INDvsNZ: இரண்டாவது டி20 போட்டி - முதல் போட்டி தோல்விக்கு இந்தியா பதிலடி

இந்தியா படத்தின் காப்புரிமை MICHAEL BRADLEY

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவா் போட்டி இன்று நடைபெற்றது.

இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது.

இன்று (வெள்ளிக்கிழமை ) பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா 18.5 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து போட்டியில் வென்றது.

28 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டர்களின் உதவியோடு 40 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக அதிகபட்சமாக ரோகித் சர்மா 50 ரன்கள் எடுத்தார். குருநால் பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து வீரர்களை கட்டுக்குள் வைத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய குருநால் பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பம் முதலில் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் கை ஓங்கி இருந்தது. சென்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் இந்த போட்டியில் 12 ரன்களில் புவேனஸ்வர் குமாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெலிங்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது.

படத்தின் காப்புரிமை AFP

இந்த போட்டியில் தோற்றால் தொடரை நியூசிலாந்து அணி வென்றுவிடும் என்பதால் இன்றைய போட்டியில் வீரர்களின் தேர்வு குறித்து இந்திய அணி அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்தப் போட்டிக்காக இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இந்திய அணியை பொருத்தவரையில் நடப்பு டி20 போட்டி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தோனிக்கும் மீண்டும் இடம் கிடைத்தது.

கடந்த போட்டியில் தோனி, ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய 3 விக்கெட்கீப்பர்களும் விளையாடினர்.

இதில் தோனி 39 ரன்கள் எடுக்க, தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவருமே ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தமிழக வீரர் விஐய் ஷங்கர்

மேலும் முதல் டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. அதில் புவனேஷ்வர் குமார், கலீல் அகமது மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய மூவரும் தங்கள் பந்துவீச்சில் அதிக அளவில் ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

தொடரைக் கைப்பற்றப்போவது யார் என்பதை முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, பிப்ரவரி 10 அன்று ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.

அந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்குத் தொடங்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :