ஜடேஜாவின் சுழலில் சிக்கிய மேற்கிந்திய தீவுகள்: 3-1 என தொடரை வென்றது இந்தியா

3 மணி நேரத்தில் போட்டியை வென்ற இந்தியா

பட மூலாதாரம், Twitter

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழக்க , ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடிய அணித்தலைவர் விராட் கோலி, அணி எளிதில் வெற்றி பெற உதவினார்.

பட மூலாதாரம், AFP

56 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளின் துணையோடு, 63 ரன்களை எடுத்த ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒரு விக்கெட் இழப்புக்கு 14.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 105 ரன்களை பெற்ற இந்தியா அமோக வெற்றி பெற்றதுடன் தொடரையும் வென்றது. இந்த ஆட்டம் மூன்றே மணி நேரத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

பட மூலாதாரம், AFP

31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் 104 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்தார். பூம்ரா மற்றும் கலீல் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

ஆட்ட நாயகனாக ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டார்.

இந்த ஒருநாள் தொடரில் 450க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த விராட் கோலி தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெல்ல, நான்காவது ஒருநாள் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி 'டை'-யில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தோனி இதுவரை 10,174 ரன்களை ஒருநாள் போட்டிகளில் குவித்தாலும், இந்தியாவுக்காக அவர் 10, 000 ரன்களை இன்னமும் அடிக்கவில்லை. அவர் 10,000 ரன்களை கடந்ததில் ஆசிய XI அணிக்காக அவர் அடித்த 174 ரன்களும் அடங்கும்.

இந்நிலையில், இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை குவிக்க தோனிக்கு ஒரு ரன் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில், இந்த போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

ஆனால், அவர் பேட்டிங் செய்வதற்கு முன்பே வெற்றி இலக்கை இந்தியா எட்டிவிட்டது. இதனால் அவர் இந்த சாதனையை நிகழ்த்த அடுத்த தொடர் வரை காத்திருக்க வேண்டும். இந்தியா தனது அடுத்த நாள்போட்டி தொடரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஜனவரியில் விளையாடவுள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :