முதல்முறையாக தங்கம் வெல்லாத இந்தியா : கபடியில் ஆதிக்கம் முடிவு பெறுகிறதா?

முதல்முறையாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் கபடி போட்டி பிரிவுகளில் தங்கப்பதக்கம் எதுவும் இல்லாமல் நாடு திரும்புகிறது இந்தியா.

படத்தின் காப்புரிமை Twitter

வியாழக்கிழமை நடந்த ஆண்கள் கபடி அரையிறுதி போட்டியில் 18-27 என்ற புள்ளிகணக்கில் இரான் அணியிடம் இந்தியா தோல்விடைந்த நிலையில், மேலும் ஓர் அதிர்ச்சியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் பிரிவு இறுதியாட்டத்தில் இரான் அணியிடம் 24-27 என்ற புள்ளிகணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.

இதனால் , ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கபடி விளையாட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட 1990-ஆம் ஆண்டு முதல் 7 முறை தங்கம் வென்ற இந்தியா, இம்முறை வெண்கல பதக்கத்தை மட்டுமே பெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2014 ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணி

அதேபோல், பெண்கள் பிரிவில் கபடி விளையாட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட 2010 முதல் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய அணியால் இம்முறை வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே பெற முடிந்தது.

கபடியில் உலக அளவில் நீண்ட காலமாக கோலோச்சி வந்த இந்திய அணி இம்முறை தோல்வியுற்றது ஏன் என்பது பற்றியும், இத்தோல்விகள் எதிர்காலத்தில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் கபடி பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் பிபிசி தமிழிடம் உரையாடினர்.

நிச்சயமாக தங்கப்பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் கபடி அணியின் பயிற்சியாளரான ராம்பீர் சிங், அணியின் அரையிறுதி போட்டி தோல்வி குறித்து பேசுகையில், '' இந்தியாவுக்கான நாளாக அந்த நாள் அமையவில்லை. நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் கூற வேண்டும்'' என்று கூறினார்.

லீக் போட்டியிலும், அரையிறுதி போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது குறித்து அவர் கூறுகையில், ''இந்த தோல்விகளால் இந்திய அணி வீழ்ச்சியடைந்துவிட்டது என்று கூறமுடியாது. இன்னமும் உலக கபடி அரங்கில் இந்தியா சிறந்த அணியாகவே திகழ்கிறது. மிக சிறந்த வீரர்களை கொண்ட நம் அணி மிக விரைவில் மீண்டும் வெற்றிவாகை சூடும்'' என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் முடிவுறுகிறதா என்று கேட்டதற்கு, ''அப்படி கூறமுடியாது. சில போட்டிகளில் நாம் வெற்றி பெறுவோம். சில போட்டிகளில் தோல்வியடைவோம். வெற்றியும், தோல்வியும் விளையாட்டில் இயல்பான ஒன்று'' என்று ராம்பீர் சிங் தெரிவித்தார்.

ப்ரோ கபடி லீக் போட்டி தொடர்களில் இந்திய அணி வீரர்களின் பலம் மற்றும் பலவீனத்தை வெளிநாட்டு வீரர்களால் நன்கு அறிந்து கொள்ளமுடிகிறது. இது அணியின் தோல்விக்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுவது குறித்து அவர் பதிலளிக்கையில், ''இல்லை, அப்படி கூறமுடியாது. இந்திய வீரர்களும் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கின்றனர். இரு தரப்பு வீரர்களும் பரஸ்பரம் கற்றுக்கொள்வதால் இந்திய அணிக்கு பாதிப்பு என்று கூறமுடியாது'' என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''நீண்ட காலமாக இந்தியா வெற்றிவாகை சூடி கொண்டிருந்தபோது, எப்படி இவ்வளவு தொடர்ச்சியாக வெல்கின்றீர்கள் என யாரும் கேட்கவில்லை. ஆனால், தற்போது அணி ஓரிரு போட்டிகளில் தோற்கும்போது மட்டும் ஏரளாமான கேள்விகள் எழுகிறது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மகளிர் மற்றும் ஆடவர் பிரிவு கபடி போட்டிகளில் தங்கப்பதக்கத்தை இந்தியா நழுவவிட்டது குறித்து கடந்த கபடி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரரான சேரலாதன் கூறுகையில், ''இது மிகவும் வருத்தமான செய்திதான். நம் அணி இன்னமும் சற்று எச்சரிக்கையாக செயல்பட்டிருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான முறையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

ரைடர்ஸ் ('கபடி' பாடிச் செல்பவர்கள்) மற்றும் தடுப்பாளர்கள் என இருதரப்புமே இந்த தொடரில் பல தருணங்களில் தவறு செய்துள்ளனர் என்று சேரலாதன் கூறினார்.

'சிறந்த அணியிடமே இந்தியா தோல்வியடைந்துள்ளது'

கடுமையாக போராடிய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை தவறவிட்டது குறித்து கபடி வீராங்கனை தேஜஸ்வினி பிபிசி தமிழிடம் பேசுகையில், ''ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வெல்ல மகளிர் அணி மிகச்சிறப்பாக பயிற்சி செய்தது. ஆனால், இறுதி போட்டியில் எதிர்பார்த்தபடி அவர்களால் பங்களிக்க முடியாத காரணத்தால் இந்தியாவால் வெற்றி பெறமுடியவில்லை'' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய அணியின் ரைடர்ஸால் அவர்கள் நினைத்தமாதிரி தங்கள் திட்டங்களை ஆட்டத்தின்போது வெளிப்படுத்த முடியாதது தோல்விக்கு வழிவகுத்தது என்று அவர் மேலும் கூறினார்.

தங்களைவிட சிறந்த அணியிடம்தான் இந்தியா தோல்வியுற்றது என்பதே உண்மை என்று கூறிய தேஜஸ்வினி, இரான் வீராங்கனைகள் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் தங்களின் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர் என்று தெரிவித்தார்.

கபடியில் இந்தியாவின் சாம்ராஜ்ஜியம் சரிகிறதா?

படத்தின் காப்புரிமை Twitter

கபடி விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம் குறைந்து வருகிறதா என்பது குறித்து பிபிசியிடம் பேசிய முன்னாள் கபடி வீரர் தாமஸ் ''இரானிடம் அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்ற நிலையில், அதற்கு முன்பு லீக் போட்டிகளில் தென் கொரிய அணியிடம் இந்தியா தோல்வியுற்றதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்'' என்று கூறினார்.

அரையிறுதி ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் அணித்தலைவர் அஜய் தாக்கூர் காயமடைந்தது பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறிய அவர், ''தென் கொரியாவிடம் இதற்கு முன்னர் 2016-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையிலேயே இந்தியா தோல்விடைந்தது. கடந்த சில ஆண்டுகளாக மற்ற வெளிநாட்டு அணிகள் கபடியில் தங்கள் ஆட்ட நுணுக்கங்களை மேம்படுத்தி கொண்டு வருகின்றனர் என்பதை இந்திய அணி உணரவேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

''இப்போதும் இந்திய அணி, உலக அளவில் நம்பர் 1 அணிதான். ஆனால், தற்போதைய தோல்விகளை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், வருங்காலத்தில் கபடி விளையாட்டில் இந்திய அணியின் சாம்ராஜ்ஜியம் தகர்க்கப்படும்'' என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய ஆண்கள் கபடி அணி இரானிடம் அரையிறுதி போட்டியில் தோல்வியுற்ற நிலையில், மகளிர் அணியும் அடுத்த நாளே இரானிடம் தோல்வியுறும் நிலையில் இருந்தபோது, மைதானத்தில் இருந்த ஆண்கள் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் கண்கலங்கியது கபடி ரசிகர்களை உணர்ச்சிவசப்பட செய்தது.

ஹாக்கி விளையாட்டில் முன்பு தொடர்ந்து வெற்றிவாகை சூடிய இந்திய அணி, மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபிறகு அடுத்து வந்த ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை என்பதை விளையாட்டு ரசிகர்கள் கவலையுடன் நினைவுகூர்கின்றனர்.

அதேவேளையில், நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப்பதக்கத்தை வெல்லாதது குறித்த காரணத்தை ஆராய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் கபடி விளையாட்டு வல்லுநர்கள், ஒரு தொடரில் கிடைத்த தோல்வியை வைத்து ஓர் அணியை மதிப்பிட முடியாது என்றும், வருங்காலத்தில் இந்தியா தனது ஆட்டத்திறனை மேம்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழின் சிறப்பு தொகுப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்