2018 விளையாட்டு உலகம்: அதிரடி கோலி, தளராத செரீனா, கலங்கவைத்த சுனில் சேத்ரி, சாதித்த சிந்து

  • சிவக்குமார் உலகநாதன்
  • பிபிசி தமிழ்
2018 விளையாட்டு உலகம்: சாதனைகள், சர்ச்சைகள் மற்றும் புதுவரவுகள்

பட மூலாதாரம், Getty Images

மகப்பேறுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்பிய செரீனா வில்லியம்ஸ், ரசிகர்களை பரவசப்படுத்திய ஃபிஃபா உலககோப்பை கால்பந்து, சிறிய நாடுகளின் வீரர்கள் சாதித்த ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், சர்ச்சைகள் நிரம்பிய கிரிக்கெட் களம் என பரபரப்பாக கடந்த 2018-ஆம் ஆண்டில் விளையாட்டு உலகில் எண்ணற்ற சாதனைகள், சர்ச்சைகள் மற்றும் திருப்புமுனைகளும் இடம்பிடித்தன.

வீழ்வேன் என்று நினைத்தாயோ ? - செரீனா வில்லியம்ஸ்

பட மூலாதாரம், GETTY IMAGES

டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியான செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டில் வியக்கத்தகு போராட்டங்கள் மற்றும் சர்ச்சைகளில் இடம்பெற்று தலைப்பு செய்திகளில் இடம்பெற்றார்.

குழந்தை பெற்றுக்கொண்ட பின்னும் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

மகப்பேறுக்கு பின் அவர் கலந்துகொண்ட முதல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 2018 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியாகும்.

இதனிடையே, நியூயார்க்கில் நடந்த யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில், நடுவரை 'திருடன்' என்று பிரபல வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

களைகட்டிய உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைMATTHIAS HANGST

ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் நடந்த ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியது.

இங்கிலாந்து அணித்தலைவர் ஹேரி கேன் இந்த உலகக்கோப்பை தொடரின் தங்க ஷூவை வென்றார். இத்தொடரின் சிறந்த வீரருக்கான தங்க பந்தை குரேஷிய வீரர் லூகா மோட்ரிக் வென்றார்.

அரை இறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து குரேஷியாவிடம் தோல்வியடைந்தது. அதேவேளையில் ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில் போன்ற வலுவான அணிகள் ஆரம்ப சுற்று போட்டிகளில் தோற்று வெளியேறின.

'மைதானத்துக்கு வாருங்கள்' - கைகூப்பி வேண்டுகோள் விடுத்த சுனில் சேத்ரி

பட மூலாதாரம், FACEBOOK/SUNIL CHHETRI/BBC

படக்குறிப்பு,

சுனில் சேத்ரி

உலக நாடுகள் கால்பந்து உலகக்கோப்பையில் கவனம் செலுத்திய அதே காலகட்டத்தில் இந்திய கால்பந்து களம் மீது கவனம் செலுத்தும் விதமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.

தனது 100-ஆவது சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு முன் இந்திய கால்பந்து அணித் தலைவர் சுனில் சேத்ரி, வெளியிட்ட ஒரு காணொளியில் ''ரசிகர்கள் மைதானத்துக்கு வர வேண்டும். அதற்கு இரு காரணங்கள் உள்ளன. கால்பந்துதான் உலகில் சிறந்த விளையாட்டு என்பது ஒரு காரணம்; மற்றொன்று நாங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம்'' என்று கைகூப்பி வேண்டுகோள் விடுத்தார்.

இணையத்திலும், சமூகவலைத்தளத்தில் இந்த காணொளி வைரலாக பகிரப்பட்டது.

சுனில் சேத்ரி வெளியிட்டுள்ள காணொளியை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் வெளியிட்ட ஒரு காணொளியில் ''விளையாட்டுக்கு மதிப்பளிக்கும் பெருமை மிக்க தேசமாக இந்தியா ஆக விரும்பினால் அனைத்து விளையாட்டுகளையும் ஏற்றுக்கொண்டு மதிப்பளிக்க வேண்டும் '' என்று கேட்டுக் கொண்டார்.

சுனில் சேத்ரியின் காணொளி இந்திய கால்பந்து மற்றும் விளையாட்டு ரசிகர்களிடம் ஒர் அதிர்வலையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் - சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கரும்புள்ளி?

பட மூலாதாரம், GETTY IMAGES

கடந்த மார்ச் மாதத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரூன் பேன்கிராஃப்ட் பந்தை விதிமுறையை மீறி சேதப்படுத்தியது தொடர்பான விவகாரம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இது தொடர்பாக அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா 12 மாதங்கள் தடை விதித்தது.

இதனை தொடர்ந்து 2018 ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு வீரர்களும் பங்கேற்க பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்) தடை விதித்தது.

கோலியின் இளம்படையின் பாய்ச்சல் நிரம்பிய 2018

ஆண்டின் துவக்கத்தில் தென் ஆப்ரிக்க அணியோடு நடந்த டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற போதிலும், முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது.

அதேபோல் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 2-1 என்று முன்னிலை வகித்து மீண்டும் இந்த கோப்பையை இந்திய கைப்பற்றியுள்ளது.

பட மூலாதாரம், QUINN ROONEY

ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுக்கு எதிரான வெற்றிகள், ஆசிய கோப்பைவெற்றி போன்றவை இந்திய அணிக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் , இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-4 என்று இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.

மேலும், இந்த ஆண்டு விராட் கோலியின் ஆண்டாக அமைந்தது என்று கூறலாம். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று அனைத்து வடிவங்களிலும் கோலி மிக சிறப்பாக பங்களித்தார்.

சில போட்டிகளில் மற்ற அணி வீரர்களுடன் கோலி நடத்திய வாக்குவாதங்கள் அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தினாலும், ஆக்ரோஷமான தலைமைப்பண்பு மற்றும் இளம் வீரர்களை ஊக்குவிப்பது போன்ற அம்சங்களுக்கு அவர் பெரும் பாராட்டுகளை பெற்றார்.

பட மூலாதாரம், RYAN PIERSE

படக்குறிப்பு,

கோலி -பெய்ன் மோதல்

ஆண்டின் இறுதி நிலவரப்படி ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும், ஒருநாள் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.

ஐசிசி 19 வயதுக்குள்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் கிரிக்கெட்டை பாதித்த சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள்

மேற்கிந்திய தீவுகளில் நடந்த ஆறாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.

லீக் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக விளையாடி வென்ற இந்தியா, அரையிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை.

பட மூலாதாரம், Getty Images

அரையிறுதி போட்டியில் மூத்த வீராங்கனையான மித்தாலி ராஜை சேர்க்காதது இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்ததாக நிபுணர்கள் சாடினர்.

பயிற்சியாளர் ரமேஷ் பொவார் மற்றும் முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோர் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், தமது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க முயல்வதாகவும் மித்தாலி ராஜ் குற்றம் சாட்டினார்.

மீண்டும் ஒரு நாள் அணியின் தலைவராக மித்தாலி தேர்ந்தெடுக்கப்படாலும் , இந்த ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஏமாற்றம் மற்றும் சர்ச்சை நிரம்பிய ஆண்டாகவே இருந்தது.

மீண்டும் தொடங்கியது சிஎஸ்கேவின் அதகளம்

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,

வந்தார்கள்.... வென்றார்கள்!: மீண்டு வந்த சிஎஸ்கே

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இறுதியாட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி 11-ஆவது ஐபிஎல் கோப்பையை வென்று மீண்டும் பலமாக தனது இருப்பை பதிவு செய்தது.

இரு ஆண்டுகள் இடைவெளி, இந்திய அணியில் தோனியின் ஆர்ப்பாட்டமில்லாத பங்களிப்பு, சிஎஸ்கே அணி உரிமையாளர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆகியவை சிஎஸ்கே இந்த தொடரில் எப்படி பங்களிக்கும் என்ற வினாவை எழுப்பியது.

ஆனால், வழக்கம் போல அணியின் மூத்த மற்றும் இளம் வீரர்கள் , வலுவான தலைமை என தனது அதிரடி மற்றும் பிரத்யேக பாணியில் கோப்பையை தனதாக்கியது

புதுவரவுகள் சாதனை படைத்த ஆசிய விளையாட்டு போட்டிகள்

பட மூலாதாரம், JEWEL SAMAD

படக்குறிப்பு,

பெண்கள் ஹெப்டாதலன் பிரிவில் தங்கம் வென்ற இளம் வீராங்கனை ஸ்வப்னா

இந்தோனீசிய தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்ற 18ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளில், 289 பதக்கங்களை பெற்ற சீனா முதலிடத்தையும், 205 பதக்கங்களை பெற்ற ஜப்பான் இரண்டாவது இடத்தையும், 177 பதக்கங்களை பெற்ற தென் கொரியா மூன்றாவது இடத்தையும் பிடித்தன,

15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை பெற்று இந்தியா, 8ஆவது இடத்தை பிடித்தது.

2018 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகள் முதல் முறையாக ஒரு தங்கப் பதக்கமும் இல்லாமல் நாடு திரும்பின. இதனால் கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்ததோ என்று பல கேள்விகள் எழும்பின.

அதேவேளையில், தடகளம், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் போன்ற பல விளையாட்டுகளில் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

சாதனைக்கு வயது ஒரு தடையல்ல - நிரூபித்த மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மேரி கோம்

புது தில்லியில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் 6-ஆவது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார் 35 வயதாகும் மூத்த வீராங்கனை மேரி கோம்.

உலக மகளிர் குத்துச் சண்டை தொடரில் பல இளம் வீராங்கனைகள் விளையாடிய சூழலில், மூன்று குழந்தைகளின் தாயான மேரி கோமுக்கு தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்பிருக்காது என்றே பலரும் கருதினர்.

ஆனால், இவற்றையெல்லாம் புறந்தள்ளி, தனது திறமை மற்றும் விடாமுயற்சியின் மீது பெரும் நம்பிக்கை வைத்து விளையாடிய மேரி கோம் 6-ஆவது முறையாக தங்கப்பதக்கம் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

பிரதமராக ஆன கிரிக்கெட் வீரர்

பட மூலாதாரம், PTI

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான், பாகிஸ்தானின் 22வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கும் இம்ரான்கானின் பி.டி.ஐ கட்சி, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

இதன் மூலம் பிரதமராக மாறிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இம்ரான் பெற்றார்.

பேட்மிண்டன் உலகில் சாதித்த இந்திய நட்சத்திரங்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆண்டு இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு சிறந்த ஆண்டாக இருந்தது என்றே கூறவேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தை பெற்று சாதனை படைத்தார்.

ஆண்டின் இறுதியில், சீனாவில் நடைபெற்ற பாட்மிண்டன் BWF World Tour இறுதிச் சுற்றில் வென்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

BWF World Tour போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெற்றார் சிந்து.

தமிழக வீரர்கள் சாதித்த காமன்வெல்த் போட்டிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சதீஷ் குமார் சிவலிங்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக 66 பதக்கங்களை பெற்ற இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்தது.

இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலர் இந்தப் போட்டியில் சிறப்பாக பங்களித்தனர்.

2018 காமன்வெல்த் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனைகள் பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா, டேபிள் டென்னிஸ் வீரர்கள் சரத் கமல் மற்றும் சத்யன் உள்ளிட்டோர் பதக்கங்கள் வென்றனர்.

இதேபோல், பளு தூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: