WWE : கேன், ஹல்க்ஹோகன், ராக் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

  • 7 ஆகஸ்ட் 2018

தொழில்முறை மல்யுத்த வீரராக தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கடும் அர்ப்பணிப்பும், மிகப்பெரிய அளவில் தனிப்பட்ட தியாகமும் செய்ய வேண்டியிருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ட்வைன் தி ராக் மற்றும் ஹல்க் ஹோகன்

எப்போது வேண்டுமானாலும் மிகக்கடுமையான காயத்தை சந்திக்கலாம் எனும் நிலையோடு கடுமையான பத்தியமும் மேற்கொள்வது ஒரு நட்சத்திரமாக உருவெடுப்பதற்கான சாதாரண வழி அல்ல.

பெரும்பாலான விளையாட்டுகளை போலவே வளையத்திற்குள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

கேன் என ரசிகர்களால் அறியப்படும் கிளென் ஜேக்கப்ஸ் உங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடும். அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் மேயராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்த 51 வயது WWE நட்சத்திரம்.

வரியை கட்டுக்குள் வைப்பது மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரசாரம் செய்து வந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த கிளென் ஜேக்கப்ஸ் நாக்ஸ் கவுன்டியில் மூன்றில் இரு பங்கு ஓட்டுகளை வென்றார்.

ஆனால் தனது வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயத்தை வெற்றிகரமாக எழுதும் முதல் மல்யுத்த வீரர் இவர் என்பது அர்த்தம் இல்லை.

களத்திற்கு அப்பால் வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயத்தை வெற்றிகரமாக தொடங்கிய ஐந்து பேர் பற்றிய குறிப்பு இங்கே.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெஸ்ஸி வென்ச்சுரா

1. ஜெஸ்ஸி வென்ச்சுரா

'தி பாடி' என செல்லமாக அழைக்கப்படும் ஜெஸ்ஸி வென்ச்சுரா ஒரு மல்யுத்த வீரராகவும் மற்றும் வர்ணனையாளராகவும் 1970 மற்றும் 1980களில் புகழ் பெற்றார்.

அதன்பிறகு மின்னிசோட்டாவின் நகர மேயர் ஆனார் அதன் பிறகு மாகாண கவர்னராகவும் பொறுப்பேற்றார்.

அவர் தேர்தலில் நின்று பிரசாரம் மேற்கொண்டபோது அது ஒரு விளம்பரம் தேடும் செயல் என ஏளனம் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால் விமர்சனங்களைத் தாண்டி அவர் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தோற்கடித்தது அரசியல் அரங்கிற்கு அதிர்ச்சி தந்தது.

வெற்றி பெற்றபிறகு '' இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?'' எனக்கேட்டார் வென்ச்சுரா.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ட்வைன் ஜான்சன்

2. ட்வைன் ஜான்சன்

'தி ராக்' என்ற பெயர் WWE ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம். நம்பிக்கையளிக்கும் விதமான ஒரு கால்பந்து வீரராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஜான்சன் பின்னாளில் அதிகம் மதிக்கப்படும் ஒரு மல்யுத்த வீரராக உருவெடுத்தார்

'தி ராக்' என அறியப்படும் ட்வைன் ஜான்சன் 1990களின் இறுதியில் ஸ்டீவ் ஆஸ்டின் மற்றும் ட்ரிபிள் ஹெச் போன்றவர்களுடன் தொடர்ச்சியாக மல்யுத்த வளையத்தில் காணப்பட்டார்.

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் நடிப்புத்துறைக்கு திரும்பினார். ஹெர்குலிஸ், சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ், சான் ஆண்ட்ரியஸ் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிப்புத்துறையில் ஜான்சன் பெரும் வெற்றிபெற்றார். மேலும், கடந்த வருடம் ஹாலிவுட்டில் மிக அதிகம் சம்பளம் பெரும் நடிகர்களில் ஒருவர் என அறியப்பட்டார்.

அவருடைய சக WWE நட்சத்திரங்களான ஜான் சினா மற்றும் டேவ் பாட்டிஸ்ட்டா ஆகியோரும் சினிமா துறையில் நுழைந்தனர். ஆனால் தி ராக் அளவுக்கு வேறு யாரும் ஹாலிவுட்டில் வெற்றியடையவில்லை.

மல்யுத்தத்தில் இருந்து அரசியல்வாதி வாழ்க்கைக்கு ஜான்சனும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். 2020-ல் அதிபர் பதவிக்கு குறிவைப்பதாக முன்னதாக கூறியிருந்தார்.

''நான் அதிபர் பதவியில் போட்டியிடுவது குறித்து தீவிரமாக எண்ணிப்பார்த்தேன்.ஆனால் எனக்கு வெளியே செல்லவும் கற்றுக்கொள்ளவும் நேரம் தேவை'' என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹல்க் ஹோகன்

3. ஹல்க் ஹோகன்

1977-ல் முதன்முறையாக ஹல்க் ஹோகன் மல்யுத்தத்தில் களமிறங்கினார். தனது தனித்துவமான மீசையுடன் வளையத்தில் வெற்றி கண்டு முக்கியமான வீரராக உருவெடுத்தார்.

அவரது உச்ச காலத்தில் பல முறை WWE டைட்டில் வென்றுள்ளார்.

ஹல்க் ஹோகன் பல துறைகளில் இறங்கியுள்ளார். தொலைக்காட்சியில் அவரது சொந்த ரியாலிட்டி ஷோவில் தனது குடும்பத்தோடு பங்கேற்றார்.

'Hogan Knows Best' எனப் பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சி இரண்டு வருடங்கள் ஓடியது. தீம் ரெஸ்ட்டாரென்ட் உள்ளிட்ட பல உணவகங்களை மின்னிசோட்டாவில் அவர் தொடங்கினார். மேலும் குரல் நடிகராகவும் விளங்கினார்.

ஆனால் சமீபத்திய வருடங்களில் அவரது சொந்த பிரச்னைகள் அவரது புகழுக்கு களங்கம் விளைவித்தது. இன வெறியை கொண்ட அவரது பேச்சு ஆடியோ வடிவில் வெளியானதால் WWE அவருடனான ஒப்பந்தத்தை 2015-ல் முறித்துக்கொண்டது. ஆனால் தற்போது அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க நிறுவனம் முன்வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹல்க் ஹோகன்

4. டென்னிஸ் நைட்

ஹல்க் ஹோகன் மற்றும் தி ராக் போல மிகப்பெரிய அளவிலான புகழ் பெறாவிட்டாலும் டென்னிஸ் நைட் தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் நீடித்தது.

WWF மற்றும் WCE ஆகியவற்றுடன் பல்வேறு மாற்றுப்பெயர்களில் வேலை செய்தார். மிடியன் மற்றும் டெக்ஸ் ஸ்லஜெங்கர் என்ற பெயரில் அவர் அறியப்பட்டார். 1990 களின் இறுதியில் அவர் WWE குழு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

மல்யுத்த சூப்பர் ஸ்டார் அண்டர்டேக்கர் தலைமையிலான அணியில் இருந்து அவர் சண்டை போட்டார்.

மல்யுத்தத் துறையில் ஓய்வு பெற்றபிறகு மல்யுத்த வளையத்துக்கு பதிலாக சமையல் அறையை தனது வாழ்க்கை தொழிலாக தேர்ந்தெடுத்தார். சமையல்காராக உருவான அவர் ஃபுளோரிடாவில் கிளியர் வாட்டர் என்ற பெயரில் கேட்டரிங் நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

5. டெப்ரா மிசெலி

அலுன்ரா பிளேஸ் மற்றும் மடுசா என்ற பெயரில் அறியப்பட்ட டெப்ரா மிசெலி கிட்டத்தட்ட 20 வருடங்கள் உயர்ரக மல்யுத்தத்தில் பங்கேற்றார்.

பள்ளியில், அவர் தடகளம் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் வெற்றி கண்டார் ஆனால் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றபிறகு வித்தியாசமான ஒரு துறையில் அவர் வெற்றி கண்டார்.

மான்ஸ்டர் டிரக் ஓட்டுநராக 2000த்தில் வாழ்க்கையை தொடங்கிய அவர் அத்துறையில் இருந்த மிகச்சில பெண் ஓட்டுனர்களில் ஒருவரானார்.

மான்ஸ்டர் ஜாம் உலக இறுதி பந்தைய சாம்பியன்ஷிப் தொடரை 2005-ல் மிசெலி வென்றார் . இத்தொடரில் அவரது பயிற்றுநரான டென்னிஸ் ஆண்டர்சன். இத்தொடரை வென்ற முதல் பெண் இவர் ஆவார்.

சமீபத்திய வருடங்களில் அவர் சொந்தமாக நடத்திவரும் வானொலித் தொடரில் பல மல்யுத்த ஜாம்பவான்களை அவர் பேட்டி கண்டு வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்