ஆஸ்திரேலிய தொடர்: முதல் முறையாக கோலி தலைமையில் சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா

கோலி - மேக்ஸ்வெல் படத்தின் காப்புரிமை Getty Images

விராட் கோலி இந்திய அணிக்கு அணித்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது இந்திய அணி.

முன்னதாக மூன்று முறை சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளது இந்திய அணி. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்தியாவில் டி20 தொடரை வென்றுள்ளன. கடைசியாக 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரியாக இந்தியா தொடரை இழந்தது. அதன் பின்னர் தற்போதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தோல்வி கண்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த சுற்றுப்பயணத்தில், டி20 தொடரை 2-0 என வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தியா நிர்ணயித்த 127 ரன்கள் எனும் வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா ஆட்டத்தின் கடைசி பந்தில் சாதித்தது. அப்போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான 14 ரன்களை குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலிய படை. கிளென் மாக்ஸ்வெல் 43 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

பெங்களூரில் நேற்று இரவு நடந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 190 ரன்கள் குவித்தது.

லோகேஷ் ராகுல் 26 பந்துகளில் மூன்று பௌண்டரி நான்கு சிக்ஸர்கள் விளாசி 47 ரன்கள் குவித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் 24 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ரிஷப் பந்த் ஆறு பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்தார். ஆனால் அதன் பின்னர் இணைந்த முன்னாள் கேப்டனும் இந்நாள் கேப்டனும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி 23 பந்துகளில் மூன்று பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் விளாசி 40 ரன்கள் குவித்தார்.

விராட் கோலி 38 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் இரண்டு பௌண்டரிகள் விளாசி 72 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இலக்கை துரத்தத் துவங்கியது. முதல் ஓவரை தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் வீச பௌண்டரியுடன் ரன் கணக்கை துவங்கியது ஆஸ்திரேலிய அணி. ஆனால் மூன்றாவது ஓவரில் ஸ்டாய்னிஸ் விக்கெட்டை சாய்த்தார் சங்கர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் களமிறங்கிய அவர், இறுதி வரை களத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடிதந்தார்.

கிளென் மாக்ஸ்வெல் 55 பந்துகளில் ஒன்பது சிக்ஸர்கள் ஏழு பௌண்டரி விளாசி 113 ரன்கள் குவித்தார்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளும் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு வழங்கப்பட்டன.

முன்னதாக இம்மாத துவக்கத்தில் நியூசிலாந்து மண்ணில் நடந்த டி20 தொடரையும் இந்தியா இழந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: