டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வி : ‘மித்தாலி ராஜை நீக்கியது இமாலய தவறு’ - சாடும் நிபுணர்கள்

'மித்தாலி ராஜை நீக்கியது இமாலய தவறு' - சாடும் நிபுணர்கள் படத்தின் காப்புரிமை Getty Images

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்துவரும் ஆறாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.

லீக் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக விளையாடி வென்ற இந்தியா, அரையிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை.

ஆன்டிகுவா மைதானத்தில் நடக்கவுள்ள இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து சந்திக்கவுள்ளது.

அரையிறுதி போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 89 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால், இதன்பின்னர் நடு வரிசை பேட்ஸ்வுமன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மேலும் 23 ரன்கள் மட்டும் கூடுதலாக பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது.

இதனால் 112 ரன்களை மட்டுமே இந்தியாவால் குவிக்க முடிந்தது. தனது இலக்கை இங்கிலாந்து எளிதாக பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.

படத்தின் காப்புரிமை @ TWITTER @ BCCIWOMEN / BBC

மெதுவான ஆடுகளத்துக்கு ஏற்றவாறு இந்திய பேட்ஸ்வுமன்கள் செயல்பாடு இருந்ததா மற்றும் அழுத்தம் மிகுந்த போட்டியில் இந்திய வீராங்கனைகளின் பங்களிப்பு எப்படி இருந்தது போன்றவை குறித்து மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி பேசினார்.

''கடந்த ஆண்டில் நடந்த உலகக்கோப்பை இறுதியாட்டத்திலும் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்று அம்சங்களிலிலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது. அதே வேளையில், இப்போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது என்பதையும் நாம் மறுக்க இயலாது'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

''இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து சிறப்பாகவே எதிர்கொண்டது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

நீக்கப்பட்ட மித்தாலி ராஜ் - வலுக்கும் சர்ச்சை

''அணியின் மூத்த வீராங்கனையான மித்தாலி ராஜை இந்த போட்டிக்கு சேர்க்காதது நிச்சயம் பாதிப்புதான். அவரது அனுபவம் களத்தில் முக்கிய தருணங்களில் இளம் வீராங்கனைகளுக்கு உதவியாக இருந்திருக்கும்'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

''உடல்தகுதி நன்றாக இருந்தும் அவர் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பது இனிவரும் நாட்களில் பெரும் விவாதமாக மாறலாம்'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''அரையிறுதி போட்டியில் மித்தாலி ராஜை இந்திய அணியில் சேர்க்காதது இமாலய தவறு. அவர் நீண்ட காலம் விளையாடியவர். பல இக்கட்டான தருணங்களை சமளித்தவர்'' என்று முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டனான சாந்தா ரங்கசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மித்தாலி ராஜை சேர்க்க வேண்டாம் என்று அணி நிர்வாகம் எடுத்த முடிவை ஆதரித்து பேசியுள்ளார். ஆனால், மித்தாலியின் அனுபவம் மிகவும் மதிப்பு மிக்கது'' என்று அவர் மேலும் கூறினார்.

2017 உலகக்கோப்பை இறுதியாட்டம், 2018 டி20 ஆசிய கோப்பை இறுதி போட்டி மற்றும் தற்போதைய அரையிறுதி போட்டி என தொடர்ச்சியாக முக்கிய நாக்-அவுட் போட்டிகளில் இந்திய மகளிர் அணி தடுமாறுவது ஏன்?

''நாக்-அவுட் போட்டிகளில் வெல்லும் கலையை இந்திய அணி முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். முன்பை விட மேம்பட்டுள்ளனர். ஆனால், போட்டியில் அழுத்தம் மிகுந்த தருணங்களை நன்றாக கையாள இந்திய வீராங்கனைகள் பழகிக் கொள்ள வேண்டும்'' என்று சாந்தா ரங்கசாமி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்