இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்

  • சிவக்குமார் உலகநாதன்
  • பிபிசி தமிழ்
150-வது டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா

பட மூலாதாரம், Michael Dodge

மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்டில் ரன்கள் 137 வித்தியசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 2-1 என்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

1981க்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா, ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த 26-ஆம் தேதியன்று தொடங்கிய பாக்சிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படும் இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளுக்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா டிக்ளேர் செய்தது.

399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்களை மட்டுமே பெற்றது.

பட மூலாதாரம், Quinn Rooney

ஆட்டத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, மழையின் காரணமாக உடனடியாக போட்டி தொடங்காததால் எப்போது ஆட்டம் தொடங்கும் என்று இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 7 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது.

இந்நிலையில், இந்தியாவின் வெற்றியை சாத்தியமாக்கிய 5 முக்கிய காரணங்கள் இவை.

அறிமுக ஆட்டத்தில் அசத்திய மாயங்க் அகர்வால்

பட மூலாதாரம், Getty Images

மெல்போர்ன் போட்டியில் அறிமுகமான இந்திய தொடக்கவீரர் மாயங்க் அகர்வால் முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் பேட் கம்மின்ஸ் சிறப்பாக பந்துவீச்சை வந்த நிலையில், எந்த பதட்டமும் இல்லாமல் விளையாடிய மாயங்க் அகர்வால் 42 ரன்கள் எடுத்தார்.

இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாத நிலையில், அறிமுக ஆட்டத்தில் மாயங்கின் ஆட்டம் மிக சிறப்பாக அமைந்து ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.

புஜாரா , கோலி இணை அபாரம்

பட மூலாதாரம், Getty Images

முதல் இன்னிங்சில் 443 ரன்கள் என்று மிகப் பெரிய ஸ்கோரை இந்தியா எடுக்க முக்கிய காரணம் புஜாரா மற்றும் விராட் கோலி இணைதான்.

புஜாரா 106 ரன்களையும், இந்திய அணித்தலைவர் விராட் கோலி 82 ரன்களும் எடுத்தனர்.

இந்த தொடரில் புஜாரா எடுத்த இரண்டாவது சதம் இது.

பந்துவீச்சில் மிரட்டிய பூம்ரா

பட மூலாதாரம், Reuters

தனது முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்ததற்கு முக்கிய காரணம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பூம்ராதான்.

33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய பூம்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவரது பந்துவீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய அணியினர் மிகவும் திணறினர்.

இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை பெற்ற பூம்ரா ஆட்ட நயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஜடேஜா, ரிஷப் பந்த்தின் பங்களிப்பு

பட மூலாதாரம், Getty Images

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற்ற ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதேபோல், இந்திய விக்கெட்கீப்பர் ரிஷப் பந்த் முதல் இன்னிங்சில் 39 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 33 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

ஆஸ்திரேலிய அணியின் அனுபவமின்மை

பட மூலாதாரம், Quinn Rooney

அடிலெய்ட் போட்டியை போலவே இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு பெரிதும் காரணமாக அமைந்தது அந்த அணியின் மட்டைவீச்சுதான்.

ஸ்மித், வார்னர், வார்னர் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லாத நிலையில் தற்போதைய வீரர்களால் நிலைத்து ஆடமுடியவில்லை.

மேலும் ஃபிஞ்ச் மற்றும் ஷான் மார்ஷ் போன்றோரும் சிறப்பாக விளையாடதது அந்த அணியின் தோல்விக்கு வழிவகுத்தது.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் என சமனில் முடிந்தது.

பட மூலாதாரம், QUINN ROONEY

படக்குறிப்பு,

அடிலெய்டில் இந்தியா வெற்றி

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பெர்த் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

இந்த டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் ஜனவரி 3-ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: