விராட் கோலி சதமடித்தும் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்க காரணமென்ன?

INDvsAUS படத்தின் காப்புரிமை Robert Cianflone

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா வென்ற நிலையில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் துவங்கியது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலையில் இருந்தது. இப்போட்டியில் தோற்றால் தொடரை இழந்துவிட கூடிய சூழலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தொடரை வெல்வதற்கு இரு அணிகளுக்கும் வாய்ப்பு நீடிக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு ஆரோன் பின்ச் - உஸ்மான் கவாஜா இணை 193 ரன்கள் குவித்தது. ஆரோன் பின்ச் 99 பந்துகளில் 10 பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் உதவியுடன் 93 ரன்கள் எடுத்தார்.

உஸ்மான் கவாஜா 113 பந்துகளில் 11 பௌண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 104 ரன்கள் எடுத்தார். கிளென் மாக்ஸ்வெல் 31 பந்துகளில் மூன்று பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் விளாசி 47 ரன்கள் எடுத்தநிலையில் ரன் அவுட் ஆனார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 31 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் கரே 21 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா, ஜடேஜாவுக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. கேதர் ஜாதவ் இரண்டு ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இந்திய அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அம்பதி ராயுடுவும் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்குபவர் நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமிருக்கும் சூழலில் தொடர்ந்து சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அம்பதி ராயுடுவுக்கு ஓரளவு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில் தொடர்ந்து அவர் குறைவான ரன்களை குவித்து வந்துள்ளார். அம்பதி ராயுடுவின் ஃபார்ம் இந்திய அணிக்கு சற்று தலைவலியாக அமைந்துளளது.

முதல் ஐந்து ஓவர்களுக்குள் 27 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா. இதன் பின்னர் இந்நாள் கேப்டனும் முன்னாள் கேப்டனும் இணைந்து பொறுமையாக விளையாடினர். எனினும் தோனி 42 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த கேதர் ஜாதவ் 39 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

படத்தின் காப்புரிமை Robert Cianflone

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி பொறுப்பாகவும் அதே சமயம் அவசியம் பௌண்டரிக்கு விளாச வேண்டிய பந்துகளை பௌண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை. அவர் 95 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

விராட் கோலி அவுட் ஆனதற்கு பிறகு இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கத்துவங்கியது.

கடந்த போட்டியில் இந்திய அணிக்கு ஆட்டநாயகனாக விளங்கிய விஜய் சங்கர் இப்போட்டியில் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா 31 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 49 ஓவரிலேயே 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விராட் கோலி இப்போட்டியில் தனது 41வது சதத்தை விளாசினார். அவர் சதமடித்தும் இந்தியா தோல்வியடைவது இப்போட்டியைச் சேர்த்து எட்டாவது முறை.

ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன், ஆடம் ஜாம்பா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடக்கவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :