இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் கோலியின் படை சரித்திரம் படைக்குமா?

  • விவேக் ஆனந்த்
  • பிபிசி
விராட் கோலி

பட மூலாதாரம், Paul Kane - CA

பாக்சிங் டே டெஸ்ட் போட்டியொன்றில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது.

பொதுவாக பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ரசிகர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை வெல்வது எந்த ஒரு அணிக்கும் பெருஞ் சவால்.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த வேலை தினத்தை பாக்சிங் டே என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பொதுவாக டிசம்பர் 26-ம் தேதி ஒரு டெஸ்ட் போட்டி நடக்கும். இந்த டெஸ்ட் போட்டியை பாக்சிங் டே டெஸ்ட் என்கிறார்கள்.

இம்முறை பாக்சிங் டே டெஸ்டில் ஆறு அணிகள் விளையாடுகின்றன. சென்சூரியனில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்காவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இலங்கையும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் முதன்முறையாக மயங்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். கடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி இம்முறை இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவை களமிறக்கியுள்ளது. நடுவரிசையில் புஜாரா, விராட் கோலி, ரஹானே வலுசேர்ப்பார்கள்.

ரோஹித் ஷர்மா, ரிஷப் பன்ட் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளதால் அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். கடந்த டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்த உமேஷ் யாதவ் இப்போட்டியில் நீக்கப்பட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Ashley Allen

படக்குறிப்பு,

மயங்க் அகர்வால்

இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள 295-வது வீரராகியுள்ளார் மயங்க் அகர்வால். கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பையில் கர்நாடக வீரர் மயங்க் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் அதிக ரன்கள் விளாசியவரும் மயங்க்தான்.

ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர்.

இவ்வருடம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விஹாரி அறிமுகம் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் விளாசினார். இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விஹாரி முதன்முறையாக இந்திய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்குகிறார்.

மிச்சேல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹாசில்வுட், நாதன் லயன், பேட் கம்மின்ஸ் என ஐந்து பௌலர்களுடன் ஆஸ்திரேலிய அணி களம் காண்கிறது.

பட மூலாதாரம், The AGE

படக்குறிப்பு,

1975 பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் போது மெல்பர்ன் மைதானம்

பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது எத்தனை?

இதுவரை ஏழு முறை ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் இரண்டு போட்டிகள் டிரா ஆனது. ஆனால் மற்ற ஐந்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வெற்றியைச் சுவைத்தது.

1985

இந்தியா ஆஸ்திரேலியாவில் 1985 இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போதுதான் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர், வெங்கர்சர்க்கார், கபில்தேவ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். அப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் அதன் அணித்தலைவர் ஆலன் பார்டர் 163 ரன்கள் குவித்திருந்தார்.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணியால் 25 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி டிரா செய்தது

பட மூலாதாரம், DAVID CALLOW

படக்குறிப்பு,

1991-ல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி

1991

ஆறு ஆண்டுகள் கழித்து 1991-ல் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் விளையாடியது இந்தியா. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்ததால் நெருக்கடியுடன் விளையாடியது இந்திய அணி.

முதல் இன்னிங்சில் இந்தியா 263 ரன்களும், ஆஸி 349 ரன்களும் எடுத்திருந்தன. இரண்டாவது இன்னிங்சில் வெங்கர்சர்க்காரின் 54 ரன்கள், டெண்டுல்கரின் 40 ரன்கள் உதவியுடன் 213 ரன்கள் குவித்தது இந்தியா. ஆஸ்திரேலியா 128 எனும் இலக்கை 40 ஓவர்களில் கடந்தது. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தோற்றது இந்திய அணி.

பட மூலாதாரம், Jack Atley

படக்குறிப்பு,

1999-ல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி

1999

இம்முறை அடிலெய்டு டெஸ்டில் 285 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற கையோடு மெல்பர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டை எதிர்கொண்டது இந்திய அணி.

பாண்டிங், கில்கிறிஸ்ட், டேமியன் ஃபிளெமிங், பிரெட் லீ ஆகியோர் சிறப்பாக விளையாட முதல் இன்னிங்சில் 405 ரன்கள் எடுத்திருந்தது ஆஸி. இந்திய அணி தரப்பில் டெண்டுல்கர் மட்டும் சதமடித்தார்(116).

238 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது இந்தியா. கில்கிறிஸ்ட், மார்க் வாஹ் அதிரடி அரை சதத்துடன் 208/5 எனும் நிலையில் டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்சிலும் டெண்டுல்கர் மட்டும் போராடி அரை சதம்(52) அடித்தார். ஆஸ்திரேலியா 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பட மூலாதாரம், Hamish Blair

படக்குறிப்பு,

2003 பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சேவாக் மற்றும் கில்கிறிஸ்ட்

2003

கங்குலி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தெம்புடன் மெல்பர்னில் காலடி வைத்தது.

மெல்பர்னில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. பாக்சிங் டே அன்று ஆஸ்திரேலிய ரசிகர்களை கலங்கடித்தார் சேவாக். முதல் இன்னிங்சில் சேவாக் அடித்த ரன்கள் 195. ஆனால் இந்தியா 366 ரன்களே எடுத்தது.

பதிலடியாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஹெய்டன் சதம்(136), ரிக்கி பாண்டிங் இரட்டை சதம் (257) கண்டனர். இரண்டாவது இன்னிங்சில் டிராவிடின் 92 ரன்கள் லக்ஷ்மணின் 73 ரன்கள் உதவியுடன் இந்தியா 286 ரன்கள் எடுத்தது. ஆனால் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் கங்குலி அணியை தோற்கடித்தது ஸ்டீவ் வாக் அணி.

பட மூலாதாரம், WILLIAM WEST

படக்குறிப்பு,

2007-ல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி

2007

கும்ப்ளே தலைமையிலான இந்திய அணிக்கு இம்முறை ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டியே பாக்சிங் டே டெஸ்டாக அமைந்தது

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஹெய்டன் சதமடித்தார். கும்ப்ளே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி தரப்பில் டெண்டுல்கர் மட்டும் அரை சதமடித்தார்.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்தியா இருநூறு ரன்கள் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா 337 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், WILLIAM WEST

படக்குறிப்பு,

2011-ல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி

2011

முதல் இன்னிங்சில் 333 ரன்கள் எடுத்தது ஆஸி. இந்திய அணி தரப்பில் முதல் இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 73 ரன்கள் அடித்தார். டிராவிட் 68, சேவாக் 67 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 11 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்சில் உமேஷ் யாதவின் அனல் பறக்கும் பந்துவீச்சில் 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்தது ஆஸி. ஆனால் பாண்டிங்கின் 60 ரன்கள் மற்றும் மைக் ஹஸ்ஸியின் 89 ரன்கள் உதவியுடன் ஆஸி 240 ரன்கள் குவித்தது.

இரண்டாவது இன்னிங்சில் சச்சின் தான் அதிகபட்சமாக 32 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக அஷ்வின் 30 ரன்கள் எடுத்தார். விராட் கோலி டக் அவுட் ஆனார். இந்தியா 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தோனியின் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

பட மூலாதாரம், Darrian Traynor

படக்குறிப்பு,

2014 பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தோனி

2014

அடிலெய்டில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி, பிரிஸ்பேனில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி. மெல்பர்னில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாக்சிங் டே டெஸ்டில் களமிறங்கியது தோனி தலைமையிலான இந்திய அணி.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டனர். ஐந்து வீரர்கள் அரை சதம் கடந்தார்கள். அதில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ர்யான் ஹாரிஸும் ஒருவர்.

ஸ்டீவ் ஸ்மித் 192 ரன்கள் குவித்தார்.

இந்திய அணித் தரப்பில் விராட் கோலி (169) மற்றும் அஜின்கிய ரஹானே (147) ரன்கள் விளாசினர். இதனால் இந்தியாவும் முதல் இன்னிங்சில் 465 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் ஷான் மார்ஷ் 99 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆக்கினார் கோலி. ஆஸி 318 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா 66 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிரா ஆனது.

தோனி இந்த டெஸ்ட் போட்டியின் முடிவில்தான் ஓய்வு பெற்றார்

பட மூலாதாரம், Scott Barbour - CA

படக்குறிப்பு,

2018 பாக்சிங் டே டெஸ்ட் - கோலி மற்றும் பெய்ன்

பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கியிருப்பது இப்புள்ளிவிவரங்களின்படி தெளிவு.

1990களில் இருந்து கடைசி 28 வருடங்களில் ஆஸ்திரேலியா 4 முறை மட்டுமே பாக்சிங் டே டெஸ்டில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இங்கிலாந்து அணியிடம் இரண்டு முறையும், 96-ல் வெஸ்ட் இண்டீஸ் அணியிடமும், 2008-ல் தென்னாப்ரிக்காவிடமும் தோற்றுள்ளது.

கடைசி 20 வருடங்களில் இரண்டு பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆஸ்திரேலியா டிரா செய்திருக்கிறது.

1982-ல் இங்கிலாந்து மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை பாக்சிங் டே டெஸ்டில் தோற்கடித்தது. மற்றொரு முறை 1998-ல் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது.

பட மூலாதாரம், WILLIAM WEST

படக்குறிப்பு,

மெல்பர்ன் ஆடுகளம்

ஆஸ்திரேலியா பொதுவாக 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அல்லது இன்னிங்ஸ் வெற்றி அல்லது ஐந்துக்கும் அதிகமான விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்பர்னில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளது.

ஆக, ஆஸ்திரேலிய அணியை மெல்பர்ன் மண்ணில் வெல்வது இந்தியாவுக்கு எளிதான காரியமாக இருக்கப்போவதில்லை.

ஆனால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லாமலில்லை என்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ்.

இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து பிபிசி தமிழின் விவேக் ஆனந்திடம் சடகோபன் ரமேஷ் உரையாடினார்.

''முன்பு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பௌலர்கள் விக்கெட்டுகள் எடுக்க சிரமப்படுவார்கள். இப்போது அத்தகைய நிலை இல்லை. இந்திய பௌலர்களை எதிர்கொண்டு நானூறு ரன்களுக்கு மேல் குவிப்பது தற்போது மிக எளிதான காரியமல்ல. பௌலர்கள் சிறப்பாகச் செய்லபடும்போது பேட்டிங்கும் இந்தியாவுக்கு கை கொடுத்தால் மெல்பர்னிலும் கோலியால் வெற்றிக்கொடி நாட்ட முடியும்'' என்கிறார்.

பட மூலாதாரம், Sadagopan ramesh/fb

மெல்பர்ன் மைதானம் குறித்து பேசிய சடகோபன் '' மெல்பர்ன் மைதானத்தில் பந்து நன்றாக எழும்பும். அதே சமயம் பெரிய மைதானமும் கூட. விக்கெட்டுக்கு வலதுபுறம் மற்றும் இடதுபுறம் பௌண்டரி எல்லைகள் மற்ற மைதானங்களை ஒப்பிடும்போது சற்று தொலைவாக இருக்கும். ஆனால் பேட்ஸ்மேனுக்கு நேர் எதிர்புற பௌண்டரி எல்லை மிகவும் தொலைவு என சொல்ல முடியாது. பேட்ஸ்மேன்கள் களத்தில் நிலைத்து நின்று ஆடினால் நிறைய ரன்கள் குவிக்க முடியும். அதே சமயம் அடிலெய்டு அளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என நான் சொல்லமாட்டேன்'' என்றார்.

பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் லயன் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஆனால் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது.

போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி, பெர்த் ஆடுகளத்தை பார்த்தபோது ஜடேஜா பற்றியே யோசிக்கவில்லை என்றார். தனது முடிவை சரி என்ற கோணத்தில் விராட் வாதிட்டாலும் சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்காதது சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்பட்டது.

பட மூலாதாரம், WILLIAM WEST

படக்குறிப்பு,

ஜடேஜா

எப்பேர்ப்பட்ட ஆடுகளமாக இருந்தாலும் இந்தியா ஒரு சுழற்பந்து வீச்சாளருடனாவது களமிறங்க வேண்டும் என்பது சடகோபனின் வாதம்.

''ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளர் அணியில் இருப்பது அவசியம். அஸ்வின் போன்ற பந்து வீச்சாளர்கள் மிகவும் தரமான பந்துவீச்சாளர்கள், சூழ்நிலைக்கேறார் போல பந்துவீசவும், நன்றாக பந்தை திருப்பும் திறனும் பெற்றவர்கள். ஆஸ்திரேலியா காலம் காலமாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தைச் சந்திக்கும் ஓர் அணி. அவர்களது பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல'' எனக்கூறும் ரமேஷ், சுழற்பந்துக்கு ஒரு ஆடுகளம் ஏற்றது என்பதால் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களே இல்லாமல் நான்கைந்து சுழற்பந்து வீச்சாளர்களுடன் சொந்த மண்ணில் விளையாடுமா? எனக் கேள்வி எழுப்புகிறார்.

அஷ்வின் காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக ஜடேஜா சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

இந்தியா தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த தொடக்க வீரர்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்க சிறப்பான இரண்டு பேட்ஸ்மேன்களை அடையாளம் காண முடியாமல் தவித்து வந்த நிலையில் தொடர்ந்து சொதப்பி வந்த முரளி விஜய், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

பட மூலாதாரம், Ryan Pierse

படக்குறிப்பு,

ரஹானே

ஆஸ்திரேலிய மைதானங்களில் மிச்சேல் ஸ்டார்க் மற்றும் ஏனைய வேகப்பந்து வீச்சாளர்களை புதிய பந்தில் எதிர்கொள்வது எளிதானதல்ல.

இந்திய அணியில் புஜாராவும் கோலியும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்தாலும் ஐந்தாம் நிலையில் களமிறங்கும் ரஹானே அரை சதம் அடித்தபிறகு அதனை பெரிய ஸ்கோர்களாக (சதம், இரட்டை சதமாக) மாற்றுவதில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார்.

ஆனால் இம்முறை சதம் அல்லது இரட்டை சதம் அடிக்க முடியும் என ரஹானே நம்புகிறார். '' இப்போட்டியில் நான் ஒரு பெரிய சதம் அடிப்பேன் என உறுதியாக நம்புகிறேன்'' என திங்கள் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

'ரஹானேவுக்கு சடகோபன் ரமேஷ் ஓர் யோசனை தருகிறார். '' விராட் கோலியுடன் அஜின்க்யா ரஹானே இணைந்து விளையாடும் சூழ்நிலை உருவாகும்போது ரஹானேவால் உத்வேகத்துடன் 40 -50 ரன்களைச் சேர்க்க முடியும். கோலி ஆட்டமிழப்பதற்கு முன்னதாகவே நாற்பது ரன்கள் அளவுக்கு அடித்துவிட்டால் அதன் பிறகு மிக முக்கிய பேட்ஸ்மேனாக களத்தில் இருக்கும் ரஹானேவுக்கு எதிரணி பந்து வீச்சாளர்கள் குறிவைத்தாலும் அவரால் மேற்கொண்டு 40- 50 ரன்களைச் சேர்க்கமுடியும். ஒரு பெரிய ஸ்கோர் எடுத்துவிட்டால் அது பலமடங்கு மன வலிமையை தந்துவிடும்'' என்கிறார்.

பட மூலாதாரம், Scott Barbour

படக்குறிப்பு,

மெல்பர்ன் ஸ்டேடியம்

இந்தியாவுக்கு புது சவால்

ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பெருமளவு ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தருவார்கள். 2013-ம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியில் சுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருகை தந்தனர்.

கடந்த முறை இந்திய பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது சுமார் 69 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்தனர். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சுமார் 88 ஆயிரம் ரசிகர்கள் மெல்பர்ன் மைதானத்தில் குவிந்தனர்.

கடந்த வருடம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்தியா மெல்பர்னில் சிறப்பாக விளையாடலாம். ஆனால் ஆடுகள சாதக பாதகங்கள், வானிலை அம்சங்கள் ஆகியவற்றோடு மெல்பர்னில் இந்தியாவுக்கு இன்னொரு சவாலும் உண்டு.

மெல்பர்னில் ரசிகர்களின் பலத்த ஆதரவோடு களமிறங்குவதால் ஆஸ்திரேலிய அணியினருக்கு கிடைக்கும் உற்சாகத்தால் ஏற்படும் உத்வேகத்தையும் இந்தியா சமாளிக்க வேண்டியதிருக்கும்.

பட மூலாதாரம், AAMIR QURESHI

படக்குறிப்பு,

பாகிஸ்தான் அணி

பாக்சிங் டே டெஸ்டில் ஆசிய அணிகள்

இங்கே இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்த்து மெல்பர்னில் பாக்சிங் டே டெஸ்ட் ஆடும் வேளையில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் வலுவான தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக செஞ்சுரியனில் பாக்சிங் டே டெஸ்ட்டில் பங்கேற்கிறது. இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான இலங்கை நியூசிலாந்து மண்ணில் பாக்சிங் டே டெஸ்ட்டில் விளையாடுகிறது.

கடந்த 35 ஆண்டுகளில் நியூசிலாந்து மண்ணில் இலங்கை 2 முறை மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. பாகிஸ்தானும் இதுவரை தென் ஆப்ரிக்க மண்ணில் இரண்டே டெஸ்ட் போட்டிகளில் தான் வென்றிருக்கிறது.

இந்தியா இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை. ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளை வென்ற நிகழ்வு நடந்தது 1977-ல்.

அப்போது மெல்பர்ன் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கவாஸ்கரின் சதமும், பிஷன் சிங் பேடி மற்றும் சந்திரசேகரின் அபார பந்துவீச்சும் இவ்வெற்றிக்கு காரணம்.

நாற்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆஸ்திரேலியாவில் இம்முறை இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளை வெல்லுமா?

ஆசிய அணிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்குமா அல்லது எதிராணிகளிடம் சரண் அடையுமா என்பது அதிகபட்சம், இன்னும் ஐந்து நாள்களில் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: