விராட் கோலி : சச்சினுக்கு பிறகு டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் முதலிடம்

விராட் கோலி படத்தின் காப்புரிமை Philip Brown

விராட் கோலி இன்று வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடம் பிடித்த்துள்ளார்.

இந்திய அணி சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 194 ரன்களை துரத்தும்போது 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதையடுத்து இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் கேப்டன் கோலி இங்கிலாந்து மண்ணில் சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் கடந்தார். முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்கள் எடுத்தார்.

32 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் 29 வயது வீரர் கோலி.

ஸ்மித் தற்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க 12 மாத தடையை எதிர்கொண்டுள்ளார்.

இந்திய வீரர் விராட் கோலி 67 போட்டிகளில் 22 சதம் விளாசியுள்ளார். ஏழு வருடங்களுக்கு பிறகு இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

முன்னதாக 2011-ம் ஆண்டு முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.

படத்தின் காப்புரிமை AFP

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஏழாவது இந்திய வீரர் விராட் கோலி. முன்னதாக டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கௌதம் கம்பீர், சுனில் கவாஸ்கர், விரேந்தர் சேவாக், திலீப் வெங்கர்சர்க்கர் ஆகியோர் முதலிடத்தில் இருந்துள்ளனர்.

பேட்டிங் தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த திமுத் கருணரத்னே 24 இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்துக்கு வந்துள்ளார்.

பௌலிங் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இரண்டாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ககிசோ ரபாடா மற்றும் மூன்றாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா உள்ளனர். அஷ்வின் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஹாஷிம் ஆம்லா, அலெஸ்டர் குக் நான்கு இடங்கள் சரிந்துள்ளனர்.

ஒருநாள் தரவரிசை பட்டியலை பொறுத்தவரையில் கோலி முதலிடம் வகிக்கிறார். பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான் 22 இடங்கள் முன்னேறி 16-வது இடத்திற்கு வந்துள்ளார்.

இந்திய அணி ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்