ஆஸ்திரேலிய அணியின் வார்னர், ஸ்மித்துக்கு கட்டியணைத்து வரவேற்பு கொடுத்த சக வீரர்கள்

வார்னர், ஸ்மித் படத்தின் காப்புரிமை Getty Images

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடை பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வார்னர், ஸ்மித் சமீபத்தில் துபாயில் சக ஆஸ்திரேலிய வீரர்களை சந்தித்திருக்கின்றனர்.

'' நாங்கள் சந்தித்தப் போது அன்புடன் கட்டியணைத்து பெரும் வரவேற்பு கொடுத்தனர்'' என்கிறார் வார்னர்.

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' அமைப்பு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது.

தடை விதிக்கப்பட்ட பின்னர் "கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் என் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றே நினைத்தேன். "என் நாட்டின் மக்கள் அனைவருக்கும்… நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தாலும், இல்லை என்றாலும், நான் செய்த இந்த காரியத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இது என் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன். என் உயிர் உள்ளவரை இதற்காக வருந்துவேன்" என உணர்ச்சிகரமாக பேசியிருந்தார் டேவிட் வார்னர்.

வார்னர், ஸ்மித் இருவரும் தமக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக சக ஆஸ்திரேலிய வீரர்களை பெவிலியனில் சந்தித்துள்ளனர்.

''இச்சந்திப்பு இரண்டு சகோதரர்கள் வீட்டுக்கு திரும்பி வருவது போன்ற நிகழ்வாக இருந்தது'' என்றார் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

இந்த சந்திப்பு குறித்து வார்னர் பேசும்போது '' உண்மையில் நாங்கள் சக வீரர்களை விட்டு ஓராண்டு விலகியது போல உணராதவாறு அவர்கள் வரவேற்பு இருந்தது. கைகளை விரித்து அன்புடன் தழுவி எங்களை ஏற்றுக்கொண்டார்கள்'' என்றார்.

ஆஸ்திரேலியா தற்போது பாகிஸ்தானுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது . வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள இந்த தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் வார்னர், ஸ்மித் இருவரும் விளையாடமுடியும். ஏனெனில் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீங்கவிருக்கிறது.

ஆனால் அவர்கள் இருவருமே முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வருவதால் ஆஸ்திரேலிய அணியில் விளையாடாமல் ஐபிஎல்லில் விளையாட முடிவெடுத்துள்ளனர்.

தென்னாப்ரிக்க மண்ணில் கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேமரூன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார். கேமரூன் செய்தது வார்னர் மற்றும் அணித்தலைவராக இருந்த ஸ்டீவ் ஸ்மித் கண்ணசைவிலே நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

மூன்று பேருக்கும் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

கேமரூன் பேன்கிராஃப்ட் ஒன்பது மாத தடை முடிந்து கிரிக்கெட் விளையாட துவங்கிவிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்மித்துக்கும் பேன்கிராஃப்ட்டுக்கும் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவதற்கு குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வார்னர் எதிர்வரும் காலத்தில் எந்தவொரு அணியையும் வழிநடத்துவதற்கு அவரை கருத்தில் கொள்ளமாட்டோம் என 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நிர்வாகம் கூறியுள்ளது.

''ஆஸ்திரேலியர்களை எப்படி பெருமடையச் செய்வது என்பது குறித்து பேசினோம். சிறந்த மனிதர்களை பற்றியும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசினோம்'' என்கிறார் லாங்கர்.

ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியை அதன் சொந்தமண்ணில் 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. முன்னதாக இந்திய மண்ணில் டி20 தொடரையும் வென்றது.

கடந்த 20 ஆண்டுகளில் நடந்த ஐந்து உலக கோப்பை போட்டியில் நான்கு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா.

ஜூன் மாதம் இங்கிலாந்தில் உலககோப்பை நடக்கவுள்ள நிலையில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா இந்தியாவை வென்ற தெம்புடன் நடப்பு சாம்பியன்ஸ் டிராஃபி சாம்பியன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஸ்மித், வார்னர் இருவரும் உலக கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்