வங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா - 5 முக்கிய தகவல்கள்

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் 14வது பதிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. முந்தைய சுற்றுகளில் அதிக வெற்றிகளை பெற்றிருந்த இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது.

இந்தியாவின் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதை விளக்கும் ஐந்து முக்கிய தகவல்களை இங்கே காண்போம்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய லீக் போட்டியில் இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஷிகர் தவான், பும்ரா, புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பினர். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

படத்தின் காப்புரிமை NurPhoto

ஆச்சர்யமளிக்கும் வகையில் வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸுடன், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசனும் களமிறங்கி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். முதல் 20 ஓவர்களுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும், சுழற்பந்து வீச்சும் கைகொடுக்காத நிலையில், பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் இந்திய அணியின் வேட்டையை தொடங்கி வைத்தார். முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்ந்த வங்கதேச அணி, அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சோபிக்காததால் 48.3 ஓவர்களில் 222 ரங்குகளுக்கு சுருண்டது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுகளும், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி ஏற்படும் வகையில், தொடக்க ஆட்டக்காரரான தவான் 15 ரன்களிலும், ராயுடு 2 ரன்னிலும் பெவிலியனுக்கு திரும்பினர். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மாவும், தினேஷ் கார்த்திக்கும் தங்களது பங்குக்கு முறையே 48, 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரங்களில் ஆட்டமிழக்க போட்டியின் போக்கு மாறத் தொடங்கியது.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

இந்நிலையில், அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ் காயம் காரணமாக இடையில் வெளியேற, அதன் பிறகு களமிறங்கிய ஜடேஜாவும், புவனேஷ் குமாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், இலக்கை எட்டும் நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். காயம் காரணமாக ஆட்டத்தின் இடையே ஓய்வெடுக்க சென்றிருந்த கேதர் ஜாதவுடன் குல்தீப் யாதவுடன் களத்திற்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், முகமதுல்லாஹ் வீசிய பந்து காலில் பட்டு நகர்ந்தாலும், ஜாதவ் ஓடிச்சென்று ஒரு ரன்னை எடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

இதன் மூலம் இதுவரை நடந்துள்ள 14 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஏழில் வெற்றிபெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 342 ரன்கள் விளாசிய இந்திய வீரர் ஷிகர் தவான் தொடர் நாயகனாகவும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தன்னுடய முதல் சத்தத்தை இந்த போட்டியில் நிறைவு செய்த வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :