India Vs Australia: ரிஷப் பந்த் அதிரடி ஆட்டம் - தோனியின் இடத்தை பூர்த்தி செய்கிறாரா?

ரிஷப் பந்த் படத்தின் காப்புரிமை Getty Images

2014-ல் மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார் மகேந்திர சிங் தோனி.

அயல்மண்ணில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த சமயம் அது. ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் டெஸ்ட் தொடரின் இடையிலேயே கேப்டன் பதவியை விட்டு விலகினார் தோனி, தவிர டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போட்டார். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்து வந்தவர் திடீரென ஓய்வு பெற்றது அவரது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தோனியின் ஓய்வுக்கு பிறகு விருத்திமான் சாஹா, பார்த்தீவ் படேல், தினேஷ் கார்த்திக் என சீனியர் வீரர்களை விக்கெட் கீப்பராக களமிறக்கியது கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம். விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பிங் பணியில் ஜொலித்தபோதும் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீரர்களை எதிர்கொண்டு பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை.

கொல்கத்தாவில் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் சதமடித்தார். ராஞ்சியில் 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் 117 ரன்கள் குவித்தார். இதைத்தவிர தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகளுக்கு எதிராக ஒரு அரைசதம் கூட விளாசியதில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்த ரிஷப் பந்த் தனது திறமையின் மூலம் பெரும் கவனம் பெற்றிருக்கிறார்.

யார் இந்த ரிஷப் பந்த்?

2016 ஐபிஎல் ஏலத்தின்போது 1.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் 19 வயது ரிஷப் பந்த். அதே நாளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் காலிறுதியில் சதமடித்து முத்திரை பதித்தார். முன்னதாக இதே தொடரில் 18 பந்தில் அரை சதம் அடித்து வியக்க வைத்திருந்தார்.

குறிப்பிட்ட சில காலம் மட்டும் முழு ஃபார்மில் விளையாட்டில் கவனம் ஈர்த்துவிட்டு பின்பு காணாமல் போன கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் தனது பேட்டிங்கின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்துக்குள்ளாக்குவது ரிஷபின் பாணியாக இருந்துவந்துள்ளது.

2016-ம் ஆண்டு மகாராஷ்டிரா அணிக்கு எதிராக நடந்த ரஞ்சி போட்டியில் 468 பந்துகளில் 308 ரன்கள்குவித்தார். அதில் ஒன்பது சிக்ஸர்கள் அடங்கும். அந்த சீசனில் நான்கு சதங்கள் விளாசினார். ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 48 பந்துகளில் அவர் சதமெடுத்தது பலரின் புருவங்களை உயர்த்தியது. முதல் தர போட்டிகளில் இவ்வளவு வேகமாக எந்தவொரு இந்திய வீரரும் ரஞ்சியில் சதம் கண்டதில்லை. ஜார்கண்ட் அணிக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் கண்ட ரிஷப் பந்த் மொத்தமாக 21 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

ஒருமுறை இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்துக்கு பந்த் அளித்த பேட்டியில் தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பியதே இல்லை எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்றைய தேதியில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை விட இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்திருக்கிறார் ரிஷப்

படத்தின் காப்புரிமை Visionhaus/Getty Images

''நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடவே விரும்புகிறேன். ஆனால் எனது பயிற்சியாளர் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஒருவரை சர்வதேச கிரிக்கெட் வீரனாக அங்கீகரிக்க மாட்டேன் எனச்சொன்னார். அவருக்காக நான் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறேன்'' எனக் கூறியிருக்கிறார்.

ஆடுகளங்கள் மாறினாலும், எதிரணிகள் மாறினாலும், வெள்ளைப்பந்தாக இருந்தாலும் சரி சிவப்பு பந்தானாலும் சரி, டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என வெவ்வேறு பார்மெட்டுகளாக இருந்தாலும் ரிஷப் தனது ஆட்ட பாணியில் பெரியளவில் மாற்றங்களைச் செய்ததில்லை.

கிட்டத்தட்ட முன்னாள் இந்திய வீரர் சேவாக் பாணியில் பெரிதாக கவலைப்படாமல் மனஉறுதியோடு பந்தை எதிர்கொள்பவராக இருக்கிறார் ரிஷப் பந்த்.

''டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என பார்மெட் மாறினாலும் நான் எனது பாணியை மாறப்பபோவதில்லை. ஒரு பந்து விளாசுவதற்கு ஏற்றதெனில், நான் நிச்சயம் விளாசுவேன். அடுத்த பந்தும் விளாசுவதற்கு ஏற்றதெனில் தொடர்ந்து விளாசுவேன். ஒருவேளை ஒரு பந்தை அடிக்காமல் விட்டுவிட வேண்டுமெனில் நிச்சயம் விட்டுவிடுவேன்'' என அப்பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ரிஷப்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்துக்கு இந்திய அணியில் முதலில் டி20 அணியில் இடம் கிடைத்தது. இதுவரை 10 டி20 போட்டிகள் இந்தியாவுக்காக விளையாடியுள்ள ரிஷப் பந்த் ஒரு போட்டியில் அரை சதம் அடித்ததைத் தவிர பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஆண்டு இங்கிலாந்து எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.

நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்ததும் ஹர்டிக் பாண்டியாவுடன் இணைந்து விளையாடினார். முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடிய பந்த் தனது ரன் கணக்கை சிக்ஸர் அடித்து துவக்கினார்.

அடில் ரஷீத் வீசிய பந்தில் 97 ரன்களில் இருந்த விராட் கோலி அவுட் ஆனார். கோலியின் சதத்தை தடுத்த அடில் ரஷீத்தின் அடுத்த ஓவரை ரிஷப் எதிர்கொண்டார்.முதல் பந்தில் ரன் இல்லை. இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்தார் ரிஷப். இப்படித்தான் துவங்கியது ரிஷப்பின் டெஸ்ட் பயணம்.

நாட்டிங்காமிலும், சௌதாம்டனிலும் ரிஷப் ஒரு அரை சதம் கூட விளாசவில்லை.

ஆனால், ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இன்னிங்சில் புஜாரா, கோலி ஆகியோர் டக் அவுட் ஆக, ஆறு இந்திய வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் பெவிலியன் திரும்பினார்கள். ரிஷப் பந்த் அப்போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தார். இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த முதல் சதம் இது.

அதன்பின்னர் கடந்த அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 92 ரன்கள் விளாசினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 58.33 எனும் சராசரி, 74 ஸ்ட்ரைக் ரேட்டோடு ஏழு இன்னிங்ஸில் 350 ரன்கள் குவித்துள்ளார்.

சதீஸ்வர் புஜாராவுக்கு அடுத்தபடியாக இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய டெஸ்ட் தொடர்களில், தொடரின் முடிவில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். கபில்தேவ், சச்சினுக்கு அடுத்தபடியாக புஜாராவும் இப்பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 7 இன்னிங்ஸ்களில் 282 ரன்கள் குவித்து இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பந்த் ஒரு அரைசதமும் எடுக்கவில்லை. ஆனால் 25,28,36,30,39,33 என ஆறு இன்னிங்ஸ்களிலும் சராசரியாக குறிப்பிடத்தக்க ரன்களை எடுத்துள்ளார். நான்காவது டெஸ்ட் போட்டியில் 189 பந்துகளில் 159 ரன்கள் குவித்திருக்கிறார்.

இதுதொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச் பிடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியொன்றில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரராகியுள்ளார் ரிஷப் பந்த்.

மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் தான் விளையாடிய 144 இன்னிங்ஸ்களில் ஆறு சதங்கள் கண்டிருந்தார். எனினும் இதில் ஒன்று கூட இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மண்ணில் வரவில்லை. 21 வயதாகும் ரிஷப் பந்த் தனது முதல் சுற்றுப்பயணத்தின்போதே இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் சதம் விளாசியிருக்கிறார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்தவர் மகேந்திர சிங் தோனி. டெஸ்ட் போட்டிகளில் அவரது இடத்தை பந்த் நிரப்புவாரா எனும் கேள்விகள் சுழற்றியடிக்கின்றன. அடுத்தடுத்த போட்டிகளில் பந்த்-தின் ஆட்டம் அதற்கு பதில் சொல்லும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்