INDvsNZ: நியூசிலாந்தின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா தோல்வி; தொடரையும் இழந்தது

INDvsNZ படத்தின் காப்புரிமை Hannah Peters / getty images

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளிடையே இன்று ஹாமில்டனில் நடைபெற்ற, தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றுள்ளது.

இதன்மூலம் இந்தத் தொடரையும் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 20 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் நியூசிலாந்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நியூசிலாந்தின் சிறப்பான தொடக்கம்

அந்த அணிக்காக அதிகபட்சமாக, தொடக்க வீரர் காலின் மன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகளும் அடக்கம்.

படத்தின் காப்புரிமை Hannah Peters / getty images

இன்னொரு தொடக்க வீரரான நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிம் செய்ஃப ர்ட் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.

தொடரைக் கைப்பற்றப்போவது யார் என்பதை முடிவு செய்யும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.

ஹாமில்டனில் போட்டி நடைபெறும் செட்டன் பார்க் மைதானத்தில் இதுவரை ஒரு சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்சமாக எடுக்கப்பட்டது 202 ரன்கள்தான். எனினும், இன்று அதைவிடக் கூடுதலாக 10 ரன்கள் எடுத்த நியூசிலாந்து, ஜிம்பாப்பே அணிக்கு எதிராக 202 எடுத்த தங்கள் முந்தைய சாதனையை முந்தியது.

இந்திய அணியின் மோசமான பந்துவீச்சு

இன்றைய போட்டியில், குல்தீப் யாதவ் தவிர இந்தியப் பந்துவீச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. தாம் வீசிய நான்கு ஓவர்களில், குல்தீப் யாதவ் ஓவருக்கு சராசரியாக 6.5 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடந்த போட்டியில் குருநால் பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால், இன்றைய போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காமல், ஓவருக்கு சராசரியாக 13.5 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

தொடக்கத்தில் சரிவு பின்பு முன்னேற்றம்

இரண்டாவதாக பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ஷிகர் தவான் முதல் ஓவரிலேயே, வெறும் ஐந்து ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிசேல் சேன்ட்னரின் பந்துக்கு டேரில் மிசேல் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் பொறுப்புடன் விளையாடி 28 பந்துகளில், இரண்டு சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகள் என ஒட்டுமொத்தமாக 43 ரன்கள் எடுத்தார்.

தோனி இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் மற்றும் குருனால் பாண்ட்யா ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 33 மற்றும் 26 ரன்கள் எடுத்தனர்.

படத்தின் காப்புரிமை Hagen Hopkins
Image caption அணித்தலைவர் ரோஹித் சர்மா 32 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

வெலிங்டனில் நடந்த இத்தொடரின் முதல் போட்டியில், 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்து.

எனினும், இரண்டாவது போட்டியில் ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றதால் தொடர் 1-1 என்று சமன் ஆனது.

டி20 தொடர் தொடங்கும் முன்னர் இருநாட்டு அணிகளுக்கும் இடையே நடந்த, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. இன்றைய வெற்றியால் நியூசிலாந்து தொடரைக் கைப்பற்றியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்