பாகிஸ்தான் குழுவுக்கு அனுமதி மறுப்பு: சர்வதேச ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு சிக்கல்

சர்வதேச ஒலிம்பிக்

பட மூலாதாரம், IOC

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுப் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் குழுவினர் பங்கேற்க இந்தியா அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு வரும் காலங்களில் ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் புல்வாமா அருகில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில், 40 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாகவே, பாகிஸ்தான் குழுவினருக்கு இந்தியா விசா வழங்கவில்லை என்று கருதப்படுகிறது.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் இந்தியாவில் நடத்தவுள்ள உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க இருந்த துப்பாக்கி சுடுதல் பிரிவுக்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று எனும் அந்தஸ்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) ரத்து செய்துள்ளது.

வரும் காலங்களில் ஒலிம்பிக் சாசனத்தின் கொள்கைகள் முழுமையாகப் பின்பற்றப்படும் என்று தெளிவான, எழுத்துபூர்வமான உத்தரவாதம் இந்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியிடம் இருந்து பெறப்படும்வரை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் தொடர்பான பிற நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தி வைக்க ஐ.ஓ.சி-யின் செயற்குழு முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Cameron Spencer

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் புதுடெல்லியில் பிப்ரவரி 20 முதல் 28 வரை துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

இந்த உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு வரும் 2020இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று எனும் அந்தஸ்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது.

இதில் 25 மீட்டர் பிரிவில் பங்கேற்க இருந்த இரண்டு பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு விளையாட்டுத் துறை அதிகாரி ஆகியோருக்கு, இந்தியாவுக்குள் நுழைவதற்கான விசா வழங்கவில்லை என்பதை பிப்ரவரி 18 அன்று இந்திய அதிகாரிகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்தப் பிரிவுக்கு மட்டும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று அந்தஸ்தை ஐ.ஓ.சி ரத்து செய்துள்ளது. 25 மீட்டர் தவிர பிற பிரிவுகளில் வெல்பவர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.

ஏற்கனவே இந்தியா வந்தடைந்துள்ள 61 நாடுகளைச் சேர்ந்த 500 வீரர்களின் நலன்களை கருத்தில்கொண்டு, பிற பிரிவுகளுக்கு அந்த அந்தஸ்து ரத்து செய்யப்படவில்லை என்று ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Hindustan Times

பாகிஸ்தான் குழுவினருக்கு விசா வழங்க இந்திய ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் ஆகியவை கடைசி நேரத்தில் இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

இப்போது ஏற்பட்டுள்ள சூழல், ஒலிம்பிக் சாசனத்தின் அடிப்படைக்கு கொள்கைகளுக்கு, குறிப்பாக பாரபட்சம் காட்டாமல் இருக்க வேண்டும் எனும் கொள்கைக்கு முரணாக இருப்பதாக ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் எந்த நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும், போட்டியை நடத்தும் நாட்டிலிருந்து அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம் - இம்ரான் கான்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :