செவிப்புலன் குறைபாடுள்ள தீக்ஷா: முன்னணி கோல்ஃப் வீராங்கனையாக உருவெடுத்தது எப்படி?

  • குர்ப்ரீத் கெளர்
  • பிபிசி செய்தியாளர்
தீக்ஷா

பட மூலாதாரம், DIKSHA DAGAR

படக்குறிப்பு,

தீக்ஷா

தந்தை காகிதத்தில் எழுதிக் கொடுத்த வார்த்தைகளை படித்தார் தீக்ஷா. பின்னர் மைதானத்தில் இருந்த சிறிய பந்தின் மீது கவனம் செலுத்தி கோல்ஃப் ஸ்டிக்கால் துல்லியமாக ஷாட் அடித்தார்.

ஷாட் அடித்த ஒலியோ, அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் எழுப்பிய கரவொலியோ தீக்ஷாவின் காதுகளில் விழவில்லை.

பிறப்பில் இருந்தே காது கேட்க முடியாத தீக்ஷாவுக்கு காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் உதவியுடன் 60 முதல் 70 சதவிகித ஒலியையே அவரால் கேட்கமுடியும். அப்போது ஏன் அவருக்கு காது கேட்கவில்லை என்ற கேள்வி எழுகிறதா? குறிப்பிட்ட தினத்தன்று மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் காது கேட்கும் கருவி வேலை செய்யவில்லை.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

உடல்ரீதியான குறைபாடு தீக்ஷாவின் வெற்றிப் பயணத்திற்கு தடைக்கல்லாக இருந்தாலும், அதையே வெற்றிப்படிக்கட்டாக ஏறி சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் தீக்ஷா.

ஆகஸ்டு 18ஆம் தேதியன்று ஜகார்தாவில் நடைபெறும் ஆசியப் போட்டிகளுக்கு தீக்ஷாவை தகுதிப் பெறச் செய்திருக்கிறது அவருடைய இயல்பான திறமையும், கடுமையான பயிற்சியும்.

டெல்லியில் வசிக்கும் தீக்ஷா, ஆகஸ்ட் 28 முதல் 26ஆம் தேதிக்குள் ஜகார்தாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார். குழுப் போட்டிகளிலும் பங்கேற்கும் அவர், இந்தியாவிற்கு கோல்ஃப் விளையாட்டில் முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

ஜப்பான், தென் கொரியா, சீன, தாய்பேய் மற்றும் தாய்லாந்து வீரர்களின் சவாலை எதிர்கொள்வார் தீக்ஷா.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

படக்குறிப்பு,

தனது தந்தை மற்றும் பயிற்சியாளர் நரேந்திர டாகருடன் தீக்ஷா

நம்பர் ஒன் அமெச்சூர் கோஃல்ப் வீராங்கனை என்ற இடத்தை மூன்று ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டுள்ள 17 வயது தீக்ஷா டாகரிடம் நாடு மிகுந்த எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளது. அவர் செய்துள்ள சாதனைகளும், அவரது தொடர் முயற்சிகளும் அந்த நம்பிக்கையை உறுதிபடுத்துவதோடு, அவரது விளையாட்டுத் திறமையையும் வெளிப்படுத்துகிறது.

ஆறு வயதிலேயே கோல்ஃப் விளையாட கற்றுக் கொடுத்த அப்பா

தீக்ஷாவின் அண்ணன் யோகேஷும் செவிப்புலன் குறைபாடு அதாவது கேட்கும் திறன் குறைபாடு கொண்டவர் என்பதால் தீக்ஷா பிறப்பதற்கு முன்னரே அவரது பெற்றோருக்கு கவலை இருந்தது.

அவர்கள் கடவுளிடம் பல கோரிக்கைகளை வைத்தனர், இடைவிடாமல் செய்த பிரார்த்தனைகள் பொய்த்துப்போக, தீக்ஷாவுக்கு மூன்று வயதானபோது, அவருக்கு கேட்பதில் குறைபாடு இருப்பதை பரிசோதனை முடிவுகள் உறுதிபடுத்தின.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

படக்குறிப்பு,

சகோதரர் யோகேஷுடன் தீக்ஷா

தீக்ஷாவின் தந்தை கர்னல் நரேந்திர டாகர் அந்த நாட்களை வருத்தத்துடன் நினைவுகூர்கிறார். "தீக்ஷாவுக்கும் செவிப்புலன் சரியில்லை என்பதை கேட்டபோது குடும்பத்தினர் அனைவரும் வருத்தத்தில் உறைந்து போய்விட்டோம். ஆனால் குழந்தைகள் இருவரும் இந்த குறைபாட்டால் பலவீனமாகக்கூடாது என்பதில் நானும் என் மனைவியும் உறுதியாக இருந்தோம்."

கர்னல் நரேந்திர டாகர் கோல்ஃப் விளையாட்டு வீரர். ராணுவத்தில் பணிபுரிந்தபோது விளையாட்டை நன்றாக கற்றுக் கொண்டார். தந்தை கோல்ஃப் விளையாடுவதை பார்த்த தீக்ஷாவுக்கும் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. ஆறு வயதிலேயே பிஞ்சுக்கைகளால் கோல்ஃப் ஸ்டிக்கை எடுத்தார் தீக்ஷா. தந்தையே மகளுக்கு குருவானார்.

இதனிடையில் தீக்ஷாவுக்கு கோச்லியர் இம்ப்ளாண்ட் (Cochlear implant) அறுவைசிகிச்சை நடைபெற்றது. இதனால் 60 முதல் 70 சதவிகிதம் வரை காது கேட்கும் திறன் தீக்ஷாவுக்கு ஏற்பட்டது.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

படக்குறிப்பு,

தந்தை கர்னல் நரேந்திர டாகருடன் தீக்ஷா

பேச்சுப் பயிற்சி மூலம் பேசும் திறனை வளர்த்துக் கொண்டார் தீக்ஷா. "காதில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் தீக்ஷாவால் ஒலிகளை கேட்க முடியும் என்றாலும் அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவர் நேரிடையாக தனது கண்ணால் ஒன்றை பார்க்காதபோது, அதன் ஒலியை கேட்க முடியாது."

"ஒரு சாதாரண குழந்தை உங்களுக்கு 10 அடி முன்னால் சென்றுக் கொண்டிருந்தால், குரல் கொடுத்தால் அவரால் கேட்கமுடியும், திரும்பி பார்ப்பார் அல்லது நடப்பதை நிறுத்துவார். ஆனால் தீக்ஷாவை பின்னால் இருந்து அழைத்தால் அது அவருக்கு கேட்காது. அவருக்கு முன் சென்று சொன்னால் தான் அவரால் கேட்க முடியும்."

பட மூலாதாரம், DIKSHA DAGAR

படக்குறிப்பு,

வீட்டில் கோல்ஃப் விளையாடும் தீக்ஷா

12 வயதில் முதல் போட்டி

தனது உடல் குறைபாட்டை தீக்ஷா எப்போதுமே பலவீனமாக நினைத்தது கிடையாது. வழக்கம் போல் பிற குழந்தைகளுடன் இணைந்து கல்வி கற்கிறார், சாதாரணமானவர்களுடன் இணைந்தே கோல்ஃப் விளையாடுகிறார்.

12 வயதில் முதல் முறையாக இந்திய கோல்ஃப் கூட்டமைப்பின் சப் ஜூனியர் பிரிவில் விளையாடினார். பிறகு அவரது கையிலிருந்த கோல்ஃப் மட்டை பந்துகளையும், துரத்தி வெற்றியை சுவைத்துக் கொண்டே இருக்கிறது.

சிறப்பாக விளையாடும் தீக்ஷா, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவிலும் நம்பர் ஒன் அமெச்சூர் கோல்ஃப் வீராங்கனை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

2015 முதல் தொடர்ந்து 'மகளிர் அமெர்ச்சூர் கோல்ஃபர்' பிரிவில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

உள்நாட்டு போட்டிகளில் மட்டுமல்ல, பல சர்வதேச போட்டிகளிலும் விளையாடியிருக்கும் தீக்ஷா, சிங்கப்பூரில் நடந்த போட்டிதான் அவர் பங்கெடுத்த முதல் வெளிநாட்டு போட்டி. அதில் மகளிர் அமெச்சூர் கோல்ஃப் குழுவில் தீக்ஷா பங்கேற்ற இந்திய அணி வெற்றி பெற்றது, தனியர் பிரிவிலும் தீக்ஷா முதலிடத்தை பிடித்தார்.

சர்வதேச கோல்ஃப் போட்டிகளில் வெளிநாட்டு மைதானம் ஒன்றில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணியில் தீக்ஷா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தீக்ஷா இதுவரை பங்கேற்ற போட்டிகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்திலும் உடல்ரீதியாக குறைபாடு இல்லாதவர்களுடனேயே போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியில் நடைபெற்ற செவிப்புலன் குறைபாடு உடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றார் தீக்ஷா.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

'US Professional Open Golfer's Play Off' போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய தீக்ஷா, அதே ஆண்டு நடைபெற்ற மலேசிய மகளிர் ஓபன் பட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். அங்கு நடைபெற்ற மகளிர் குழுவினர் போட்டியில் இந்திய அணி முதலிடத்தை பெற்றது.

தற்போது ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தீக்ஷா, அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான உலக சேம்பியன்ஷிப் போட்டிகளிலும் கலந்துக் கொள்வார்.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

படக்குறிப்பு,

விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருடன் தீக்ஷா டாகர்

கோல்ஃப் மீது காதல்

டென்னிஸ், பேட்மின்டன் மற்றும் நீச்சல் என பல விளையாட்டுக்களிலும் சிறப்பாக செயல்படும் தீக்ஷா, தொழில் ரீதியான விளையாட்டாக கோல்ஃப் விளையாட்டையே தேர்வு செய்திருகிறார்.

"கோல்ஃப் அமைதியாக நிதானமாக விளையாடும் விளையாட்டு, மூளையை பயன்படுத்தும் விளையாட்டு என்பதால் எனக்கு இது மிகவும் பிடிக்கும். மிக நீண்ட தொலைவுக்கு விரிந்து பரந்திருக்கும் பசுமை நிறைந்த கோல்ப் மைதானம் எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது." என்று கோல்ஃப் மீதான தனது காதல் பற்றி கூறுகிறார் தீக்ஷா.

"போட்டியில் அதிக சவால்கள் இருந்தால் எனது உற்சாகமும் அதிகமாகிறது. நான் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பது கோல்ஃப் விளையாடும் தருணங்களே" என்கிறார் தீக்ஷா.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

சவால்கள்

வெற்றிப்பாதையில் பயணித்தாலும் தீக்ஷா எதிர்கொள்ளும் சவால்களும் சாமானியமானவை அல்ல. விளையாட்டு மைதானத்தில் மட்டும் அல்ல, நிதர்சன வாழ்க்கையிலும் பல சவால்களை எதிர்கொள்கிறார் அவர்.

அமெச்சூர் கோல்ஃப் வீராங்கனை என்பதால், தொழில்முறை கோல்ஃப் ஆட்டக்காரர்களுக்கு கிடைப்பது போன்று பரிசுத்தொகையோ வேறுவிதமான நிதியுதவியோ தீக்ஷாவுக்கு கிடைப்பதில்லை. ஆனால், இந்திய கோல்ஃப் கூட்டமைப்பு மற்றும் ராணுவத்தின் உதவிகள் தீக்ஷாவுக்கு கிடைக்கிறது.

கோல்ஃப், அதிக செலவு பிடிக்கும் விளையாட்டாக இருப்பதால், கிடைக்கும் உதவிகள் தீக்ஷாவுக்கு போதுமானதாக இல்லை. உள்நாட்டில் நடைபெறும் போட்டி ஒன்றில் கலந்துக் கொள்வது என்றாலும் குறைந்த பட்சம் 35 முதல் 40 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தீக்ஷா ஆண்டொன்றுக்கு 20 க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துக் கொள்கிறார்.

தீக்ஷா இடது கை பழக்கமுள்ளவர் என்பதும் அவர் எதிர்கொள்ளும் சவால்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இடது கையால் விளையாட பயன்படுத்தப்படும் கோல்ஃப் விளையாட்டு கருவிகள் மிகவும் விலையுயர்ந்தவை என்பதோடு கிடைப்பதும் அரிது. ஒரு கோல்ஃப் கிட்டின் விலை மூன்று லட்சம் ரூபாய்.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

காது கேட்கும் கருவி

தீக்ஷாவிடம் உயர் தொழில்நுட்பம் கொண்ட காது கேட்கும் கருவி இருந்தாலும், அதற்கும் ஒருசில தொழில்நுட்ப வரம்புகள் உள்ளன. உதாரணமாக, காதுகேட்கும் கருவியின் பேட்டரி தீர்ந்துவிட்டால் தீக்ஷாவின் வாழ்க்கையே மெளனமாகிவிடும், அவரால் எதையுமே கேட்கமுடியாது.

ஒரு சம்பவத்தை தீக்ஷாவின் தந்தை சோகத்துடன் நினைவுகூர்கிறார். ஒரு முறை மிகவும் கோபமாக தீக்ஷாவை திட்டியபோது, அவரிடம் இருந்து எந்த எதிர்வினையுமே வரவில்லை. அவர் தன்னுடைய போக்கிலேயே இயங்கிக் கொண்டிருந்தார். கோபம் அடங்கிய பிறகு தான், மகளின் காது கேட்கும் கருவியின் பேட்டரி தீர்ந்து போயிருக்கலாம், அதனால் தான் தன்னுடைய திட்டுக்கு அவர் எதிர்வினையாற்றவில்லை என்பதை உணர்ந்திருக்கிறார் கர்னல் டாகர்.

அதே போல் சில நேரங்களில் அவருக்கு சரியாக கேட்காது என்று நினைத்துக்கொண்டு ஒரே விஷயத்தை நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, ஒரே விஷயத்தை எத்தனை முறை சொல்வீர்கள் என்று அலுப்புடன் கேட்பார் தீக்ஷா.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

கல்வி

12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான தீக்ஷா, விளையாட்டுப் போட்டிகளில் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு பயணிக்க வேண்டியிருப்பதால் தினசரி பள்ளிக்கு செல்லமுடிவதில்லை.

எனவே தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகே, தொழில்முறை கோல்ஃப் வீராங்கனையாக களம் இறங்கப் போவதாக தீக்ஷா விரும்புகிறார். 18 வயதில் அவர் தொழில்முறை ஆட்டக்காரராக மாறும் வாய்ப்பு இருக்கிறது. தான் வேறு யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை தீக்ஷா நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

தனது மகள் தீக்ஷா நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாடி நாட்டிற்காக தங்கப் பதக்கம் வெல்வார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் தந்தை கர்னல் டாகர்.

பட மூலாதாரம், DIKSHA DAGAR

படக்குறிப்பு,

குடும்பத்தினருடன் தீக்ஷா

தனது திறமையைப் பற்றியே அனைவரும் பேசவேண்டும், தனது உடல் குறைபாட்டைப் பற்றி பேச வேண்டியதில்லை என்பதே தீக்ஷாவின் விருப்பம்.

தங்கள் குழந்தைகள் எதாவது சாதிக்கவேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் முதலில் அவர்கள் திறமையையும், எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து, அதில் மேலும் திறன் பெற தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்று சொல்கிறார் தீக்ஷா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: