உள்ளூரில் ஹாக்கி உலகக்கோப்பை - இந்தியாவின் 43 ஆண்டு காத்திருப்பு கைகூடுமா?

ஹாக்கி உலகக்கோப்பை படத்தின் காப்புரிமை Getty Images

பதினான்காவது உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இன்று (புதன்கிழமை) புவனேஸ்வரில் கலிங்கா விளையாட்டரங்கில் துவங்குகிறது. உலகக்கோப்பையை நடத்தும் இந்தியா இம்முறை கோப்பையை வெல்லுமா?

இம்முறை 16 அணிகள் உலககோப்பை தொடரில் பங்கெடுக்கின்றன. நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 1975-ல் கோப்பையை வென்ற இந்திய அணி 'சி' பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்க அணிகளுடன் இடம்பெற்றிருக்கிறது.

அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய அணிகள் 'ஏ' பிரிவில் உள்ளன. 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. 'டி' பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டி பிரிவு மிகவும் கடுமையான போட்டி நிலவக்கூடும் என்கிறார்கள் ஹாக்கி நிபுணர்கள். பாகிஸ்தான் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நெதர்லாந்து மூன்று முறை வென்றுள்ளது. மலேசியா எந்த அணியையும் வெல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஜெர்மனியும் கூட இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. அனால் இதுபோன்ற சூழ்நிலையில் எந்த அணி எந்த அணியை வெல்லும் என சொல்வது கடினம்.

இந்த நான்கு பிரிவுகளிலும் முதலிடம் பிடிக்கும் அணி காலிறுதிக்கு தகுதிபெறும். இப்பிரிவுகளில் இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவுகளில் உள்ள அணியை வெல்லும்பட்சத்தில் காலிறுதிக்குள் நுழையமுடியும்.

படத்தின் காப்புரிமை Getty Images

1975-ல் இந்திய அணியில் விளையாடிய ஹெச் ஜி எஸ் சிம்னி ''பல முறை நல்ல அணிகள் கூட முதல் சுற்றுகளில் வெளியேறும்'' என்கிறார்.

இந்திய அணியை பொருத்தவரை இந்த உலககோப்பைக்கு மன்ப்ரீத் சிங் தலைமையேற்றுள்ளார். மற்றொரு நம்பகமான மற்றும் அனுபவமிக்க கோல்கீப்பர் பி ஸ்ரீஜேஷும் அணியில் இருக்கிறார்.

முன்னதாக பி ஸ்ரீஜேஷ் இந்திய அணிக்கு தலைமையேற்று வழிநடத்தியுள்ளார். இளம் வீரரான மன்ப்ரீத் சிங் உலக கோப்பையில் அதிக அழுத்தங்களை சமாளிக்க வேண்டியிருக்கும் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?

இதற்கு பதில் சொல்கிறார் முன்னாள் ஒலிம்பியனும் இந்திய ஹாக்கி அணியில் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஹர்பிந்தர் சிங். மன்ப்ரீத் சிங் இந்திய அணிக்கு ஏற்கனவே தலைமை ஏற்ற அனுபவம் உண்டு. பி ஸ்ரீஜேஷ் அவருக்கு அறிவுரை வழங்குவார் என்கிறார்.

இம்முறை பல அனுபவசாலி வீரர்கள் இந்திய அணியில் இல்லை.

முன்னாள் கேப்டன் சர்தார் சிங் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார், மற்றொருபுறம் எஸ் வி சுனில் மற்றும் ருபிந்தர் பால் சிங் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

'' காயமடைந்த வீரர்களை வைத்துக்கொண்டு அணி முன்னேறமுடியாது. இது இளைஞர்களின் காலம். வீரர்களின் உடற்தகுதிதான் எந்தவொரு கோப்பைக்கும் எந்தவொரு அணிக்கும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. அனுபவம் கொண்டிருக்கும் உடற்தகுதியற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதை விட அனுபவம்மில்லாத இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது நல்லதே'' என்கிறார் பயிற்சியாளர் ஹரேந்தர் சிங்.

பயிற்சியாளர் ஹரேந்தர் சிங்கிற்கும், அணித்தலைவர் மன்ப்ரீத் சிங் இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு திறன் இந்த உலகக்கோப்பையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜுனியர் உலக கோப்பையை வென்றபோது ஹரேந்தர் சிங் தான் பயிற்சியாளராக இருந்தார்.

தற்போது அணித்தலைவர் மற்றும் பயிற்சியாளர் இருவரும் சீனியர் அணிக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

ஜுனியர் உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த வருண்குமார், நில்கன்ட் ஷர்மா, மன்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங், மன்தீப் சிங் ஆகியோரும் இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆகவே ஜுனியர் உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்த வீரர்கள், அணித்தலைவர்கள், பயிற்சியாளர்கள் கூட்டணி புதிய சரித்திரம் படைக்குமா?

பயிற்சியாளர் ஹரேந்தர் சிங் பேசுகையில் '' நாங்கள் ஜுனியர் உலகக்கோப்பையில் ஒவ்வொரு போட்டியையும், மூன்று புள்ளிகளையும் வெல்வதற்கு தனித்தனி திட்டங்களை வகுத்தோம். அதைத்தான் இப்போதும் செய்யவுள்ளோம். வரலாறு படைப்பது என்பது வீரர்களின் கையில்தான் உள்ளது. இதில் பயிற்சியாளருக்கு சிறிய பங்குதான்'' என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இம்முறை உலகக்கோப்பையில் எந்தவொரு பதக்கத்தையும் வெல்வது என்பது மன்ப்ரீத் சிங்கிற்கு எளிதாக இருக்கப்போவதில்லை. இதற்கு மிகப்பெரிய காரணமாக இந்த ஆண்டு காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் இந்திய அணி தடுமாறியதை காரணமாக கூறலாம்.

இம்முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி நான்காவது இடத்தைத்தான் பிடித்தது. ஆசிய போட்டிகளில் தடுமாறி வெண்கலம் வென்றது.

'' இந்திய அணி சமீபத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது திறமையை காண்பித்தது. இறுதிப்போட்டி மழையால் ரத்தானதால் கோப்பையை பாகிஸ்தானுடன் பகிர வேண்டியதாயிற்று'' என இந்திய அணியின் திறமை குறித்த கேள்விக்கு பிபிசியிடம் பதிலளித்தார் அணித்தலைவர் மன்ப்ரீத் சிங்.

இம்முறை உலககோப்பையில் இந்திய அணி வெற்றி பெறுவதென்பது கோல்கீப்பர் பி ஸ்ரீஜேஷ் தனது அனுபவத்தை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பதிலும் தடுப்பட்டத்தில் ஈடுபடும் வீரர்களின் வலிமையை பொறுத்தது.

இந்திய அணி இடம்பெற்றிருக்கும் பிரிவானது மற்ற பிரிவை விட சற்றே எளிதானது. ஆகவே காலிறுதி வரை பெரிய பிரச்னை இருக்காது. இருப்பினும் கனடா மற்றும் பெல்ஜியத்திடம் இந்தியா கவனமாக இருப்பது அவசியமே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்