கிரிக்கெட்டின் 'ரொனால்டோ' விராட் கோலி - இங்கிலாந்தில் மிளிர்வாரா? - ஓர் அலசல்

  • சைமன் ஹியூக்ஸ்
  • விளையாட்டுத்துறை விமர்சகர்

பர்மிங்கமில் இங்கிலாந்து - இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இது இங்கிலாந்து விளையாடும் 1000வது டெஸ்ட் போட்டி. 1000 டெஸ்ட் போட்டிகள் விளையாடும் முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிரிக்கெட்டின் 'கிறிஸ்டியானோ ரொனால்டோ' விராட் கோலி. அட்டகாசமான திறமையை கொண்டிருக்கும் கோலி, தானும் தனது அணியும் உலகில் தலை சிறந்து விளங்கவேண்டும் என எண்ணுபவர்.

இருவரும் வெளிப்படையான உறுதிப்பாட்டோடு களத்தில் விளையாடுபவர்கள். தத்தமது அணிகளின் அதிமுக்கிய வீரர்களாக விளங்கிவருபவர்கள். தோல்வியை விரும்பாதவர்கள்; தோல்வியை தனிப்பட்ட அவமானமாக கருதும் ஆக்ரோஷ உணர்வோடு விளையாடக்கூடியவர்கள்.

ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டெஸ்ட் தொடரில் கோலி சிறப்பாக விளையாடவில்லை. அவருக்கு ஓர் சோதனை காலமாக அப்பயணம் அமைந்தது. பேட்டிங்கில் அவரது சராசரி 13 ரன்கள் மட்டுமே. ஜேம்ஸ் ஆண்டர்சன் கோலியை ஸ்விங் பந்துகளில் வறுத்தெடுத்தார்.

கோலி இப்போது இந்திய அணிக்கு கேப்டன். அவரது கிரிக்கெட் பக்கங்களில் பல வெற்றிகளுக்கும் ஏகப்பட்ட சாதனைகளுக்கும் இடையே ஒரு சிறு குறையாக 2014 இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இருக்கிறது. பழைய கணக்கை தீர்க்க விராட்கோலிக்கு தற்போது ஒரு வாய்ப்பு கைகூடியிருக்கிறது.

இம்முறை இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தும் பட்சத்தில் டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு நம்பர் 1 இடம் கிடைக்கும். இங்கிலாந்து மண்ணில் அவர் கணிசமான ரன்களை எடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்தை முந்தி தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக முடியும்.

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் அதிக சராசரி வைத்திருப்பவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி இருக்கிறார். ஜோ ரூட், கேன் வில்லியம்சன், புஜாரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

உடற்பயிற்சியில் கவனம்

கோலி தனது பதின்பருவத்தில் மிகவும் திறமை வாய்ந்த வீரராகவும் சதங்களை விளாசுவதை வழக்கமாக வைத்திருந்தவராகவும் விளங்கினார். 2008-ல் அவர் தலைமையில் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்றது.

ஆனால் நெடுங்காலமாக அவர் ஒரு நாள் போட்டிகளுக்கான வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டிருந்தார். அவரது முதல் 20 டெஸ்ட் இன்னிங்ஸ் சராசரி முப்பதுகளின் மத்தியிலேயே இருந்தது.

அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி எதுவெனில், 2012 ஐபிஎல் சீசனுக்கு பிறகு தன்னுடைய உடல் கட்டுக்கோப்பாக இல்லை என அவர் உணர்ந்ததே.

''நான் உடற்பயிற்சி மேற்கொண்ட முறை மோசமானதாக இருந்தது. நான் மோசமான உணவு பழக்கத்தில் இருந்தேன். ஒருநாள் குளித்து முடித்துவிட்டு எனது உடலை கண்ணாடியொன்றில் பார்த்தேன். ஒரு சிறந்த தொழில்முறை கிரிக்கெட்டராக வேண்டுமெனில் நான் இப்படியொரு உடற்கட்டில் இருக்கக்கூடாது என சொல்லிக்கொண்டேன்'' என்கிறார் விராட் கோலி.

''நான் இப்போது இருக்கும் உடல் எடையைவிட கிட்டதட்ட 11 அல்லது 13 கிலோ அதிக எடையில் இருந்தேன். உண்மையாகவே எனக்கு சதைபற்று இருந்தது. அதை உணர்ந்தபிறகு மறுநாளே எனது உணவு பழக்கம் மற்றும் என்னுடைய உடற்பயிற்சி முறையை மாற்றிக்கொண்டேன். தினமும் ஒன்றரை மணிநேரம் உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக பயிற்சிசெய்தேன். கோதுமை உணவுகள், குளிர்பானங்கள், கேக் முதலான டெசர்ட் வகை உணவுகள் அனைத்தையும் தவிர்த்தேன். அது மிகவும் கடினமான காலமாக இருந்தது'' என்கிறார் கோலி.

இதன் பயனாக அவர் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த வீரராக உருவெடுக்கத் துவங்கினார். பல போட்டிகளில் வெற்றி நாயகராக விளங்கியது மட்டுமின்றி தனது அட்டகாசமான டிரைவ் மற்றும் புல் ஷாட்களால் ஆதிக்கம் செலுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் 2014-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது அவரது பேட்டிங் யுக்தி எடுபடவில்லை.

முன் காலை நன்றாக பிட்சில் அழுத்தம் கொடுத்து ஊன்றி தனது உடலுக்கு அப்பால் செல்லும் பந்துகளை விளையாடும் பழக்கம் உடையவர் கோலி. ஸ்விங் ஆகாத வெள்ளை பந்துகளை தட்டையான பிட்சுகளில் ஒருநாள் போட்டிகளில் பௌண்டரி அடிக்க இந்த யுக்தி சிறப்பான முறையில் பயன்படும்.

ஆனால் ஆண்டர்சன் மிகவும் கட்டுக்கோப்பாக சிவப்பு டியூக் பந்துகளை வீசும்போது கோலியின் துல்லியமற்ற கால் நகர்த்தல்கள் மற்றும் மூர்க்கத்தனம் நிறைந்த அணுகுமுறை அவருக்கு பாதகம் விளைவித்தது. அத்தொடரில் ஏழு முறை பந்து பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப் வீரரிடம் தஞ்சமடைந்தது. இதில் நான்கு முறை ஆண்டர்சன் பந்தில் கோலி ஆட்டமிழந்தார். இத்தொடரில் அவரது அதிகபட்சம் 39 ரன்கள். இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

பட மூலாதாரம், Hawk-Eye

அற்புதமான கேப்டன்?

தோனியிடம் இருந்து 2014-ன் கடைசி நாள்களில் தோனி டெஸ்ட் கேப்டன் பதிவியை உதறியது மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் இருந்தே ஓய்வு பெற்றார்.

அப்போது இந்திய அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு கோலி வசம் வந்தது. 2014-ன் இறுதியில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் இருந்தது. வங்கதேசம் எட்டாவது இடத்தில் இருந்தது. கோலி அப்போது பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 15-வது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், மீண்டும் தீர்க்கமாக உடற்பயிற்சியைத் துவங்கினார். இம்முறை எடை பயிற்சியில் கவனம் செலுத்தினார். தனது கால்களை வலுவாக்கினார். தனது சகாக்களையும் அவ்வாறு பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தினார்.

அவரது அட்டகாசமான கட்டுக்கோப்புடன் கூடிய உடற்கட்டு கோலியின் ரன்கள் எகிற உதவியது. கடந்த இரு வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சராசரி 91. பத்து ஒருநாள் சதங்களை விளாசியுள்ளார். இதில் பல சதங்கள் சேஸிங்கில் எளிதில் நெருங்க முடியாத இலக்கை நோக்கித் துரத்தும்போது எடுக்கப்பட்டவை.

22 யார்டு பிட்சில் விரைவாக இரண்டு ரன்கள் ஓடி எடுப்பதில் கோலி வல்லவர். கிட்டத்தட்ட ஆறு நொடியில் 44 யார்டு தூரம் ஓடுகிறார்.

வலுவான அவரது கால்கள் வேகமாக ஓடுவதற்கு துணைபுரிகிறது. மேலும் ஒரு ஷாட்டை கட்டுப்பாட்டோடு விளையாடவும் அவருக்கு வலுவான கால்கள் உதவுகின்றன.

அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றில் முதன்முதலாக அவர் கேப்டன் பதவி ஏற்று விளையாடியபோது இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார்.

அதிகாரபூர்வமாக முழு நேர டெஸ்ட் கேப்டன் ஆன பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சராசரி 65. பதினான்கு சதங்கள் விளாசியுள்ளார். அவரது தலைமையில் இந்தியா ஒரே ஒரு தொடரை மட்டுமே இழந்துள்ளது.

கோலியின் டெஸ்ட் சராசரி

  • 2011ல் 22.44
  • 2012ல் 49.21
  • 2013ல் 56
  • 2014ல் 44.57
  • 2015ல் 42.66
  • 2016ல் 75.93
  • 2017ல் 75.64
  • 2018ல் 47.66

விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் இந்தியாவின் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறப்பானவர்களாக அவர்களது காலகட்டத்தில் விளங்கினார்கள் எனச் சொல்ல முடியாது. முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் மற்றும் தற்போதைய முன்னணி வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், கோலி இந்தியாவின் அனைத்து காலகட்டத்தின் அதிசிறந்த பேட்ஸ்மேன் என குறிப்பிடுவதற்கு பகுதியளவு இக்காரணமும் இருக்கிறது.

'' கோலியின் தன்னம்பிக்கை அபரிதமானது. அதுதான் அவரை உண்மையில் தனித்து தெரியவைக்கிறது. ஆண்டர்சனுக்கு எதிராக விளையாடச் செல்லும்போது அவரிடம் நடுக்கத்தை நீங்கள் பார்க்க முடியாது. '' என்கிறார் 1987-96 காலகட்டத்தில் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மஞ்சரேக்கர்.

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்து எப்படி அவரை தடுத்து நிறுத்த முடியும்?

கோலி ரன்கள் குவிக்கத் துவங்கிவிட்டால் அவரை தடுத்து நிறுத்துவது கடினம். 112 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் 37 முறை அரை சதம் விளாசியுள்ளார். அதில் 21 முறை அரை சதத்தை சதமாக்கியுள்ளார்.

டான் பிராட்மேன் மட்டுமே விளையாடிய டெஸ்ட் இன்னிங்ஸ் மற்றும் சதங்கள் இடையேயான விகிதத்தில் முதலிடம் வகிக்கிறார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 126 இன்னிங்ஸ்களில் 53 அரை சதம் அடித்துள்ளார். அதில் 13 முறை அவரது ஸ்கோர் மூன்று இலக்க எண்களை எட்டியது.

காணொளிக் குறிப்பு,

“ரஜினியும் வேண்டும், கமலும் வேண்டும்”

இங்கிலாந்து கோலியை வெல்லவேண்டுமெனில் அவரது விக்கெட்டை மிக விரைவில் வீழ்த்த வேண்டும். இன்னிங்ஸ் துவக்கத்தில் ஆஃப் சைடு ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விளாச முற்படும் வழக்கம் கொண்டவர் கோலி. அவர் பந்தை சரியாக கணித்து அடிக்காமல் விடுவதில் வல்லவரல்ல. இந்தப் புள்ளியில்தான் இங்கிலாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்த நேரிடும். கோலியின் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டை இழந்தமுறையை உற்றுநோக்கினால் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான முறை அவரது பேட்டின் விளிம்பில் பட்டு பந்து விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப் வீரரிடம் தஞ்சமடைந்ததை கவனிக்கலாம்.

கோலி சில மைக்ரோ நொடிகள் முன்னதாக முன் காலை நகர்த்திவிடுவது வழக்கம். ஆகவே கோலிக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து பந்துகளை வீசி வந்து, இடையில் மிடில் ஸ்டம்பை குறிவைத்து வீசினால் கோலி எல்பி முறையில் ஆட்டமிழக்கக்கூடும் என்பதே இங்கிலாந்தின் திட்டமாக இருக்கலாம்.

ஆனால் கோலி இப்போது மிகவும் அறிவாளி. சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் வேகப்பந்து தாக்குதல்களில் அவரது பேட்டிங் சராசரி 47 என்பது கவனிக்கத்தக்கது.

கோலி இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவாரா?

ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் எப்படி பந்துவீசுகிறார்கள் என்பதை பொறுத்தே இதற்கு விடை அமையும். கோலி பேட்டிங் செய்ய வரும்போதே இவ்விருவரில் ஒருவர் பந்துவீச வேண்டியதிருக்கும். சில சூழ்நிலைகள் ஸ்விங் மட்டுமே கோலியை வீழ்த்த போதுமானதாக இருக்காது.

ஆட்டத்தின் முதல் 20 ஓவர்களில் கோலி பிட்சுக்கள் வருவது முக்கியமானது. ஏனெனில் பந்து அப்போது கடினமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். நன்றாக ஸ்விங் ஆகும்.

ஆகவே இங்கிலாந்து பௌலர்கள் கோலியை வீழ்த்துவதற்கு திட்டமிட்டால் முதலில் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை வீழ்த்தவேண்டும். அப்படிச் செய்தால் கோலியை வீழ்த்த நல்ல வாய்ப்புகள் அமையக்கூடும்.

ஆனால் இந்தியாவின் டாப் ஆர்டரில் களமிறங்கும் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தங்களது பணியை செவ்வனே செய்யும்பட்சத்தில் கோலியின் சராசரி 50ஐ தாண்டினால் இந்தியா வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு இருக்கும். அப்படி நடந்தால் தொடரின் முடிவில் இந்திய கிரிக்கெட்டின் புது ராஜாவாக கோலி அதிகாரபூர்வமாக முடி சூடுவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :