ஐபிஎல்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 8.4 கோடிக்கு ஏலம்

வரூண் படத்தின் காப்புரிமை TNPL

ஜெய்பூரில் இன்று ( செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஏலத்தில், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, 8.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

வருண் சக்ரவர்த்தியை ஏலம் எடுப்பதற்கான அடிப்படை தொகையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல மடங்கு அதிக தொகைக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, கட்டட வடிவமைப்பு படித்தவர். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வருண், இந்திய அணியில் இதுவரை இடம்பெறவில்லை.

ஏலம் நடந்து கொண்டிருந்தபோது அதை கவனித்துக் கொண்டிருந்த வருண், கடவுளே கடவுளே என்று சொல்லிக் கொண்டிருந்ததாகவும், இவ்வளவு பெரிய தொகையை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கிரிக்கெட் நெக்ஸ்டிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், "நான் உறுதியாக அடிப்படை தொகையில் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவேன் என்று நம்பியிருந்தேன். இந்த தொகை சிறிது அதிகம்தான்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption இதற்கு முந்தைய ஏலத்தில், ஜெதேவ் உனாட்கட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 11.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

அவரை தொடர்ந்து, இந்திய அணியின் ஜெயதேவ் உனத்கட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இவர் இரண்டாவது முறையாக பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 11.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மும்பையை சேர்ந்தவரும், மீடியம் பேஸ் ஆல் ரவுண்டருமான ஷிவம் துபே, பெங்களூரு அணியால் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரும் இதுவரை இந்திய அணியில் விளையாடவில்லை.

மோஹித் ஷர்மா ரூ. 5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய வீரர் ஹனுமா விஹாரி, டெல்லி கேபிடல்ஸ் அணியால் 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

வெளிநாட்டு வீரர்களில், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரன் பஞ்சாப் அணியால் 7.2 கோடிக்கும், தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன் கோலின் இன்கிராம் டெல்லி கேபிடல்ஸால் 6.4 கோடிக்கும் அதிகபட்சமாக ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

மூத்த வீரரான யுவராஜ் சிங், புஜாரா மற்றும் இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் முதல்கட்ட ஏலத்தில் எந்த அணியாலும் விரும்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்