உலககோப்பை 2019: உண்மையில் இந்தியா கோப்பையை வெல்லும் பலமான அணியா?

  • விவேக் ஆனந்த்
  • பிபிசி தமிழ்
தோனி, ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம், Hagen Hopkins

ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்து. உலக கோப்பை நெருங்கும் வேளையில் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்து வருகிறது.

2019 உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்தில், உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. அதற்குச் சான்றாக கடந்த இரு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது இந்திய அணி.

ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்திய அணி பரீட்சார்த்த முறையில் அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. இது இந்திய அணிக்கு எவ்வளவு தூரம் பயன்தரும் என்பது இப்போதைக்கு உடனடியாகச் சொல்ல முடியாது. ஆனால், உண்மையில் இந்திய அணி அசைக்க முடியாத பலத்தோடு இருக்கிறது என்ற தோற்றத்தை கடந்த இரு மாதங்களில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் அசைத்துப் பார்த்திருப்பதை மறுக்க முடியாது.

நேற்று முதலில் பேட் செய்த இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு 359 ரன் இலக்கு நிர்ணயித்தது. அப்போது, இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி அவ்வளவு எளிதில் வென்றுவிடும் என இந்திய ரசிகர்கள் நினைத்துப் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவு.

ஏனெனில் சொந்த மண்ணில் இந்தியா மிகவும் பலம் பொருந்திய அணி. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்தது தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

டிசம்பர் 2012 - ஜனவரி 2013க்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் பாகிஸ்தான் வென்றது. சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

இம்முறை ஆஸ்திரேலியா இந்தியாவில் ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் பேட்டிங்குக்கு சாதகமான மொஹாலி ஆடுகளத்தில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் அபாரமான வெற்றியைச் சுவைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வரலாற்றில் மொஹாலியில் நான்காவது ஒருநாள் போட்டி மிக மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. முதல் முறையாக 350க்கும் மேற்பட்ட இலக்கை துரத்தி வெற்றி கண்டுள்ளது ஆஸ்திரேலியா. டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மிச்சேல் ஸ்டார்க் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பெறாத நிலையிலும் வலுவான இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது ஆஸி.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது அதிகபட்ச ரன் சேஸ் இது. இந்திய அணிக்கு எதிராக எந்த ஒரு அணியும் இதற்கு முன்னதாக 350க்கும் மேற்பட்ட இலக்கை விரட்டி வென்றதில்லை. 12 ஆண்டுகளுக்கு முன்னதாக இதே மொஹாலி மைதானத்தில் பாகிஸ்தான் 322 ரன்களை துரத்தி வென்றது.

பட மூலாதாரம், Hagen Hopkins

''உலக கோப்பை நெருங்கும் வேளையில் சரியான நேரத்தில் ஆஸ்திரேலியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது'' என்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வான்.

நான்காவது ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன?

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. கே எல் ராகுல், ரிஷப் பந்த், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றனர். நட்சத்திர வீரர் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டது. அம்பதி ராயுடு, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ்க்கு பதிலாக அஸ்டான் டர்னர் இடம்பெற்றிருந்தார்.

இந்திய அணியின் துவக்க வீரர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஆரம்பத்திலிருந்து சிறப்பாக விளையாடினார்கள். 31-வது ஓவரில் தான் இந்த இணையை ஆஸ்திரேலியாவால் பிரிக்க முடிந்தது. ரோஹித் ஷர்மா 92 பந்துகளில் ஏழு பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 95 ரன்கள் விளாசியிருந்த நிலையில் ஜை ரிச்சர்ட்சன் பந்தில் வீழ்ந்தார்.

ரோஹித் ஷர்மா அவுட் ஆன அடுத்த ஓவரில் தனது 16-வது சதத்தை நிறைவு செய்தார் ஷிகர் தவான். சதமடித்ததும் தனது ரன் குவிப்பை கூட்டிய அவர் கம்மின்ஸ் பந்துவீச்சில் 143 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் எடுத்த அதிகபட்ச ரன் இது. நேற்றைய தினம் அவர் 18 பந்துகளை பௌண்டரிக்கும் மூன்று பந்துகளை சிக்சருக்கும் விரட்டினார்.

பட மூலாதாரம், Robert Cianflone

அதன் பின்னர் விராட் கோலி 7 ரன்களில் அவுட் ஆக, ரிஷப் பந்த் சிறிது நேரம் அதிரடியாக ஆடினாலும் 36 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் விஜய் ஷங்கர் 15 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. கடைசி ஓவரின் கடைசி பந்தில் பேட் கம்மின்ஸ் பந்தில் பும்ரா சிக்சர் அடித்ததன் மூலம் இந்தியாவின் ஸ்கோர் 358 ரன்களைத் தொட்டது.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஆரோன் பின்சை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். ஷான் மார்ஷ் ஆட்டமிழந்த போது ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.

அதன் பின்னர் உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் இணை சிறப்பாக விளையாடியது. குறிப்பாக கேதர் ஜாதவ் வீசிய 33-வது ஓவரில் 19 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. ஆனால் 34-வது ஓவரின் முதல் பந்தில் கவாஜா பும்ராவிடம் வீழ்ந்தார். அப்போது ஆஸி 204/3 எடுத்திருந்தது.

விரைவாக ரன்கள் சேர்க்கும் திறன் படைத்த மேக்ஸ்வெல் தனது பங்குக்கு 13 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய அஸ்டன் டர்னர் இந்தியா தனது பிடியை இறுக்க விடாமல் தொடர்ந்து பந்துகளை விரட்டினார். ஹேண்ட்ஸ்கோம் 117 ரன்களில் அவுட் ஆனபோதும் டர்னர் நிதானம் காட்டாமல் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

குறிப்பாக 45,46,47 ஓவர்களில் மட்டும் 54ரன்களைச் சேர்த்து ஆஸ்திரேலியா. கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக்கூடிய பும்ரா 46-வது ஓவரில் 16 ரன்களை விட்டுக்கொடுத்தார். டர்னருக்கு துணையாக விளையாடிய அலெக்ஸ் கரே 15 பந்தில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் அது ஆஸ்திரேலிய அணியை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. 48-வது ஓவரிலேயே இலக்கை துரத்தி வென்றது ஆஸ்திரேலியா. டர்னர் 43 பந்துகளில் ஐந்து பௌண்டரி ஆறு சிக்ஸர்கள் உதவியுடன் 84 ரன்கள் குவித்தார்.

பட மூலாதாரம், Robert Cianflone

சரிவை நோக்கி பயணிக்கிறதா இந்தியா?

கடந்த 2015 உலககோப்பைக்குப் பிறகு நான்கு ஒருநாள் தொடர்களை மட்டுமே இந்தியா இழந்துள்ளது. ஆனால், அந்த இழப்புகள் அழுத்தமானவை. 2015-ல் வங்கதேச மண்ணில் 1-2 என தோற்றது. 2015 இறுதியில் தென் ஆப்ரிக்காவிடம் 2-3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்தியா. 2016-ல் ஆஸ்திரேலிய மண்ணில் 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது . அதன் பின்னர் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் 1-2 என தொடரை இழந்தது.

இதற்கிடையில் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடம் இறுதிப்போட்டியில் தோற்றது.

ஆனால் இந்தியா சில குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை அவற்றின் சொந்த மண்ணில் வீழ்த்தியது. 2017-ல் இலங்கையை அதன் சொந்தமண்ணில் 5-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. 2017/18-ல் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது 4 -1 என்ற கணக்கில் வென்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்தியா அங்கே 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் 2-1 என தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து மண்ணில் கிவி படையை 4-1 என வென்றது.

ஆனால் இந்தியா கடைசியாக விளையாடிய 9 சர்வதேச போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றுள்ளது. நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை 2-1 என இழந்தது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் 0-2 என டி20 தொடரை இழந்தது. தற்போது ஒருநாள் போட்டியிலும் அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.

பட மூலாதாரம், Mark Brake - CA

உலக கோப்பைத் தொடரில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது இந்திய அணி. அதற்கு முன்னதாக இந்தியா விளையாடும் சர்வதேச போட்டி வரும் புதன்கிழமை நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டிதான்.

ஏற்கனவே டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், ஒருநாள் தொடரையும் வெல்வதன் மூலம் இழந்த ஃபார்மை மீட்டு புத்துணர்வுடன் உலக கோப்பையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியா விளையாடும். அதே சமயம் தொடர் தோல்விகளில் இருந்து மீள இந்தியாவுக்கும் டெல்லி ஒருநாள் போட்டி மிக முக்கியமானது.

இந்தியா பலமான அணியாக விளங்குகிறதா?

கடைசியாக இந்தியா விளையாடிய சில சர்வதேச போட்டிகள், அந்த அணியிடம் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

விராட் கோலி, பும்ரா ஆகிய வீரர்களைத் தவிர வேறு எந்த வீரரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மகேந்திர சிங் தோனி ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

பட மூலாதாரம், Robert Cianflone

இந்தியாவின் தொடக்க வீரர்கள் இருவரும் வலுவான தொடக்கம் தர தவறியிருந்தாலும் கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடியது இந்திய அணிக்கு சற்று ஆறுதல்.

கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ் இருவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஆனால் நடுவரிசை பலமற்றதாக உள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் நான்காவது பேட்ஸ்மேனுக்கான இடத்திற்கு இதுவரை ராயுடு உள்பட யாரும் நியாயம் செய்யவில்லை. எனினும் சில போட்டிகளில் ராயுடு சிறப்பாக விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. பலமற்ற நிலையற்ற நடுவரிசை கொண்ட அணி உலக கோப்பை போன்ற நெடுந்தொடரில் எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்கும் என்பது கேள்விக்குறியே.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மற்றொரு பிரச்சனை அணிச் சேர்க்கை. இந்தியா ஏகப்பட்ட பரிசோதனைகளை செய்துவிட்டாலும் இதுவரை 11 பேர் கொண்ட நிலையான அணியை கட்டமைக்க முடியவில்லை. மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைச் சேர்ப்பதா அல்லது ஒன்றிரண்டு பௌலிங் ஆல்ரவுண்டருடன் விளையாடுவதா, இரு சுழற்பந்து வீச்சாளர்கள் அவசியமா என்பதை உறுதியாக முடிவு செய்யவில்லை.

ஐந்து அல்லது ஆறாவது நிலையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு பிறகு வருபவர்கள் அதிரடியாகவும் பேட்டிங் செய்வதில்லை, உறுதியாக நிலையான ஆட்டத்தையும் வெளிப்படுத்துவதில்லை என்பதை கடந்த சில போட்டிகள் தெளிவாக காட்டுகின்றன.

தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், கே எல் ராகுல், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், அம்பதி ராயுடு என பலர் தொடர்ந்து இந்திய அணியில் உள்ளே - வெளியே ஆட்டத்தில் இருக்கிறார்கள்.

எதிரணியை பொருத்தும் ஆடுகளத்தை பொருத்தும் யார் விளையாட வேண்டும் என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்வது நல்லதே என்றாலும் தொடர்ச்சியாக விளையாடும் 11 பேர் கொண்ட அணியினை மாற்றுவது என்பது இந்திய அணியின் உத்தியாக இருக்கப் போகிறதா அல்லது அது பலவீனத்தின் அறிகுறியா என்பதை ஜூன் - ஜூலையில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடர் உலகுக்கு காட்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :