இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது எப்படி? முக்கிய காரணங்கள்

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா படத்தின் காப்புரிமை Getty Images

சிட்னியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக சமனில் முடிய, டெஸ்ட் தொடரை 2-1 என்று இந்தியா வென்றது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் 72 ஆண்டுகளில் தனது முதல் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

சிட்னி போட்டியில் முதல் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் தனது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

தனது முதல் இன்னிங்ஸ் 300ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா எடுக்க, அந்த அணியை மீண்டும் பேட் செய்ய இந்தியா பணித்தது.

ஆட்டத்தின் நான்காவது நாளின் பெரும்பகுதி மழையின் காரணமாக பாதிக்கப்பட, கடைசி நாளான இன்றும் (திங்கள்கிழமை) தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Mark Kolbe

இதனால் டெஸ்ட் தொடரை 2-1 என்று இந்தியா வென்றது.

இந்த தொடரை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணங்கள் என்ன?

என்ன ஆனது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு?

இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா தோற்பதற்கு மிக முக்கிய காரணம் மட்டைவீச்சாளர்கள்தான். இந்த டெஸ்ட் தொடரில் ஒரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கூட சதமடிக்கவில்லை என்பது அந்த அணியின் பேட்டிங் குறித்து படம்பிடித்து காட்டுவதாக அமைகிறது.

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத காரணத்தாலும், மற்ற மூத்த பேட்ஸ்மேன்களான ஃபிஞ்ச் மற்றும் ஷான் மார்ஷ் போன்றோரின் பேட்டிங் சிறப்பாக அமையாததும் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அணியின் தூணாக புஜாரா: பக்கபலமாக கோலி, ரோகித், பந்த்

கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான தடுப்பாட்டம் மற்றும் நேர்த்தியால் அணிக்கு பல போட்டிகளை வென்று தந்த ராகுல் டிராவிட் போல நடப்பு தொடரில் புஜாரா தனது சிறப்பான ஆட்டம் மூலம் 3 சதங்களை எடுத்தார்.

இதே போல் இவருக்கு பக்கபலமாக கோலியும், மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட ரோகித் சர்மாவும் சிறப்பாக விளையாடினர்.

இளம் விக்கெட்கீப்பர் ரிஷப் பந்த் சிட்னி போட்டியில் அபாரமாக விளையாடி சதமடித்தார்.

சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை எடுத்தாக வேண்டும்.

அவ்வாறான சூழலில் இந்த டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய பந்துவீச்சாளர்கள் பெரும் உதவியாக விளங்கினர். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் அடிலெய்ட் மற்றும் சிட்னியில் சிறப்பாக பந்துவீசினர்.

ஆனால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் பூம்ரா ஆகியோர் தொடரில் அதிக அளவில் விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமன்றி பல கட்டங்களில் அந்த அணியை நிலைதடுமாற செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: