ஆசிய விளையாட்டு போட்டிகள்: அசத்தும் 60 வயதை தாண்டிய இந்திய வீராங்கனைகள்

படத்தின் காப்புரிமை HEMA DEORA/BBC

இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 67 வயது ஹேமா தியோராவும், அவருக்கு இணையான சுறுசுறுப்புடைய கிரன் நாடார், 79 வயதான ரீட்டா சோக்ஷியும் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்கள்.

ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரிட்ஜ் என்னும் சீட்டாட்டப் போட்டியில்தான் இவர்கள் இந்தியா சார்பாக விளையாட உள்ளனர்.

சுமார் 50 வயதுவரை தனது மகன்களை வளர்த்தெடுப்பதிலும், வீட்டை பராமரிப்பதிலும், தனது கணவரும், இந்தியாவின் முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சருமான முரளி தியோராவுடன் பயணம் மேற்கொள்வதிலும் ஹேமா தியோராவின் காலம் கடந்து சென்றது.

தனது பெற்றோர்கள் சீட்டாட்டங்களை செய்ய கூடாத விடயங்களில் ஒன்றாக குறிப்பிட்டு வந்த சூழ்நிலையில், தனக்கு திருமணமானதும் அந்நிலை மாறியதாக அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை HEMA DEORA/BBC

இடி, மழை, மின்னல் போன்ற எதையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 4 மணிக்கும் தன்னுடைய கணவரின் நண்பர்கள் சீட்டாட தங்களது வீட்டிற்கு வருவார்கள் என்று ஹேமா கூறுகிறார்.

எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருக்கும் அளவுக்கு இந்த சீட்டாட்டத்தில் என்னதான் இருக்கிறது தான் அப்போது வியப்புற்றதாக அவர் கூறுகிறார். அந்த தருணம் வரை பிரபல அரசியல்வாதி முரளி தியோராவின் மனைவி என்பதுதான் ஹேமாவின் அடையாளமாக இருந்தது.

தனது மகன்கள் பல்கலைக்கழக படிப்பிலும், கணவர் அரசியலிலும் மூழ்கிய பிறகு, தனது வாழ்க்கையில் ஏதோ வெற்றிடம் உள்ளதாக நினைக்க, பிரிட்ஜ் என்னும் ஒருவகை சீட்டாட்டத்தை ஹேமா கற்றுக்கொள்ள தொடங்கினார்.

"அப்போது இந்த விளையாட்டு குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதால் தொடக்கத்தில் மிகவும் சிரமாக இருந்தது. ஆனால், எனக்கு கிடைத்த அருமையான பயிற்சியாளரும், என்னுடைய உழைப்பும் விரைவில் கற்றுக்கொள்ள உதவியது" என்று கூறுகிறார் ஹேமா.

பிரிட்ஜ் விளையாட்டை கற்க தொடங்கிய சிறிது காலத்திலேயே, கிளப்புகள், போட்டி தொடர்களில் பங்கேற்று ஹேமா வெற்றிபெற தொடங்கினார்.

தன்னுடைய இணையுடன் சேர்ந்து முதல்முறையாக பிரிட்ஜ் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்றபோது, அரசியல்வாதியும் தனது கணவருமான முரளி தியோரா அதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டம் வழங்கியதை தன்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று அவர் கூறுகிறார்.

அடிப்படையில் கட்டட வடிவமைப்பாளரான ஹேமா, பில் கேட்ஸ் மற்றும் வாரன் பப்ஃபெட் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய பணக்காரர்களுடன் போட்டியிட்டுள்ளார்.

Image caption ரீட்டா

ஹேமாவைப்போன்றே 79 வயதாகும் ரீட்டா சோக்ஷியின் கதையும் சுவாரஸ்யம் குறைவில்லாதது. நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ள வீரர்களிலேயே ரீட்டாதான் மிகவும் வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1970களிலிருந்தே பிரிட்ஜ் விளையாட்டை விளையாடி வரும் ரீட்டாவுக்கு, பதக்கங்களை பெறுவது என்பது ஒரு பழக்கம் போன்றது. ஆனால், 79 வயதில் இந்தியா சார்பாக ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதை அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.

ரீட்டா ஒரு பிரிட்ஜ் போட்டியின்போது, மருத்துவரான சோக்ஷியை சந்தித்தார்; நண்பரான இருவரும் இணைந்து போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்கள். இந்நிலையில், ரீட்டாவின் முதல் கணவர் உயிரிழக்க, அவரது விளையாட்டு இணையான டாக்டர் சோக்ஷி வாழ்கை துணையானார்.

ஆனால், ரீட்டாவின் மகிழ்ச்சி சிறிதுகாலத்திற்கே நிலைத்தது. ஏனெனில், அவரது இரண்டாவது கணவரும் இணைந்த சிறிது காலத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரது மகன்களும் மேற்படிப்பிற்காக லண்டனுக்கு சென்றனர். ஆனால், ரீட்டா தனித்திருப்பதாக உணரவில்லை. அதன் பிறகு பிரிட்ஜ் விளையாட்டில் கூடுதல் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

Image caption கிரண்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ள பிரிட்ஜ் அணியில் 67 வயதாகும் கிரண் நாடாரும் ஒருவர். கலைப்பொருட்கள் மீது பேரார்வம் கொண்ட கிரணின் கணவர் போர்ப்ஸ் இதழின் உலகின் முக்கிய 2000 நிறுவனங்கள் பட்டியலிலுள்ள ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தை தோற்றுவித்தவர்.

ஆனால், வல்லமைமிக்க பிரிட்ஜ் விளையாட்டு வீரர் என்ற தனக்குரிய அடையாளத்தை கிரண் பெற்றிருந்தார்.

இந்திய பிரிட்ஜ் அணியினருக்கு ஒரு பெரும் சவால் காத்திருக்கிறது. பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட இவர்கள், வயது மூப்பின் காரணமாக பல்வேறு நோய்களுக்காக மருந்துகளை உண்டுவருகின்றனர்.

இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் இந்தியா பிரிட்ஜ் அசோசியேஷன், இதுகுறித்து தேசிய போதை மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளது.

"ஆசிய விளையாட்டு போட்டி இந்தியாவில் பிரிட்ஜ் விளையாட்டிற்கும், மற்ற சீட்டாட்டத்திற்கும் இருந்து இருந்து வரும் களங்கத்தை குறைப்பதற்கும், விளம்பர ஆதரவாளர்களை பெருக்குவதற்கும் பயன்படும் என்று நம்புகிறோம்" என்று இந்திய பிரிட்ஜ் அசோசியேஷனை சேர்ந்த ஆனந்த் சமண்ட் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இந்தியாவின் பல வீடுகளில் சீட்டாட்டம் விளையாடுவது, குறிப்பாக பெண்கள் சீட்டாட்டம் விளையாடுவது தவறான விடயமாக பார்க்கப்படுகிறது.

மேலும், உங்களுக்கு எவ்வளவு வயதானாலும், நல்ல ஞாகப சக்தி உள்ளவரை பிரிட்ஜ் விளையாடலாம் என்று ஹேமா தியோரா கூறுகிறார்.

"எனக்கும் தொடக்கத்தில் பிரிட்ஜ் விளையாட்டை பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், நீங்கள் இந்த விளையாட்டில் நேரத்தை செலவிட்டால், உங்களுடைய வயதான காலத்தில் தனித்திருப்பதை போன்று உணரமாட்டீர்கள்" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: