ஹர்திக் பாண்டியா விவகாரமும், கிரிக்கெட்டில் உள்ள பாலியல் பாகுபாடும்

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல்

"எனக்கு ஹர்திக் பாண்டியாவை போல ஆக வேண்டும்."

சில மாதங்களுக்கு முன்பு என் தோழியின் 7 வயது மகன் இவ்வாறு சொன்ன போது, நாங்கள் சிரித்து மகிழ்ந்தோம். என் தோழிக்கு அவளது மகன் பெரிய கிரிக்கெட் விளையாட்டு வீரராக வர வேண்டும் எனபதே விருப்பம். முக்கியமாக ஐபிஎல்-இல்.

ஆனால், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஹார்திக் பேசியவை சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், அவரது மகனை எப்படி எதிர்கொள்வது என என் தோழிக்கு தெரியவில்லை.

"டிவியில் ஹர்திக் குறித்த செய்தியை பார்த்து என் மகன், அவனுக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரருக்கு என்ன ஆனது என்று கேட்டான். நான் எப்படி சொல்வேன்? சில நேரம் நமக்கு பிடித்தமான ஹீரோக்கள் கூட தவறான உதாரணமாக இருப்பார்கள் என்பது அவனுக்கு புரியுமா?"

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவனுடன் பேசுமாறும், பெண்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை விளக்குமாறு நான் தோழியிடம் கூறினேன். அவளும் அதற்கு ஒப்புக் கொண்டாள்.

இந்திய சமுதாயம் மற்றும் கிரிக்கெட் துறையில் இருக்கும் பாலியல் மற்றும் பெண்களுக்கு எதிரான வெறுப்பு குறித்து பேச இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நானும் நினைக்கிறேன்.

ஆண்மை மற்றும் ஆபாச பேச்சுக்கு இடையேயான மெல்லிய கோடு

ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கை முறை குறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. எனக்கு உரிமையும் இல்லை. அவருக்கு எப்படி வேண்டுமோ அப்படி வாழ எல்லா உரிமையும் உண்டு. அவர் வாழ்க்கையில் எவ்வளவு பெண்கள் இருந்தார்கள் மற்றும் அவர்களுடன் பாண்டியாவுக்கு என்ன தொடர்பு இருந்தது என்றெல்லாம் அவரது சொந்த விஷயம். மேலும், இவ்வாறான சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும் முதல் கிரிக்கெட் வீரரல்ல இவர்.

படத்தின் காப்புரிமை TWITTER / KL RAHUL

ஆனால், அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, அவர்கள் பெண்கள் மீது காட்டிய அவமரியாதையும் அலட்சியமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை. பெண்கள் குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், மற்றும் கறுப்பு நிறத்தை குறித்தும் இனவாத கருத்துகளையும் பேசியுள்ளனர்.

அங்குதான் அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

பிசிசிஐ நோட்டீஸ் அனுப்ப, ஹர்திக் மற்றும் ராகுல் இருவரும் தங்களது வருத்தங்களையும் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இரு வீரர்களையும் பிசிசிஐ இடைநீக்கம் செய்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹார்திக் பேசியதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆண்கள் இப்படித்தான் என புறக்கணித்திருப்பார்கள்.ஆனால், தற்போது காலம் மாறிவிட்டது.

படத்தின் காப்புரிமை TWITTER / KL RAHUL
Image caption கே எல் ராகுல்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர்கள் பேசியது, பெண்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவே பார்க்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் "தவறான கருத்துகளை அணி என்றும் ஆதரிக்காது" என தெளிவாக விளக்கியுள்ளார்.

வளர்ச்சியும் வீழ்ச்சியும்

சில நாட்களுக்கு முன்பு வரை ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கை ஒரு வெற்றிக் கதையாகவே பார்க்கப்பட்டது. நம்பிக்கை மற்றும் கபடமற்ற பேச்சுடன் தீவிரமான கிரிக்கெட் வீரர்களை பிரதிபலிக்கும் விதத்திலேயே இருந்தார்.

குறைந்த காலத்திலேயே சூரர்த்தில் இருந்து வதோதரா, மேலும் ஐபிஎல்-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணி என தனது பெரும் பயணத்தை மேற்கொண்டார்.

2015ஆம் ஆண்டு ஐபிஎல் விளையாட்டில் மும்பை அணி வெற்றி பெற, ஹர்திக்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். ஒரே ஆண்டிற்குள் இந்திய அணியிலும் அடி எடுத்து வைத்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER / HARDIK PANDYA
Image caption ஹார்திக் பாண்டியா

ஆனால் அவர் எவ்வளவு வேகமாக உயர்ந்தாரோ அவ்வளவு வேகமாக வீழ்ச்சியும் வந்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சர்ச்சைக்கு உண்டான கருத்துகளால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளது. நிகழ்ச்சியை நடத்திய இயக்குநர் மற்றும் தொகுப்பாளரான கரன் ஜோகர் இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மறுபக்கம் ஹர்திக் பாண்டியாவுக்கு அவரது ரசிகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்தனர். அவருக்கு 25 வயது மட்டுமே ஆகிறது என்றும் அவர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளதால் மன்னிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இதனை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா?

கிரிக்கெட்டும் பாலியல் பாகுபாடும்

பாலியல் பாகுபாடு மற்றும் பெண்கள் வெறுப்பு கிரிக்கெட் துறையில் இருக்கிறது. ஆண் ஆதிக்கம் இன்னும் நிலவுகிறது. இது ஒரு பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது.

இதனை வைத்து கிரிகெட் வீரர்கள் அனைவரும் தவறானவர்கள் என்று சொல்ல வரவில்லை. மேலும், இந்த பிரச்சனை நிச்சயம் இந்தத்துறையில் மட்டும் இருக்கவில்லை. ஆனால், தற்போது நாம் கிரிக்கெட்டை குறித்தே பார்க்கிறோம்.

ஆஸ்திரேலிய லீக் போட்டிகளின்போது வீரர் கிரிஸ் கெய்ல் மற்றும் செய்தியாளர் மெல் மெக்லாஃப்லின் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. கவர்ச்சியான ஆளுமை கொண்ட கெய்ல், அன்று சற்று அதிகமாகவே பேசினார். அவர் கூறிய சில கருத்துகள் அந்த பெண் செய்தியாளரை முகம் சுழிக்க வைத்தது மட்டுமல்லாமல், கெய்லின் நடத்தை குறித்த பெரும் சர்ச்சையையும் கிளப்பியது.

ஆனால், அப்போதில் இருந்து இப்போது வரை ஏதேனும் மாறியுள்ளதா என்பது ஒரு கேள்விக்குறியே.

விளையாட்டு வீரரான மித்தாலி ராஜிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட்டர் யார் என்பது கேட்டதும் சர்ச்சையை கிளப்பியது.

இளம் வீரர்களிடையே விழிப்புணர்வு

அனைத்து கிரிக்கெட் வீரரும் இதுபோன்று என்று கூற முடியாது. சிலர் பாலியல் சமத்துவத்துக்கு ஆதரவாகவும், அதனை வெளிப்படுத்தவும் தயக்கம் காட்டியதில்லை.

ஹர்திக் மற்றும் ராகுலின் விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில், ராகுல் திராவிட்டின் பழைய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று டிராவிடை வம்புக்கு இழுக்க நினைத்தது. நடிகை ஒருவரை செய்தியாளராக வேடமிட்டு, ட்ராவிடை பேட்டி எடுக்க அனுப்பி வைத்திருந்தனர். அது அவருக்கு தெரியாமல் உளவு பார்க்கும் கேமரா மூலமாக பதிவானது.

அதில் அந்த நடிகை திராவிடுக்கு அருகில் போவதும், அவரிடம் காதலை வெளிப்படுத்தியதும், திராவிட்அதனை ஏற்க மறுத்ததும் பதிவாகி இருந்தது.

படத்தின் காப்புரிமை Mark Evans

அந்த நிகழ்வின்போது முதிர்ச்சியுடன் திராவிட் நடந்து கொண்டதை இன்றும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அதே போல இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறார். கோலி கடுமையான வீரராக இருந்தாலும் கூட, மக்கள் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவை ட்ரோல் செய்த போது அவருடன் நின்று அவரை ஆதரித்தார்.

அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இதுபோல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானதே. அவர்களும் சமூகத்தில் வாழும், சமூக சிந்தனையை பிரதிபலிக்கும் சாதாரண நபர்கள்தான். ஆனால், அதே நேரத்தில் சமூக பார்வையை மாற்ற வைக்கக்கூடிய சக்தி அவர்களிடம் உள்ளது.

அதனால்தான், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு வீரர்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அவர்களது கையேட்டில் பாலியல் சம்மதம் குறித்த ஒரு முழு அத்தியாயமே இருக்கும். "நல்ல முடிவுகள் எடுப்பது என்பது வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் முக்கியம்" என்று அது தொடங்கும்.

இந்தியாவில் அப்படி ஒரு கையேடு ஏன் இல்லை? விளையாட்டு துறையில் இது போன்ற பாலியல் பாகுபாடு, பெண் வெறுப்பு, இனவாதம் இவற்றையெல்லாம் மாற்றும் திட்டம் ஏன் இல்லை?

இந்த கேள்விகள் எல்லாம் என் மனதிற்குள் வந்து போகின்றன.

அப்படி பார்த்தால், ஹர்திக் பாண்டியா விவகாரமானது, இது போன்ற பிரச்சனைகள் குறித்து மக்களை பேச வைத்ததற்கான நேர்மறை அடையாளமாகவே பார்க்கிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: