ஆஸ்திரேலிய சாம்ராஜ்யத்தை வீழ்த்திய இந்தியா - உலகக்கோப்பையை வெல்லுமா கோலியின் படை?

உலகக்கோப்பையை வெல்லுமா கோலியின் படை? படத்தின் காப்புரிமை Darrian Traynor - CA

மெல்பர்னில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியசாத்தில் வென்று, ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றிய இந்தியா, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

கடந்த நவம்பர் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்தியா ஏற்கனவே வென்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி தொடரில் இறுதி போட்டி கைவிடப்பட்ட நிலையில், இந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடரை இன்று (வெள்ளிக்கிழமை) வென்ற இந்தியா ஏராளமான பாராட்டுகளையும், எதிர்பார்ப்புகளையும் பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Jewel SAMAD / AFP)

நீண்ட காலமாக, ஆஸ்திரேலியா மட்டுமல்ல எந்த வெளிநாட்டு மண்ணிலும் இந்திய அணியினர் சிறப்பாக பங்களித்ததில்லை.

பெரும்பாலும் இந்திய மண்ணில் பிரகாசிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் அயல்நாட்டு சுற்றுப்பயணங்களில் தடுமாறுவதுண்டு. ஓரிரு வேக பந்துவீச்சாளர்களை தவிர மற்ற வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது.

ஆனால், அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இவையனைத்தையும் மாற்றியது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தினர். பந்து வீச்சாளர்கள், குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தங்கள் வேகத்தில் பயமுறுத்தினார்கள். தனது கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது.

வெற்றிகரகமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு பின்னர், எதிர்வரும் ஐசிசி உலக கோப்பையை இந்தியா வெல்வது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணிகளில் தற்போதைய அணிதான் சிறந்த அணியா என்ற விவாதம் தொடங்கிவிட்டது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ​​முன்னாள் இந்திய வீரர் மதன் லால் "தற்போதைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடியுள்ளது. பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் தொடரில் மிக சிறப்பாக விளையாடினர். இஷாந்த், பூம்ரா, ஷமி ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையை சிதைத்தனர்'' என்று நினைவுகூர்ந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''டெஸ்ட் தொடரில் புஜாராவின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. அவருக்கு பக்கபலமாக கோலி மற்றும் மாயங்க் ஆகியோர் விளையாடினர். புஜாராவின் மூன்று சதங்களும் மிக அற்புதமானவை'' என்று அவர் கூறினார்.

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய அணி மீண்டும் திறன்பட விளையாட சிறிது காலம் தேவைப்படும் என்று ஆஸ்திரேலிய அணியின் செயல்திறன் குறித்து மதன் லால் பதிலளித்தார்.

மறு அவதாரம் எடுத்த தோனி

சில நாட்களில் தொடங்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தைப் பற்றி கேட்டபோது, ​​'நியூசிலாந்தை ஒரு சாதாரண அணி என்று எண்ணாதீர்கள். இந்தியா அந்த அணி குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இது ஒரு கடுமையான சுற்றுப்பயணமாக இருக்கலாம்'' என்றார்.

இந்த அம்சங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விஜய் லோக்பாலி, ''இந்த தொடரில் மிக சிறப்பாக விளையாடிய இந்திய அணி நம்பிக்கையுடன் காணப்படுகிறது. மீண்டும் தோனி பிரகாசிக்க தொடங்கியது இந்திய அணிக்கு எதிர்வரும் போட்டிகளில் பெரும் லாபமாக அமையும். இறுதிக் கட்டங்களில் சிறப்பாக விளையாடும் தோனி மீண்டும் தன்னை அழுத்தமாக நிரூபித்துள்ளார்'' என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை JEWEL SAMAD

''இதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலிய தொடர்கள் இந்திய வீரர்களின் நம்பிக்கையை குலைத்து, சிலரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ளது. ஆனால், இந்த சுற்றுப்பயணம் எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியாவின் சிறப்பான பங்களிப்புக்கும், வரலாற்று வெற்றிகளுக்காகவும் பெரிதும் பேசப்படும்'' என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் கூறினார்.

தலைவராக வழிநடத்திய கோலி

இந்த தொடரில் வெற்றி பெற விராட் கோலியின் பங்களிப்பு இந்தியாவுக்கு மகத்தானது. பெர்த்தில் மிகவும் போராடி அவர் அடித்த சதம், புஜாராவுடன் ஜோடி சேர்ந்து அவர் குவித்த ரன்கள், அடிலெய்டு ஒருநாள் போட்டியில் அவரது அற்புத இன்னிங்ஸ் ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

எதிரணியினருடன் கோலி செய்த வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் எதிரான பல்வேறு விமர்சனங்களை பெற்றுத்தந்த போதிலும், அணியை விராட் வழிநடத்திய பாங்கு மற்றும் மாயங்க் போன்ற புதியவர்களை அவர் ஊக்குவித்தது ஆகியவை பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னாள் இந்திய வீரர்கள் மட்டுமல்ல, டேரன் லீமன், மைக்கேல் வான் மற்றும் மைக்கேல் கிளார்க் போன்ற பல வெளிநாட்டு வீரர்களும் கோலிக்கு புகழ்மழை பொழிகின்றனர்.

''கோலி தொடர்ந்து களத்தில் சிறப்பாக பங்களித்து வந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட போட்டியில் அவர் சிறப்பாக பேட் செய்யவில்லையென்றாலும் தனது கேப்டன்ஷிப் மற்றும் கள பங்களிப்பில் அதனை அவர் ஈடுகட்டுவார்'' என்றார் ரகுராமன்

''டெஸ்ட் தொடரில் புஜாரா தவிர பல சந்தர்ப்பங்களில் கோலியும் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும், இந்தியா, வெளிநாடு என்று எங்கும் அவர் பிரகாசமாக மின்னுகிறார்'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

புயல்வேக பந்துவீச்சாளர்கள்

முன்பு, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இந்திய வேக மற்றும் மிதவேகப்பந்து வீச்சாளர்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது. பந்துவீச்சுக்கு சாதகமான களத்தில்கூட எதிரணி பேட்ஸ்மேன்கள் அவர்களின் பந்துவீச்சில் எளிதாக ரன் குவிப்பார்கள்.

அவர்களின் பந்துவீச்சு வேகம் எதிரணி வீரர்களை அச்சுறுத்துவதாக அமையாது.

ஆனால், எல்லாமே மாறியது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில்தான். இந்த தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பூம்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய நால்வரின் பந்துவீச்சு எதிரணியினரை திகைக்கவைத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது.

140 கி.மீட்டர் வேகத்தில் பந்துவீசி பூம்ரா, ஷமி மற்றும் உமேஷ் ஆகியோர் அசத்திவந்த நிலையில்,சராசரியாக 130 கி.மீட்டர் வேகத்தில் பந்துவீசும் இஷாந்த் சர்மா, எதிரணியினரை திகைக்க வைக்கும் விதமாக பவுன்சர்கள் வீசி விக்கெட்டுகளை குவித்தார்.

படத்தின் காப்புரிமை JEWEL SAMAD

அதேபோல் இந்திய சுழல்பந்துவீச்சளர்களும் அசத்தினர். ஒருநாள் போட்டிகளில் புவனேஸ்வர்குமார் சிறப்பாக பந்துவீசினார்.

தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமானது இந்திய ரசிகர்களுக்கு பல சாதகங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் அணி தேர்வு மற்றும் பேட்டிங் வரிசையை தீர்மானிப்பதில் தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு சில சவால்கள் காத்திருக்கின்றன.

''டெஸ்ட் தொடரில் புஜாரா மற்றும் பூம்ரா மிக சிறப்பாக ஜொலித்த நிலையில், கோலி, மாயங்க் போன்றோர் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர். அதேபோல் ஒருநாள் தொடரில் தோனி, கோலி மற்றும் புவனேஷ்வர் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்'' என்று விஜய் லோக்பாலி கூறினார்.

''மாயங்க் அகர்வால்தான் இந்த தொடரின் கண்டுபிடிப்பு என்று கூறலாம். மெல்போர்னில் தனது அறிமுக போட்டியில் மாயங்க் விளையாடிய விதம் அவர் இன்னும் சில ஆண்டுகள் சிறப்பாக விளையாடி அணியில் தொடர்ந்து இடம்பெறுவர் என உணர்த்துகிறது'' என்று ரகுராமன் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

2019 உலகக்கோப்பை இந்தியா வசமாகுமா?

ஒருநாள் தரவரிசை பட்டியலில் உலகின் இரண்டாம் நிலையில் உள்ள இந்தியா, நியூசிலாந்திற்கு எதிராக வரும் வாரத்தில் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவில் நடக்கும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

தற்போதைய தொடரில் இந்தியாவின் வெற்றிகள் மற்றும் ஒட்டுமொத்த அணியின் நம்பிக்கையுடன் கூடிய மனோபாவம் ஆகியவை தனது மூன்றாவது உலக கோப்பையை இந்தியா கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.

2019 மே மாதத்தில் நடக்கும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையில் இந்தியா ஏற்படுத்தவுள்ள சவால்கள் குறித்து பரந்த அளவில் விவாதங்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.

''ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வலுவான அணியாக உள்ளது. இந்த தொடர் மற்றும் சுற்றுப்பயணம் நிச்சயமாக இந்திய வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும். எதிர்வரும் உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள வலுவான போட்டியாளராக இந்தியா திகழ்கிறது. உலகக் கோப்பைக்கு முன்னர் மீண்டும் தனது பழைய பாணியில் தோனி விளையாட ஆரம்பித்தது அணிக்கு நன்மை பயக்கும்'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Mike Owen

"சிறந்த வேக பந்துவீச்சாளர்கள், கணிக்க முடியாத சுழல் பந்துவீச்சாளர்கள், கோலி மற்றும் தோனி ஆகியோரின் வழிகாட்டுதலுடன் களமிறங்கும் பேட்டிங் வரிசை என உலகக் கோப்பைக்கு மிகவும் வலுவான போட்டியாளராக இந்தியா தயராகி வருகிறது'' என்று மதன் லால் குறிப்பிட்டார்.

மொத்தத்தில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சராசரி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்று அவர்கள் மலை அளவு நம்புகின்றனர்.

ஆனால், இதேபோல் நிலைத்தன்மையுடன் கூடிய சிறப்பான பங்களிப்பு மற்றும் சூழலுக்கு ஏற்றார் போல் விளையாடும் பாங்கு ஆகியவை மட்டுமே இந்தியாவுக்கு அதன் மூன்றாவது உலகக்கோப்பையை பெற்றுத்தரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :