இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட்: ‘பேட் செய்ய விருந்தாளி வந்திருக்கிறார்’ - மோதிய பெய்னை பழிதீர்த்த பந்த்

டிம் பெய்னை கலாய்த்த ரிஷப் பந்த்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

டிம் பெய்னை கலாய்த்த ரிஷப் பந்த்

மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்துவரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்டில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தால் இந்திய அணி இப்போட்டியை வென்று தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கும்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இந்திய அணியின் வெற்றிமுகம் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் பங்களிப்பு ஆகியவற்றுக்கு இணையாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட்கீப்பருமான டிம் பெய்ன் மற்றும் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடையே நடந்த வார்த்தை போர் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஒய்வு நேரத்தில் என் குழந்தைகளை பார்த்து கொள்வாயா?

இந்த டெஸ்ட் போட்டியில் வியாழக்கிழமையன்று ரிஷப் பந்த் பேட்டிங் செய்யவந்தபோது, அவரை சீண்டும் விதமாக, கீப்பிங் செய்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்ன், ''இந்திய ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் டோனி இடம்பெற்றுள்ளார். இவருக்கு (பந்த்தை குறிப்பிட்டு) இனி வேலை இருக்காது'' என்று கிண்டலடித்தார்.

ஆஸ்திரேலிய உள்ளூர் அணியான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படுவதால் , அதனை வேண்டுமானால் ரிஷிப் பந்த் பயன்படுத்தி கொள்ளலாம் என்று பெய்ன் கூறியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக கேட்டது.

ரிஷிப் பந்த் அடுத்த பந்தை சந்தித்தவுடன் மீண்டும் அவரை கலாய்த்த பெய்ன், ''ஹோபர்ட் ஓர் அழகிய நகரம். அங்கு உனக்கு நன்கு பொழுது போகும். ஒய்வு நேரத்தில் என் குழந்தைகளை பார்த்து கொள்வாயா? '' என்று கேட்டார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை டிம் பெய்ன் பேட் செய்யவந்தபோது அவருக்கு ரிஷப் பந்த் பதிலடி தந்தார்.

''இன்று பேட் செய்ய ஒரு சிறப்பு விருந்தாளி வந்திருக்கிறார். எப்பவும் பொறுப்பை கண்டு பயந்து ஓடும் ஒரு கேப்டன் இவர்'' என்று கீப்பிங் செய்த ரிஷப் பந்த் கிண்டல் செய்தார்.

பட மூலாதாரம், Getty Images

மேலும் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வாலிடம், ''எங்காவது இப்படி ஒரு தற்காலிக கேப்டனை பார்த்துள்ளாயா? இவரை அவுட் ஆக்க எதுவும் செய்ய வேண்டாம். இவருக்கு பேச மட்டும்தான் தெரியும். பேச்சு; பேச்சு, பேச்சு மட்டும்தான்!'' என்று தொடர்ந்து கிண்டல் செய்தார் பந்த்.

டிம் பெய்ன் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றும் விதமாக கிண்டல் செய்தது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

இவ்விரு சம்பவங்களிலும் தங்களை கிண்டல் செய்த விக்கெட்கீப்பருக்கு பேட்ஸ்மேன்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் கோலி மற்றும் ஆஸ்திரேலியா அணித்தலைவர் பெய்ன் இடையே இது போன்று நடந்த மோதல்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்த நிலையில், மீண்டும் இந்திய, ஆஸ்திரேலிய வீரர்கள் இடையே நடந்த வார்த்தை போர் இந்த தொடரை மிகவும் பரபரப்பாக ஆக்கியுள்ளது என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: