"கேரள மக்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்" - விராத் கோலி

  • 22 ஆகஸ்ட் 2018

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியை சமர்ப்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோலி இந்திய அணியின் வெற்றியை கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெல்ல, தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்ற இந்திய அணி, தொடரை கைப்பற்ற வேண்டுமென்றால் கட்டாயம் வென்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் நாட்டிங்காமில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா, இங்கிலாந்து முறையே 329, 161 ரன்கள் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் கிடைத்த 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி சதமும் (103), ஷிகர் தவான் (44), புஜாரா (72) , பாண்டியா (52) ஆகியோர் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 352 ரன்கள் குவித்தபோது டிக்ளேர் செய்தது.

எனவே, 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலெஸ்டர் குக்கும், ஜென்னிங்ஸும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களிடம் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் 62 ரன்ளுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. பின் ஜோஸ் பட்லர் - பென்ஸ்டோக்ஸ் ஜோடி இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 169 ரன்களை சேர்த்தனர்.

ஜோஸ் பட்லர் 106 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய பைர்ஸ்டோவ் (0), கிறிஸ் ஓக்ஸ் (4), ஸ்டுவர்ட் பிராட் (20), ஜேம்ஸ் ஆண்டர்சன் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணியால் 317 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. எனவே, 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலும் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியே தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முதல் இன்னிங்சில் 96 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்களும் குவித்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது பேசிய விராத் கோலி, "முதலிலும் முக்கியமானதுமாக, ஒரு அணியாக இந்த வெற்றியை கேரள மாநிலத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம்" என்று கூறினார்.

"மக்கள் மிகவும் துன்பப்பட்டு வரும் சூழ்நிலையில், எங்களால் இயன்றதை நாங்கள் செய்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சௌத்தாம்ப்டனில் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்