டபிள்யு.வி.ராமன்: இந்திய பெண்கள் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

பட மூலாதாரம், @BCCI
டபிள்யு.வி ராமன்
முன்னாள் இந்திய பேட்ஸ்மேனான டபிள்யு.வி ராமன் இந்திய பெண்கள் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பெண்கள் அணி உலக கோப்பை டி20 தொடரில் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
முன்னதாக ரமேஷ் பொவார் இந்திய பெண்கள் அணி பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். பயிற்சியாளர் ரமேஷ் பொவார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினரும், மகளிர் அணியின் முன்னாள் உறுப்பினருமான டயானா எடுல்ஜி ஆகியோர் தமக்கு எதிராக பாரபட்சகமாக நடந்துகொள்வதாகவும், தமது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க முயல்வதாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மித்தாலி ராஜ் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Julian Herbert-IDI
53 வயது ரமேஷ் பொவார் 1988-97 காலகட்டத்தில் இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 27 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
கடைசி 20 மாதங்களில் இந்திய பெண்கள் அணிக்கு ஏற்கனவே மூன்று பயிற்சியாளர்கள் இருந்துள்ளனர். ராமன் நான்காவது நபர்.
கேரி கிர்ஸ்டன் தான் பயிற்சியாளர் பதவிக்கு முதல் தேர்வாக இருந்தார். ஆனால் அவரால் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது.
முன்னாள் இந்திய வீரர்களான அன்ஷுமான் கெய்க்வாட், கபில்தேவ், ஷாந்தா ரங்கசாமி ஆகியோரை உள்ளடக்கிய குழுவானது முன்னாள் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன் கிரிஸ்டனை பிசிசிஐக்கு பரிந்துரை செய்தது.
ஆனால் கிர்ஸ்டனால் ஐபிஎல்லில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை உடனடியாக உதறிவிட்டு விட்டு வர முடியவில்லை.
கேரி கிர்ஸ்டன் முன்னதாக இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில்தான் இந்தியா ஒருநாள் உலகக்கோப்பையை (2011) இரண்டாவது முறையாக வென்றது. அதன்பிறகு தென் ஆப்ரிக்க அணிக்கு அவர் இரண்டு ஆண்டுகள் பொறுப்பேற்றிருந்தார்.
கேரி கிறிஸ்டன்
இந்திய பெண்கள் அணிக்கான பயிற்சியளர் பொறுப்புக்கு டபிள்யு வி ராமன் இரண்டாவது தேர்வாக இருந்தார். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இந்திய ஆண்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் மூன்றாவது தேர்வாக இருந்தார்.
இந்தியா தற்போது பெண்கள் அணிக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேவேளையில் டி20 தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
கடந்த மாதம் ஆண்டிகுவாவில் நடந்த டி20 அரை இறுதி போட்டியில் இங்கிலாந்திடம் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
மிதாலி ராஜ் தன்னை அணியில் இருந்து நீக்கியது குறித்து பிசிசிஐக்கு தொடர் மின்னஞ்சல்கள் அனுப்பியது ஊடகங்களில் வெளியான நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு ரமேஷ் பொவார் மீண்டும் விண்ணப்பித்தார். ஆனால் பயிற்சியாளர் பதவிக்கு முன்னுரிமைக்கான முதல் மூன்று தேர்வுகளில் அவரது பெயரே இல்லை.
பட மூலாதாரம், Getty Images
India have yet to win a women's World Cup or World T20 competition
யார் இந்த டபிள்யு.வி ராமன்
தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 23 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ரஞ்சி அணிகளுக்கு பயிற்சியாளராகவும், 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்காக 132 முதல் நிலை போட்டிகளில் விளையாடி, 19 சதங்கள் மற்றும் 36 அரைசதங்கள் உட்பட மொத்தம் 7,939 ரன்கள் எடுத்துள்ளார்..
முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியபோது அதிகபட்சம் ஒரு இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்துள்ளார் டபிள்யூ.வி.ராமன்.
பட மூலாதாரம், Getty Images
ஹர்ப்ரீத் கெளர், ரமேஷ் பொவார் மற்றும் மிதாலி ராஜ்
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் ராமன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை எப்படி வழி நடத்தப்போகிறார் என்று அனைவரும் கூர்ந்து கவனிப்பார்கள்.
அதிலும், தற்போது அணியில் பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில், குழுவாக செயல்பட வேண்டிய விளையாட்டில், அனைவரையும் ஒன்றிணைத்து வெற்றி பெற வைப்பது என்பது ராமன் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால்.
அணித்தலைவர் ஹர்ப்ரீத் கெளர் மற்றும் ஸ்மிருதி மந்தானா ஆகிய இருவரும் ரமேஷ் பொவாரை மாற்ற வேண்டாம் என்று சொன்னதற்கு மாறாக மிதாலியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதால் அணியில் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகளை களைவதும் சுலபமான விஷயமாக இருக்காது.
மகளிர் கிரிக்கெட் அணியை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய சவாலை டபிள்யூ.வி.ராமன் எதிர்கொள்வது போலவே, கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை ஒருங்கிணைத்து செயல்படுவதில் ஏற்படும் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்