கோலி -பெய்ன் மோதல் - பெர்த் டெஸ்ட் படுதோல்விக்கு கோலி சொல்லும் காரணம் என்ன?

கோலி பெய்னுடன் மோதல் படத்தின் காப்புரிமை Ryan Pierse

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பிறகு சுமார் எட்டு மாதங்களுக்கு பின்னர் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியொன்றை வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது.

ஆட்டத்தின் இறுதிநாளன்று 112/5 எனும் ஸ்கோரோடு ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஸ்டீவ் ஸ்மித் அணியை விட்டு நீக்கப்பட்டபிறகு கேப்டனாக பொறுப்பேற்ற டிம் பெய்ன் முதல் முறையாக டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றியைச் சுவைத்துள்ளார்.

இப்போட்டிக்கு முந்தைய ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஐந்தில் தோல்வியைச் சந்தித்திருந்தது ஆஸி.

முன்னதாக கோலிக்கும் - ஆஸ்திரேலிய அணி கேப்டனுக்கும் வார்த்தை மோதல் வெடித்திருந்தது. ஆனால் ''ஆட்டம் முடிந்தபிறகு பேசிய கோலி தனிநபர் தாக்குதல்கள் இல்லாதவரை மோதல்கள் குறிப்பிட்ட எல்லையை தாண்டாது. ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்'' என்றார்.

படத்தின் காப்புரிமை Ryan Pierse - CA

இந்த தொடர் துவங்குவதற்கு முன்னதாக பேசிய பெய்ன், '' வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியமோ, அதே போல் எங்களது நாட்டிடமும், ரசிகர்களிடமும் மரியாதையை பெறுவதும் முக்கியமே'' என்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளன்று ஆஸ்திரேலிய அணித்தலைவர் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததாக இந்திய அணி கோரியது. ஆனால் நடுவர் முடிவு இந்திய அணிக்கு சாதகமாக இல்லை.

இதன் பின்னர் பெய்னை கடந்து சென்று சக அணி வீரர்களிடம் பேசிய கோலி, ''அவர் பேட்டிங்கில் சொதப்பி அவுட்டானால் தொடர் 2-0 தான்'' என்றார். இப்பேச்சை கேட்ட பெய்ன் '' திமிர்பிடித்தவனே, அதற்கு நீ முதலில் பேட் செய்திருக்க வேண்டும்'' என்றார்.

படத்தின் காப்புரிமை Ryan Pierse

இவ்வார்த்தை மோதல்கள் ஆட்டத்தின் நான்காவது நாளிலும் தொடர்ந்தது.

பெய்னிடம் கோலி - '' உன்னிடம் நான் எந்த வார்த்தையும் சொல்லவில்லை பிறகு ஏன் நீ எரிச்சலுற்றாய்?''

கோலியிடம் பெய்ன் - '' நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நீ தான் கட்டுப்பாட்டை இழந்தாய், ஏன் இன்று ரொம்பவும் நிதானமாக இருப்பது போல முயற்சி செய்கிறாய்?''

நடுவர் கிறிஸ் கஃபானே - '' போதும்...போதும்''

பெய்ன் - '' நாங்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளோம்''

நடுவர் கிறிஸ் - '' இல்லை, இல்லை ஆட்டத்தை தொடருங்கள், நீங்கள் இருவரும் அணித்தலைவர்கள்''

பெய்ன் - '' நாங்கள் பேச முடியும்...''

நடுவர் கிறிஸ் - '' டிம், நீங்கள் ஒரு அணித்தலைவர்''

பெய்ன் - '' நிதானத்தை இழக்காதே விராட்''

ஒரு வறட்டுச் சிரிப்பை அதற்கு பதிலாக அளித்தார் கோலி.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் இந்திய அணித்தலைவர் கோலி வெறும் வேகப்பந்துவீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்கினார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்

ரவிச்சந்திரன் அஸ்வின் காயமடைந்த நிலையில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்ப்பதற்கு பதிலாக உமேஷ் யாதவைச் சேர்த்தார் கோலி.

சுழற்பந்து வீச்சாளர் இன்றி களமிறங்கியதை சரியான முடிவாக பார்க்கிறீர்களா என கோலியிடம் ஆட்டம் முடிந்தபிறகு ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

'' நாங்கள் பிட்சை பார்த்தபோது ஜடேஜாவை அணியில் சேர்ப்பது குறித்து யோசிக்கவில்லை. நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் போதும் என்றே எண்ணினோம். நேதன் லயன் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசினார். அவர் பந்து அதிகம் திருப்பவில்லை பந்து தரையில் பட்டு எழும்பும் விதத்தையே சாதகமாக்கிக் கொண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்'' எனச் சொன்ன கோலி தனது முடிவு சரியானதே என நியாயப்படுத்தும் விதமாக பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: