர்களை மீறி, அவரது ஆட்சி அதிகாரம் எந்தளவு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்'' என்று மனீந்தர்சிங் தெரிவித்தார்.

ராணுவத்தை மீறி இம்ரான் எப்படி சாதிப்பார்?

''கிரிக்கெட் கேப்டனாக அதிக உத்வேகத்துடன் இருந்த இம்ரான்கான், ஆட்சி பொறுப்பில் எவ்வாறு செயல்பட போகிறார் என்பதை பார்க்க எனக்கு மிகவும் ஆவலாக உள்ளது. அவரது சமரசம் இல்லாத தலைமைப்பண்பு மற்றும் அணுகுமுறையை இம்ரானால் தொடர்ந்து காப்பாற்ற முடியுமா என்று போகப்போகத் தான் தெரியும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

'' கிரிக்கெட்டில் தான் முடிவெடுத்ததை செயல்படுத்த அவருக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், பிரதமராகி அனைத்து முடிவுகளையும் அவரால் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவு அவருக்கு அதிகாரம் இருக்குமா? கிரிக்கெட்டில் நாம் பார்த்த இம்ரானின் அணுகுமுறை இனியும் அவ்வாறே தொடரும் என்பதை எதிர்பார்க்கமுடியாது'' என்று மனீந்தர்சிங் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இம்ரான் விளையாடிய காலகட்டத்தில் பல டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய மதன்லால்,''அவரது தலைமைப்பண்பு மற்றும் அணுகுமுறை நிச்சயம் அரசியலில் இம்ரானுக்கு பலன் அளிக்கும். எப்போதும் நேர்மறையாக சிந்திக்கும் இம்ரான்கானுக்கு, அந்த எண்ணம் கைகொடுக்கும்'' என்று கூறினார்.

''கடும் முயற்சி மேற்கொண்டு பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்டிய புற்றுநோய் மருத்துவமனை, அவருக்கு பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கையை பெற்றுத் தந்திருக்கலாம்'' என்று மதன்லால் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை PTI

இந்திய அணியில் இம்ரானின் நெருங்கிய நண்பர்கள் யார்?

'' அவர் பலரிடமும் நட்பாக பழகுவார். குறிப்பாக கூறவேண்டுமானால், சுனில் கவாஸ்கர் மற்றும் கபில்தேவ் ஆகிய இருவரும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள்'' என்று மதன்லால் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :